Dailyhunt
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?

வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?

ABP Nadu 2 weeks ago

மெரிக்க நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் எல்லாம் இந்தியர்கள் தான் இருக்கின்றனர். டெக் நிறுவனங்கள் என மட்டுமில்லை தற்போது அமெரிக்க அரசியலிலும் இந்தியர்கள் பங்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் பங்கும் அதிகரித்துள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அமெரிக்காவில் எம்பி மற்றும் அரசு பதவிகளில் இருக்கும் நிலையில் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனை ஆளும் வாய்ப்பு தமிழ்நாட்டு பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்த ரினி சம்பத் என்பவர் போட்டியிட இருக்கிறார். அந்த வகையில் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ரினி சம்பத்திற்கு தற்போது 31 வயது ஆகிறது. இவருக்கு 7 வயதாகும் போதே பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டனர். தன்னுடைய ஏழாவது வயதில் இவர் அமெரிக்காவில் குடியிருக்கிறார்.

மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 4500 வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இவர் பெற்றிருக்கிறார். வழக்கமாக வேட்பாளராக தேர்வாவதற்கான கையெழுத்துகளின் எண்ணிக்கையை விட இவர் இரண்டு மடங்கு அதிகமான கையெழுத்துகளை பெற்று சமர்ப்பித்து இருப்பதால் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் இவர் போட்டியிடுகிறார். வாஷிங்டன் டிசியில் வரும் ஜூன் 16ஆம் தேதி முதன்மை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ரினி சம்பத் வெற்றி பெறும் பட்சத்தில் நவம்பர் மாதத்தில் நடைபெறும் மேயர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். நகர மக்களின் தேவைகளை நிறைவேற்ற போவதாக அறிவித்திருக்கும் ரினி சம்பத் அமெரிக்க பொருளாதாரத்தில் தெற்காசிய சமூகம் முக்கிய பங்களித்திருக்கிறது. இருந்தாலும், அமெரிக்க அரசாங்கத்தில் தெற்காசிய சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது என கூறுகிறார்.

இந்த தேர்தலில் தான் போட்டியிடுவது தெற்காசிய நாடுகளை சேர்ந்த அனைவருக்குமே மிகப்பெரிய ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது, சீரான சாலைகள் , குடிநீர் குழாய்கள், வாழ்க்கை செலவினங்களை குறைப்பது உள்ளிட்டவற்றுக்கே தான் முக்கியத்துவம் அளிக்க போகிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்கும் இவர் மாணவர் உரிமைகளுக்காகவும் பல்கலைக்கழக வளாகங்களின் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்ததில் மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். 1975ஆம் ஆண்டில் இருந்தே வாஷிங்டன் டிசி ஜனநாயக கட்சி வசம் தான் உள்ளது. எனவே இந்த தேர்தலில் ரினி சம்பத் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Author : நாகராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu