Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேடிக்கை பார்க்காதீர்கள்  - தென்காசி சாதி வெறித் தாக்குதலின் பின்னணி என்ன? -  புட்டு புட்டு வைத்த  CPM

வேடிக்கை பார்க்காதீர்கள் - தென்காசி சாதி வெறித் தாக்குதலின் பின்னணி என்ன? - புட்டு புட்டு வைத்த CPM

ABP Nadu 1 week ago

தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்தில் சாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய வன்கொடுமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மே 29 ம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமகனின் உறவினர்கள் சிலர் மே 28 அன்று இரவு 9 மணிக்கு மேல் மணமக்களை வாழ்த்தி ப்ளக்ஸ் பேனர் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பிளெக்ஸ் அமைத்துக் கொண்டிருந்த இளைஞர்களோடு “ பிளெக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது" என்று தகராறு செய்திருக்கிறார். இதுகுறித்து ஆலங்குளம் காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது.

இதே கிராமத்தில், கடந்த 5 மாதங்களில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைகள் நடந்துள்ளதாக அறியமுடிகிறது. இவைகள் அனைத்தும் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தாலும், இதில் ஒரு பிரச்சனையில் கூட காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து முறையில் சமாதானம் பேசி அனுப்பிவைத்ததாகவும் மாதா கோவில் தெருவைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள். மே 28ம் தேதி நடைபெற்ற வன்கொடுமையிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் வழக்கமான முறையில் சமாதானம் பேசி அப்போதைக்கு பிரச்சனையை முடித்துள்ளது.

இந்நிலையில், மே 29 ஆம் தேதி மாலையில் திருமண வீட்டில் உறவினர்களும் நண்பர்களும் மணவிழா விருந்தில் பங்கேற்பதற்காக கூடியிருந்துள்ளனர். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் 9 பேர் அடையாளம் தெரியாத படி துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு கையில் பயங்கர ஆயுதங்களுடன் வெறிக்கூச்சல் போட்டவாறே வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்கள் கூடியிருந்தவர்கள் மீது கண்மண் தெரியாமல் வெட்டரிவாளை வீசி கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் (49) த/பெ ஞானமுத்து, சந்தோஷ் குமார் (21) த/பெ கணேசன், அருள்மாறன் (23) த/பெ ரமேஷ், ராயப்பன் (18) த/பெ காபிரியேல், ராம்குமார் (20) த/பெ சேகர் மற்றும் திருமண வீட்டில் மேளம் அடிப்பதற்காக வந்திருந்த மேளக் கலைஞர் மாடசாமி (19) த/பெ பரமசிவம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி

திருமண வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாத சாதிய மனநிலை இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின்புலமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற சாதிய ஆதிக்க வன்கொடுமை தாக்குதல்களும், படுகொலைகளும், பட்டியலின மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதிய கண்ணோட்டத்தோடு நடைபெறுகிற இத்தாக்குதல்கள் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், வழக்குகளை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து ரீதியில் சமாதானமாகப் பேசி காவல் நிலையத்திலேயே முடித்து வைப்பதால்தான் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்ந்து பகிரங்கமாக நடைபெறுகின்றன. எனவே, உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், வழக்குகளை பதிவு செய்யாமலும் மிக அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த சாதி வெறித் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும், உள்ளூரில் இவர்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் மீதும் எஸ்.சி. / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டித்திட வேண்டுமெனவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான தீருதவியை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதியான பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.கரன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அதேபோல், தென்காசி மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி உள்ளிட்டோர் நெட்டூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நீதி கிடைக்கும் போராட்டத்தில் தாங்கள் துணை நிற்போம் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu