மது அருந்திவிட்டு தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் பற்றி பரப்பப்பட்ட வீடியோவுக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சி சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் விஜய் சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சன்.ராமநாதனை விட சுமார் 16,955 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தமாக விஜய் சரவணன் 87,705 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் அவர் மது அருந்தி விட்டு நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “ தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பொய்ப் பிரச்சாரத்துக்கும், வாட்ஸ்அப் மூலம் பரப்பப்படும் போலி அவதூறுகளுக்கும் கண்டனம் தெரிவிக்கின்றேன். நேற்று காலை முதல் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக மக்களிடையே வீண் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. 'மாற்றத்திற்கான சரியான தேர்வு தமிழக வெற்றிக் கழகம் அல்ல' என்ற ஒரு தவறான பிம்பத்தை மக்கள் மனதில் விதைக்க சில அரசியல் எதிரிகள் மிகவும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக. 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வின் வீடியோவை தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை நான் கொண்டாடியதாகச் சித்தரித்து பரப்பி வருகின்றனர். மேலும், சில சமூக வலைத்தளப் பிரபலங்களுக்கு அடையாளம் தெரியாத புதிய வாட்ஸ்அப் எண்களில் இருந்து இந்த பழைய வீடியோவை அனுப்பி, இந்த அவதூறைப் பரப்பச் சொல்லி திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றைய தினத்தின் உண்மை நிலை என்ன என்பது ஊடகங்களுக்கும், தஞ்சை மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அன்று மாலை அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பிறகு, நான் நேரடியாகச் சென்றது என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தஞ்சாவூர் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கத்தான். அதன்பின், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

