Dailyhunt
விசில் புரட்சி வெடிக்குமா?  திருச்சி பிரச்சாரத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்

விசில் புரட்சி வெடிக்குமா? திருச்சி பிரச்சாரத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்

ABP Nadu 1 week ago

ஞ்சாவூர்: இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல். உங்களுக்கான தேர்தல். எனவே விசில் சின்னத்தில் உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பிரசார வாகனத்தில் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்து செல்லும் விஜயை கண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:

கேஸ் தட்டுப்பாட்டால் எவ்வளவு பிரச்சனைகள். எவ்வளவு டீக்கடைகள், ஹோட்டல் மூடிட்டாங்க. மத்திய, மாநில அரசுகள் உஷாராக இருந்து இருந்தால் கேஸ் தட்டுப்பாடை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிருக்கலாம். இவங்க ரெண்டு பேரும்தான் இதுக்கு காரணம். ஸ்டாலின் சார் தனக்கோ, தன் வீட்டிற்கோ பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து போயிட்டு வருவார். இந்த கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு கொஞ்சம் டெல்லிக்கு பறந்து போயிட்டு வரலாமே? கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபாய், கரும்புக்கு ஆதார விலையா 4,000 ரூபாய், ரேஷன்ல சர்க்கரை ஒரு கிலோ எக்ஸ்ட்ரா தரப்படும், ரேஷன்ல உளுந்தம்பருப்பு கொடுக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்வோம்னு என்று சொன்னது எல்லாம் என்னாச்சு.

எதெல்லாம் அவரால செய்ய முடியாதோ, அதையெல்லாம் பொய் வாக்குறுதிகளா கொடுத்து ஏமாத்துறதுதான் வேலையே. இப்ப அடுத்த செட் ஆஃப் பொய் வாக்குறுதிகளை ரெடி பண்ணிட்டாரு. அவரை போல் நாங்க பொய் வாக்குறுதிகள் எல்லாம் கொடுக்க மாட்டோம். 6 சிலிண்டர்கள் தாய்மார்களுக்கு கட்டணமில்லாமல், சொன்ன மாதிரியே நிறைவேற்றுவோம்.

திருமணம் முடிந்து செல்லும் தங்கைகளுக்கு ஒரு பவுன் தங்கமும், பட்டு சேலையும் சொன்ன மாதிரியே கொடுப்போம். 60 வயசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,500 ரூபாய் சொன்ன மாதிரியே கொடுப்போம். என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள் எல்லாருமே தமிழ்நாட்டுல எந்த மூலையில இருந்து எங்க வேணாலும், தமிழ்நாட்டுக்குள்ள எந்த பஸ்ல வேணாலும் இலவசமாக செல்லலாம். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் போக்குவரத்து போன்ற அடிப்படை விஷயங்களில்தான் எங்களுடைய முதல் கவனம் இருக்கும். பள்ளிகளில் கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

திருச்சியில் உள்ள அமைச்சர் நகராட்சித் துறையில வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமா வாங்கிக்கிட்டு, தகுதியானவங்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்காத அளவுக்கு செய்துள்ளார். உங்களின் இந்த வேலைவாய்ப்பைப் பறிச்ச இந்த ஸ்டாலின் சார் சர்க்காரை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா? உங்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லாத, சட்ட ஒழுங்கு சரியில்லாத இந்த தீய சக்தி திமுக அரசை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா? நகராட்சித் துறையில மட்டுமே 1,000 கோடிக்கு மேல ஊழல்னா, அப்ப மத்த துறையில எல்லாம் கணக்கு போட்டுப் பாருங்க. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தேன், 'ஸ்டாலின் சார் டாக்ஸ்' (SST) அப்படின்னு... ஜிஎஸ்டி மாதிரி எஸ்எஸ்டி. அதைப்பத்தி அவங்க வாயைத் திறக்கலைங்க. என்னவோ அவங்களே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்குது.

கல்லூரி உதவி பேராசிரியர்கள் பதவியில் 2,000 பேருக்கு மேல அந்த வேலை கொடுப்போம்னு சொன்னாங்க. வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்தார்கள். இதெல்லாம் வெறும் அறிவிப்புகள் மட்டும்தான். காலி பணியிடங்களை நிரப்புவோம்னு சொன்னாங்க, அதுவும் என்ன ஆச்சுன்னு தெரியல. 100 சதவீதம் ஒரு நியாயமான ஒரு ஆட்சியை நாம கொடுப்போம். 100 சதவீதம் நீங்க இந்த விஜயை நம்பலாம்ங்க. நீங்க நம்புறீங்கன்னு எனக்கு தெரியும். அதனாலதான் என்னுடைய சொந்த பந்தங்களாகிய உங்ககிட்ட, எனக்கு அந்த உரிமை இருக்கு. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு உங்ககிட்ட கேட்காம வேற யார்கிட்ட நான் கேட்பேன்? எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.

இந்த தேர்தலில் திமுக ஏலத்தில எடுத்திருக்கிற கல்லாப்பெட்டி கூட்டணியோட சேர்ந்து, அப்புறம் நாம ஏற்கனவே சொன்னோமே அந்த மற்றும் பலர்' கூட்டணின்னு ஒன்னு இருக்குல்ல? அவங்களோடும் கள்ள கூட்டணி போட்டுக்கிட்டு உங்கள் விஜயை எப்படியெல்லாம் எதிர்க்கிறாங்கன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியமில்லை. கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சின்னு பலர் சொல்றது மாதிரி, நம்ம கடைசி படமான 'ஜனநாயகம்'. இந்த தேர்தல்ல நமக்கு மிகப்பெரிய ஆயுதமா மாறிடுமோன்னு ஒரு கூட்டு சூழ்ச்சி, அதோட இன்னும் பல பல சூழ்ச்சிகள். அதனால உங்க விஜய் கேட்கிறேன்... உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துதான் நீதி வேண்டும்.

திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. ரெண்டு பேரும் வேற வேற கூட்டணி எல்லாம் கிடையாது, ஒரே கூட்டணிதான். ரெண்டு பேரையும் நம்பாதீங்க, இந்த தேர்தலில் டிவிகேக்கு உங்க ஆதரவை கொடுங்க. இன்னும் பல வருஷத்துக்கு தமிழ்நாடு சூப்பரா இருக்கும். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கிட்டு, முதல் ஆளா பூத்துல போய் நின்னு, விசில் சின்னத்துக்கு நேரா இருக்கிற பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க!
இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல். உங்களுக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு. ஒருநாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன். நாலுமுனை போட்டி, நாற்பது முனை போட்டின்னு எத்தனை முனை போட்டின்னு வந்தாலும், இங்க இருமுனை போட்டி மட்டும்தான். டிவிகே, திமுகவுக்கு மட்டுமே போட்டி.

மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? அவ்வளவுதான் இந்த தேர்தலே! அதனால விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலா இருக்க வேண்டும். நம் வேட்பாளர்களா அவங்க வேற, நான் வேறன்னு தயவுசெஞ்சு பிரிச்சு பார்த்துறாதீங்க. அவங்க எல்லாரையும் வெற்றி பெற செய்யணும்னு உங்க எல்லாரையும் தாழ்மையுடன் நான் கேட்டுக்கிறேன். கான்பிடென்ட்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

பாட்டு பாடி கவர்ந்த விஜய்

பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் ஓட்டு கேட்டு பாட்டும் பாடினார். அவர் பாடிய பாட்டு...

நான் தன்னந்தனி ஆளு... நீ ஏளனமா பாரு... கொஞ்சம் நவுந்தேன்னா நான்...இங்க எட்டு கோடி பேரு! மெரலப்போகுது ஸ்டேட்டு... எங்க விசில் சத்தம் கேட்டு... நல்லவங்க வாழ... நீ விசிலுக்கடி ஓட்டு! கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருது, அதை இறுக்கி பிடிச்சு ஒரு வரலாறு எழுது. உங்க விஜய் நான் வரேன்... விசில் அடிக்க ரெடியா? . இவ்வாறு பாடினார். இதை விஜய் பாடி முடித்ததும் விசில் சத்தம் பறந்தது.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu