Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

ABP Nadu 2 weeks ago

ஞ்சாவூர்: தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ப. நித்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் ஆகியோர், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உர விலையை உயர்வைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறோம் என்றனர்.

இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்து, அலுவலகம் முன் கோஷங்கள் எழுப்பினர். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் விநியோகம் செய்யப்பட்டாலும், இடையில் மின் வெட்டு செய்யப்படுகிறது. மேலும், மும்முனை மின்சாரத்திலிருந்து இரு முனை மின்சாரம் மாற்றப்படும்போது சுமார் அரை மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே விவசாயிகளை பாதிக்காதவாறு மும்முனை மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. பல ஆண்டுகளாக பயிர்க்கடன்களை விவசாயிகள் செலுத்த இயலாத நிலையில், ஓராண்டுக்கு முன்பு மட்டும் வாங்கிய கடனுக்கு தள்ளுபடி என அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி 5 ஏக்கர் வரை உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

புனல்வாசல் பஞ்சாபிகேஷன்: முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காலத்தில் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பெரமூர் ஆர். அறிவழகன்: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. கடந்த மாத கூட்டத்தில் நிறைவேற்றப்படாத உத்தரவு குறித்து ஆணையத் தலைவரும் எதுவும் கேட்பதில்லை. இந்த உத்தரவை கர்நாடக அரசு ஒரு முறை கூட பின்பற்றவில்லை. எதற்காக இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும். இதனால் எவ்வித பலனும் இல்லை.

வடக்கூர் கே. தவச்செல்வன்: வேளாண் விரிவாக்க மையங்களில் குறுவை சாகுபடிக்கான விதை நெல் மானிய விலையில் கிடைப்பதில்லை. இது குறித்து அலுவலர்களிடம் கேட்டால் மானியம் குறித்து அறிவிப்பு வரவில்லை என்றும், வந்தவுடன் பெற்றுக் கொள்ளுமாறும் கூறுகின்றனர். மூன்று மாதங்கள் கழித்து வரும் மானியத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே உடனடியாக மானியத்தை அறிவித்து வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu