Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 7 மேம்பாலங்கள். வார இறுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! டி.ஐ.ஜி. அதிரடி ஆலோசனை

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 7 மேம்பாலங்கள். வார இறுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! டி.ஐ.ஜி. அதிரடி ஆலோசனை

ABP Nadu 2 weeks ago

விழுப்புரம்: சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நகாய் அதிகாரிகளுடன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு ஆலோசனை நடத்தினார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் மாவட்டம் ஓங்கூரில் தொடங்கி, அரசூர் அடுத்த சித்தானங்கூர் வரை சுமார் 75 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை நகாய் அதிகாரிகள் கண்டறிந்து, விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

7 இடங்களில் மேம்பாலப் பணிகள்

அதன்படி, திண்டிவனம் அடுத்த தென்பசியார், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே மற்றும் முண்டியம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் ரூ.72 கோடி மதிப்பிலும், பாப்பனப்பட்டில் ரூ.22 கோடி மதிப்பிலும், விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் ரூ.27 கோடி மதிப்பிலும், இருவேல்பட்டு மற்றும் அரசூர் கூட்ரோட்டில் ரூ.49 கோடி மதிப்பிலும் மேம்பாலங்கள் அமைக்க நகாய் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றன.

மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடங்களில் சாலையின் ஒரு பகுதி பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், வாகனங்கள் செல்லும் பாதை குறுகியுள்ளது. இதனால், குறிப்பாக வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வார இறுதி நாட்களில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.

இன்ச் இன்ச்சாக நகரும் வாகனங்கள்

வார இறுதி நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதும் வழக்கம். இதனால் மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

பல இடங்களில் வாகனங்கள் இன்ச் இன்ச்சாக நகரும் நிலை ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பயண நேரமும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

டி.ஐ.ஜி. ஆலோசனை

இந்த நிலையில், மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், நகாய் திட்ட இயக்குநர்கள் விழுப்புரம் சையது அமானுல்லா, செங்கல்பட்டு சைதன்யா மற்றும் எஸ்.பி. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக எந்த நேரத்தில் அதிக அளவு வாகனங்கள் செல்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்தை சீராக இயக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நகாய் அதிகாரிகளிடம் டி.ஐ.ஜி. கேட்டறிந்தார்.

அரசூர் கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்தக்கூடாது

ஆலோசனையில், அரசூர் கூட்ரோட்டில் சாலையின் நடுவில் அல்லது போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக சாலையோரத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசூர் கூட்ரோட்டில் தற்போது உள்ள வேகத்தடையை அகற்றினால் வாகனங்கள் தடையின்றி சீராக செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல்

விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக அதிக போக்குவரத்து ஏற்படும் நேரங்களில் வாகனங்களை மாற்று வழிகளில் திருப்பி விடுவதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் நெரிசலை குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் நடைபாதை கடைகளாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் நடைபாதை கடைகளை அகற்ற நகாய் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மேம்பாலப் பணிகள் நீண்ட காலம் நடைபெறுவதால் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன் மூலம் வார இறுதி நாட்களில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu