Dailyhunt
யார் அந்த நபர்? - திருச்சியில் விஜய்யின் அரசியல் நகர்வுகள்... பின்னணி என்ன?

யார் அந்த நபர்? - திருச்சியில் விஜய்யின் அரசியல் நகர்வுகள்... பின்னணி என்ன?

ABP Nadu 1 week ago

ஞ்சாவூர்: யார் அவர்? விஜய் டிக் செய்ய போவது யாரை என்பதுதான் தற்போது திருச்சி மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

என்ன கேள்வி?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதியிலும் போட்டியிட்டார். தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து, விஜய்யின் தவெக அரியணை ஏற உற்சாகத்துடன் தயாராகி வருகிறது. ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவு குறித்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேவேளையில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே எம்எல்ஏவாக இருக்க முடியும் என்பதால், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக செயல்பட அவர் திட்டமிட்டுள்ளார். பெரம்பூர் சென்னையில் இருப்பதால், தொகுதி பணிகளை சிரமம் இல்லாமல் நேரில் சென்று கவனிக்க முடியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரு வாரங்களுக்குள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதனால் வரும் 18ம் தேதிக்குள் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆட்சியமைக்க போதிய எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவு கேட்கப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே திருச்சி கிழக்கில் மீண்டும் வெற்றி பெற வேண்டியது தவெகவுக்கு மிகவும் அவசியமானதாகும்.

இந்த நிலையில், தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் கு.ப.கிருஷ்ணனை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரான இவர், தவெகவில் இணைந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் 2,739 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இதனால் கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைக்க விஜய் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று பட்டினம்பாக்கம் கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேபோல, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிறுத்துமாறு நிர்வாகிகள் சார்பில் விஜய்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் உலா வருகிறது.

சகாயத்தை நிறுத்தி வெற்றி பெற்று விட்டால், திமுக ஆட்சியில் முக்கிய பிரச்னையாக இருந்த கனிம வள கொள்ளையைத் தடுக்கத் தனித்துறையை உருவாக்கலாம் என்றும் விஜய்க்கு யோசனைக்கு வழங்கியிருப்பதாக தவெகவினர் தெரிவிக்கின்றனர். திருச்சி கிழக்கில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கிறிஸ்துவர் என்பதால், அதே மதத்தைச் சேர்ந்த சகாயத்தை நிறுத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படி இருந்தாலும் திருச்சி கிழக்கு தொகுதி என்பது இப்போது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. மீண்டும் தேர்தல் வந்து சகாயம் ஜெயித்தால் அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்படலாம் என்ற தகவல்களும் உலா வந்தபடி உள்ளது. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி மீண்டும் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu