Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பெரியாரை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டு கபட நாடகம்!" - விசிக மீது அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் பாயும் பரபரப்பு பேட்டி!

"பெரியாரை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டு கபட நாடகம்!" - விசிக மீது அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் பாயும் பரபரப்பு பேட்டி!

APC News Tamil 2 weeks ago

மிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல மானியக் கோரிக்கைக் கொள்கைக் குறிப்பில் தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பண்டிதர் ஜவகர்லால் நேரு ஆகிய தலைவர்களின் பெயர்கள் விடுபட்ட விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் அரசைக் காப்பாற்றும் வகையில் அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவது கண்டனத்திற்குரியது என்றும், தற்போதைய அரசு பாஜகவின் பின்னணியில் செயல்படும் இரட்டை வேட அரசு என்றும் தமிழக அரசியல் விமர்சகரும் திராவிட சிந்தனையாளருமான வல்லம் பஷீர் குற்றம் சாட்டியுள்ளார்.

வகுப்புவாரி இடஒதுக்கீடும் தந்தை பெரியாரின் வரலாறும்

வகுப்புவாரி இடஒதுக்கீட்டுப் போராட்டங்களுக்காகவே தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறித் தனி இயக்கம் காண வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். முத்தையா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி, அன்றைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘முத்தையா’ என்று பெயரிடுமாறு பிரகடனம் செய்தவர் பெரியார்.

அப்படிப்பட்ட நெடிய வரலாறு கொண்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு குறித்த 1951-ஆம் ஆண்டு வரலாற்றுச் சட்டத் திருத்தம் தொடர்பான கொள்கைக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர் மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை முற்றாக விடுத்துவிட்டு, இந்த அரசு பெரியாரைக் கொள்கை வழிகாட்டி என்று சொல்வது கபட நாடகம் ஆகும். பெரியாரை வெறும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்டு கொள்கை பேசுவது போல் இந்த அரசு நாடகமாடுகிறது என்று திராவிட சிந்தனையாளர் வல்லம் பஷீர் சாடினார்.

விசிக சிந்தனை செல்வனுக்கு வல்லம் பஷீர் கேள்வி

கொள்கைக் குறிப்பில் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்றும், புதியவர்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம் என்றும் விசிக மாநிலப் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் மென்மையான அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரிகளைக் கண்டிப்பது போல் அரசையும் அதன் தலைமையையும் வருடிச் கொடுக்கும் வேலையை அவர் செய்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. தலைமைச் செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகளை நியமித்ததும், அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்ததும் இந்த அரசுதான். ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் சொற்படிதான் இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு இதுவே சான்றாக அமைகிறது. விசிகவின் தயவும் ஆதரவுமே அரசின் பக்கபலமாக இருக்கும் சூழலில், ஒரு மந்திரி பதவிக்காக பெரியாரையும் அம்பேத்கரையும் மறந்துவிட்டு அரசைக் காப்பாற்ற நினைப்பது கொள்கைத் துரோகமாகும் என்றும் விமர்சித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இழைக்கப்படும் அநீதி

சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, நடைமுறையில் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு சார்ந்த விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதைத் தட்டிக் கேட்காமல் அமைதி காக்கும் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் துரோகம் இழைக்கிறார்கள்.

இரட்டை வேட அரசு எனச் சாடல்

சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றுவதும், மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டதும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பயந்து நடுங்குவதும் இந்த அரசின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இயற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்கும் அதிகாரிகளையும், அதை வேடிக்கை பார்க்கும் சங்கிகளின் ஆதரவு பெற்ற அமைச்சர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது என அரசியல் விமர்சகர் வல்லம் பஷீர் தனது பேட்டியில் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil