Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

APC News Tamil 1 month ago

வெற்றிச்செல்வன்“இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற வேண்டும்" என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் மேடைதோறும் பேசி வருகிறார்.

வரலாறு மட்டுமின்றி சமூக, பொருளாதாரத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு, ஏன், இந்திய ஒன்றிய அரசுக்குமே முன்னோடியாக இருந்து வருகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களையும் சீரிய முறையில் வழங்கிக் கொண்டிருக்கும் நல்லரசாக, தமிழ்நாடு அரசு விளங்குகிறது. கல்வி மருத்துவம் பாலினச் சமத்துவம், முதியோா் நலன் எனப் பல்வேறு துறைகளிலும் தொலைநோக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழர் வாழ்வு மேம்பாடு அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பெண்மைவெல்க!

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 14.9 இலட்சம் பெண் பணியாளர்களில் 6.3 இலட்சம் பேர் (அதாவது 42%) தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள் என்று ஒன்றிய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் தொழிற்சாலைகளுக்கான ஆண்டுக் கணக்கெடுப்பு (Annual Survey of Industries, 2021-22) கூறுகிறது.

2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயணத் திட்டம் பெண்கள் பணிபுரிவதற்கான சூழலை இலகுவாக்கியது. இத்திட்டத்தின் மூலம் போக்குவரத்திற்கான செலவு என்பது சேமிப்பாகக் கையில் சேருவதால் பெண்களின் பொருளாதார நிலை உயர்கிறது. பணிக்குச் செல்லாத பெண்கள்கூட தங்களது பயணச் செலவினங்களுக்காக ஆண்களைச் சாராமல் இருப்பதன்மூலம் அவர்களது சுயமரியாதை காப்பாற்றப்படுகிறது.

பெண்களுக்கான இலவசப் பயணத்திட்டத்தை 2023 ஆம் ஆண்டு ஆண்டு கர்நாடக அரசும், 2025ஆம் ஆண்டு ஆந்திர அரசும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களது பொருளாதாரப் படிநிலையை உயர்த்தும் வகையிலும் 2021ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். வேலைக்குச் செல்லாத பெண்கள் தங்களுடைய சின்னஞ்சிறிய செலவுகளுக்குக்கூட வீட்டின் ஆண்களைச் சார்ந்து நிற்கும் நிலையில், அவர்களது உழைப்பினைப் போற்றும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே இருபது இலட்சம் மகளிர் இதன்மூலம் பயன் பெறுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மகளிர் நலன்சார்ந்து முன்னெடுத்த மற்றொரு நலத்திட்டம், அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 365 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும்தான் (அரசாணை (நிலை) எண். 84, மனிதவள மேலாண்மைத் துறை, நாள்.23.08.2021). இவ்விடுப்பு பின்னர் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படி அமைந்த வாாியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவா்களுக்கும் விாிவுபடுத்தப்பட்டது.

பிரிட்டன் போன்ற வெகுசில நாடுகளே 52 வாரங்கள் அல்லது 365 நாள்கள் மகப்பேறு விடுப்பாக வழங்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இச்செயல்பாடு மகளிர் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல். அதே நேரம் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பாக வழங்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே பெண்களுக்கான சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள்மூலமாக அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் தமிழ்நாடு எப்பொழுதுமே முன்னணியில் உள்ளது. 1921இல் பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததாகட்டும், 1989இல் சொத்துரிமை அளித்ததாகட்டும், பெண்ணுரிமை சார்ந்த முன்னெடுப்புகள் இங்கிருந்துதான் தொடங்கின. அது இன்றளவிலும் தொடர்கிறது என்பதற்கு மேற்காண் செயல்பாடுகளே சான்று. அறிவைவிரிவுசெய்!

நாட்டிலுள்ள இளைய தலைமுறையினரை அவையத்து முந்தியிருப்பச் செய்வது பெற்றோர் கடமை மட்டுமல்ல, அஃது ஓர் அரசின் கடமையும்கூட. கல்வி கற்பதில் உள்ள இடர்ப் பாடுகளைக் களைவதிலும், கல்வியை அனை வருக்கும் கொண்டுசேர்ப்பதிலும் தமிழ்நாடு எப்போதுமே முன்னோடி மாநிலம்தான். பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு கொண்டு வந்தபோது அத்திட்டம் ஒரு விதையாக இம்மண்ணில் விழுந்தது. அவ்விதை இன்று ஆல்போல் வளர்ந்து காலை உணவுத் திட்டம் வரையிலும் தனது விழுதுகளைப் பரப்பியிருக்கிறது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலமாக, நாள் தோறும் 20 இலட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின்மூலம் மாணவர் கவனிக்கும் திறன் அதிகரித்தல், வருகையில் முன்னேற்றம், தாமதமாக வருவது குறைதல் உள்ளிட்ட பல நன்மைகள் விளைந்துள்ளதாக மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

நிதி ஆயோக் அமைப்பின் 2021-22-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, உயர்கல்வி விகிதத்தில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி நிலையங்களில் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இத்தகைய வளர்ச்சியை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளன. இலவசப்பேருந்து தொடங்கி, சீருடை, காலணி, மிதிவண்டி என்று மாணவர்களின் கல்விச் சூழலுக்குத் தேவையான அத்தனை திட்டங்களும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இன்று உயர்கல்வியைத் தொடா்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் ஐந்து கடந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

கல்லூரிக் கனவு திட்டம் பள்ளிமாணவர்கள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்க.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் – கல்லூரிப் படிப்பின்போது பொருளாதாரச் சுமையைத் தவிர்க்க

சிகரம் தொடு திட்டம் – கிராமப்புற மாணவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்க.

நான் முதல்வன் திட்டம் – இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க.

மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திசைதோறும் திராவிடம் மற்றும் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலமாக, தமிழில் உள்ள இலக்கியங்கள் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பிற மொழிகளுக்கும், பிற மொழியில் உள்ள சிறந்த இலக்கியங்கள் தமிழ்மொழிக்கும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நூற்றாண்டு கண்ட ஆளுமைகளின் படைப்புகள் பாடநூல் கழகத்தின்மூலம் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இது போன்ற திட்டங்கள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று துணிந்து சொல்லலாம்.

உலகம்உண்ணஉண்!

தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளின் மூலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே அனைவருக்குமான பொது விநியோகத்திட்டம் (Universal PDS) நாட்டில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெற இயலாத நிலை இருந்து வந்தது. மேலும் மாற்றுத் திறனாளிகளும் இதே சூழ்நிலையால் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் 65 வயதான முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர் திட்டம்' கடந்த ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் 20.4 இலட்சம் மூத்த குடிமக்களும், 1.3 இலட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து, தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர அவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கவும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கவும் இத்திட்டம் துணைநிற்கிறது.

பிரிவில்லைஎங்கும்பேதமில்லை!

‘இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறை செயல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், தாழ்த்தப்பட்ட சாதியினரும், பழங்குடியினத்தவரும் மக்கள் பிரதிநிதிகள் ஆவதோ, உயர்கல்வி பெறுவதோ, அரசாங்க வேலைவாய்ப்பு பெறுவதோ இவ்வளவு விரைவாக நடந்திருக்க சாத்தியமில்லை’ என்கிறாா் பிரெஞ்சுபொருளாதார நிபுணா் தாமஸ் பிக்கெட்டி, கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டு வருவதில் ஏற்பட்ட தடையை எதிா்த்து, முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரக் காரணமாக இருந்த மாநிலம் தமிழ்நாடு, பின்தங்கிய வகுப்பினர் அனைவருக்குமான 69% இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டின் சமூகநீதிச் சாதனைகளில் ஒன்று. அந்த வரலாறு இன்றளவும் தொடா்கிறது. சமூக பொருளாதாரப் படிநிலைகளில் ஏற்றம் பெற்றபோதிலும் பண்பாட்டுப் படிநிலையில் ஜாதி இழிவு காரணமாக மறுக்கப்பட்ட உரிமைகள் தமிழ் நாடு அரசால் மீட்கப்பட்டுள்ளன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற போராட்டம் தந்தை பெரியாரின் காலந்தொட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1971-ஆம் ஆண்டு அதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டபோதிலும் நீதி மன்றத்தடைகள் தொடர்ந்தன. 2006ஆம் ஆண்டு தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் ஜாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகராவதற்கு வழி வகை செய்யப்பட்டது. இத்திட்டத்தினைச் செயல்படுத்தி இதுவரை 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர், 12 பெண் ஒதுவார்கள் உட்பட 46 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆனை வழங்கப்பட்டுள்ளது.

இப்புவிமக்களுக்கானஅரசு!

ஒரு நல்லரசானது அந்நாட்டு மக்களை அவர்களது மொழியில் ஆள வேண்டும். அந்த நாட்டு மக்களின் மொழியில் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு அந்நாட்டின் அரசுப் பணியாளர்கள் அனைவரும் அந்த மொழியை அறிந்திருக்க வேண்டும். 2021ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழ் அறிந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஆங்கிலத்தின் துணைமட்டும் கொண்டு இத்தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறும் முறைதான் இருந்து வந்தது. இதன்மூலம் தமிழ் அறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசின் பணிகளில் அமரும் நிலை இருந்தது. 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் 2021-22 ஆம் ஆண்டு மனிதவன மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. "தமிழகஅரசுத்துறைகளில் உள்ள பணியிடங்கன் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிள் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தோ்வாகக் கட்டாயமாக்கப்படும்” என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தெரிவு முகமைகளால் (Recruiting agencies) அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் தமிழ்மொழித தாளினை தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. (அரசாணை (நிலை) எண். 133, மனிதவள மேலாண்மைத் துறை, நாள் 01.12.2021).

எல்லார்க்கும்எல்லாம்!

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் மிகக் குறைந்த வட்டியில் கடன் (சிறகுகள் திட்டம்) போன்ற சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. “எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்த வையம்" என்பார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இவ்வரிகளை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாதிரியின் திசைவழியில் வெற்றிநடை போட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தொலை நோக்கான மக்கள்நலன் சார்ந்த திட்டங்கள் மூலமாக இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை, கொள்கை முடிவுகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் சூழலில், எல்லார்க்கும் எல்லாம் என்ற நிலையைத் தமிழர் அனைவரும் அடைவதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை எனலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil