Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காந்திகிராமப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேர்காணலில் முறைகேடு புகார்: தகுதியற்றவருக்குப் பதவி வழங்கத் திட்டமா?

காந்திகிராமப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேர்காணலில் முறைகேடு புகார்: தகுதியற்றவருக்குப் பதவி வழங்கத் திட்டமா?

APC News Tamil 1 week ago

திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் இன்று (03/09/2026) நடைபெறும் பதிவாளருக்கான நேர்காணலில், குறிப்பிட்ட நபரைத் திட்டமிட்டு நியமிக்கச் சிலர் மறைமுகமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கண்துடைப்பாக நடைபெறும் நேர்காணல்
காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கான அறிவிப்பு கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று அதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) ‘பெடகாலஜிக்கல் சயின்ஸ்’ துறைத் தலைவரான பி.சி.நாகசுப்பிரமணி விண்ணப்பித்துள்ளார். இவருக்கே இப்பதவியை வழங்க தற்போதைய துணைவேந்தர் ந.பஞ்சநதம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

துணைவேந்தர் பஞ்சநதம், 2019 முதல் 2022 வரை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போதிலிருந்தே நாகசுப்பிரமணியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகத் தகுதியானவர்களைப் புறக்கணித்துவிட்டு, குறிப்பிட்ட நபருக்காக இந்த நேர்காணல் வெறும் கண்துடைப்பிற்காகவே நடத்தப்படுவதாகக் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வரிசைகட்டும் புகார்களும் வழக்குகளும்
பதிவாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நாகசுப்பிரமணி மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன:

  • லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை: கடந்த ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கோவி. செழியன் பரிந்துரையின் பேரில், இவர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

  • போலிச் சான்றிதழ்: 2025-ஆம் ஆண்டு இவர் போலி அனுபவச் சான்றிதழ் சமர்ப்பித்தது தொடர்பாக உயர்கல்வித் துறை விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதற்கான அறிக்கையினைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

  • சாதிய வன்கொடுமைப் புகார்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பொறுப்புப் பதிவாளராகப் பணியாற்றிய காலத்தில், மாணவர் மற்றும் பேராசிரியர் ஒருவரைச் சாதி ரீதியாகத் தரக்குறைவாகப் பேசியதாகத் தமிழ்நாடு மாநில எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

  • லஞ்சப் புகார்: பல கல்லூரிகளில் இவர் லஞ்சம் பெற்றதாக அரசாணை (G.O.) 203-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதியில் சர்ச்சை
இவை அனைத்திற்கும் மேலாக, நாகசுப்பிரமணியின் கல்வித் தகுதியான எம்.எட்.டெக் (M.Ed.Tech) செல்லாது என ராமகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் ஆவணங்களைப் பெற்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அவரது கல்வித் தகுதி குறித்து விசாரிக்க கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் சிறப்புக் குழு அமைக்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

விதிமீறல்களும் பேராசிரியர்களின் கொந்தளிப்பும்
நாகசுப்பிரமணி பேராசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர் என அன்றைய ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், கல்லூரிக் கல்வித்துறை இயக்குநருமான ஈஸ்வரமூர்த்தி வெளிப்படையாக ஆட்சேபனை தெரிவித்தார். அதையும் மீறி, அப்போதைய துணைவேந்தராக இருந்த பஞ்சநதம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்குப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தற்போது காந்திகிராமப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக உள்ள பஞ்சநதத்திற்கு, நாகசுப்பிரமணி மீதான அனைத்துப் புகார்களும் முழுமையாகத் தெரிந்திருந்தும், பதிவாளர் பதவிக்கான நேர்காணல் பட்டியலில் அவரது விண்ணப்பம் எவ்வாறு ஏற்கப்பட்டது என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. நேர்காணலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விண்ணப்ப எண்களோடு பெயர்களை வெளியிட்டால் கடும் எதிர்ப்பு வரும் என்பதாலேயே அவை மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.

இத்தனை புகார்களைக் கொண்ட ஒருவருக்குத் துணைவேந்தர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பதிவாளர் பதவியை வழங்கினால், ஒட்டுமொத்தப் பேராசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதால், இதற்கு எதிராகப் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக நேர்காணலுக்கு முன்பே கொந்தளித்துள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகப் பதவிகளில் தகுதியற்றவர்கள் அமர்த்தப்படுவதைத் தடுக்க, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: தேங்காய் ஏற்றிய மினி லாரியும் காரும் மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil