Dailyhunt
மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை

மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை

APC News Tamil 1 week ago

2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் துளி அளவும் மாற்றமில்லை. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.

உலக உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மே தின நினைவு பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். சிவப்பு சீருடையில் நிகழ்வில் பங்கேற்ற அவர், தொழிலாளர் உரிமைகளை காக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, துணை பொது செயலாளர் ஆ ராசா எம்.பி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சி.வெ.கணேசன் மா. சுப்ரமணியன், பி கே சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகளும், தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கருப்பு-சிவப்பு உடையில் பெருமளவில் பங்கேற்று மே தினத்தை கொண்டாடினர்.

நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், மே தினம் தொழிலாளர்களின் உரிமை மற்றும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெற வேண்டிய அவசியத்தை நினைவூட்டும் நாள் எனக் கூறினார். இந்தியாவில் முதன்முதலில் மே தினக் கொண்டாட்டம் சென்னை நகரில்தான் தொடங்கப்பட்டது என்றும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் இந்த விழா ஆரம்பிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நம்பிக்கையுடன் பேசிய அவர், "எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஆட்சி தொடரும்" என தெரிவித்தார். இது கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் அல்ல, மக்களின் உணர்வை உணர்ந்தே கூறப்படுவது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான ஆட்சி காலத்தில்தான் என்றும், அதனை சட்டபூர்வமாக்கியதும் பின்னர் முதலமைச்சராக இருந்த கலைஞர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், இந்தியா முழுவதும் மே தினம் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் சில நாட்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு நல்ல செய்தியை தரும் என்றும், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக ஆட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மே தின நினைவு பூங்காவை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்பதையும், தொழிலாளர் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையை நினைவுகூர்ந்தும், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப அரசு தொடர்ந்து செயல்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் - தேர்தல் ஆணையம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil