ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், அப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இத்திரைப்படத்தில் ராவணனைப் புகழ்ந்து பேசும் வகையில் மிகைப்படுத்திக் காட்டியுள்ளதாகவும், ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் உண்மைகள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா, சர்வதேசத் தலைவர் அலோக் குமார் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பஜ்ரங் லால் பக்ரா கூறியதாவது:
"இந்து சமூகத்தின் உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய முயற்சிகளைச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தப் படத்தில் அகல்யாவுக்குச் சாப விமோசனம் அளித்தது, நிஷாதராஜன் குகனுடனான நட்பு, கேவட்டனின் பக்தி உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறவில்லை.
மாறாக, முனிவர்கள் மற்றும் சாதுக்களின் ஆன்மிகச் செயல்பாடுகள், யாகங்கள், குருகுலங்கள் ஆகியவற்றுக்குத் தடையாக இருந்த அரக்கர்களை அழிக்கும் பகவான் ராமரின் உன்னதமான பணியை, மனைவி கடத்தப்பட்டதற்காகப் பழிவாங்கும் தனிப்பட்ட போராட்டமாகச் சித்தரித்துள்ளனர்.
மேலும், ராவணனை ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பராகக் காட்டுவதன் மூலம் அரசியல் பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. ராவணனைப் புகழும் வகையில் மிகைப்படுத்திச் சித்தரிப்பது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது" என்றார்.
ராவணன் குறித்த சித்தரிப்புக்கு ஆட்சேபனை:
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் அலோக் குமாரும் திரைப்படத்தின் சித்தரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "இந்தத் திரைப்படத்தில் ராவணன் தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் மீட்பராகவும், அவர்களின் நலனுக்காக உழைப்பவராகவும் காட்டப்படுகிறார். இதுவும் ராவணனை மிகைப்படுத்திக் காட்டும் முயற்சியே. திரைப்படத்தில் பல வரலாற்று நிகழ்வுகள் சிதைக்கப்பட்டுள்ளன.
ராவணன் அறிவாளியாகவும், பக்திமானாகவும், வலிமை மிக்கவனாகவும் இருந்தபோதிலும், மக்களை ஒடுக்கியதால் அறமற்றவனாகவே இருந்தான். ராமாயணத்தின் அனைத்துப் பதிப்புகளிலும் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
நட்சத்திரப் பட்டாளம்:
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும், லட்சுமணனாக ரவி துபேவும் நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹீரோவுக்கு இணையாக மாஸ் காட்டும் சாய் பல்லவி…. ஒரே ஆண்டில் இரண்டு அவதாரங்கள்!

