Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வேறு பெண்ணுடன் திருமணம்.மன்டபத்துக்கே சென்று தடுத்து நிறுத்திய காதலியால் பரபரப்பு

வேறு பெண்ணுடன் திருமணம்.மன்டபத்துக்கே சென்று தடுத்து நிறுத்திய காதலியால் பரபரப்பு

APC News Tamil 4 days ago

சென்னை ராயபுரத்தில் காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றியபோது, சையது இப்ராஹிம் என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறி, இருவரும் கடந்த பத்தாண்டுகளாக உறவில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இளம்பெண்ணின் குற்றச்சாட்டுப்படி, சையது இப்ராஹிம் தனது வற்புறுத்தலின் பேரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை மதம் மாற்றச் செய்ததாகவும், மேலும் பல்வேறு காரணங்களைக் கூறி சுமார் ₹50 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணை சையது இப்ராஹிம் திருமணம் செய்ய இருப்பதாக அறிந்த இளம்பெண், தனது ஆதரவாளர்களுடன் ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். பதாகைகள் ஏந்தி திருமணத்தை நிறுத்தக் கோரி அவர் முழக்கமிட்டதால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக திருமண நிகழ்ச்சியும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

​இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் தொடர்புடைய இளைஞர் முன்ஜாமீன் பெற்று திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ராயபுரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவரை தரதரவென இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் வளர்மதி மீது ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி ஒருமையில் பேசி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதையடுத்து, போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil