Dailyhunt
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை - நீதிமன்றம் கருத்து

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை - நீதிமன்றம் கருத்து

APC News Tamil 1 week ago

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் விருப்பமில்லா கருவை தொடர்வது ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுமையான நிமிடங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பாலியல் கொடுமைக்கு ஆளாகி 15 வயதில் கருவுற்ற சிறுமியின் வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம் மைனர் சிறுமியின் 30 வார கருவை கலைக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, அந்த சிறுமியின் உடல் நிலையை ஆராய்ந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கருக்கலைப்பு சாத்தியமற்றது, அவ்வாறு கருகலைப்பு செய்யும்பட்சத்தில் அது அந்த சிறுமியின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், எதிர்காலத்தில் நிரந்தரமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட்டி, இன்னும் நான்கு வாரம் பொறுத்துக் கொண்டால் அந்த குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் ,அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி,:- இது மிகக் கொடூரமான குழந்தை பாலியல் வன்முறை. சிறுமியின் மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லாத கருவை அவளிடம் தொடரச் சொல்லுவது ஒவ்வொரு நாளும் அவளுக்கு மன வேதனையை ஏற்படுத்தும்" என்று கடுமையாகக் குறிப்பிட்டார். மேலும், "15 வயது சிறுமி தாய் பொறுப்பை ஏற்கும் நிலைமை உள்ளதா? அவளின் எதிர்கால வாழ்க்கை, திருமணம் போன்ற அம்சங்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். கண்ணியமான வாழ்க்கையை வாழ்வது அவளின் அடிப்படை உரிமை" என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும் கருகலைப்பு தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் தேவை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் கர்ப்பம் ஏற்படால், அதனை கலைக்க ​​கால வரம்பு இருக்கக்கூடாது என்றும், வழக்குகளை ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் வகையில் சட்டத்தைத் திருத்துமாறு பரிந்துரைத்தது. சட்டம் என்பது நடைமுறைக்கு ஏற்றவாறும், மாறிவரும் காலத்திற்கு ஏற்றதாகவும் இயல்பானதாகவும் இருக்க வேண்டும்.

"ஒரு மைனர் சிறுமியை அவளது விருப்பத்திற்கு எதிராக கருவை சுமக்க கட்டாயப்படுத்த முடியாது. இந்த முடிவு அவளுடைய தனிப்பட்ட உரிமை" எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இறுதியாக, எய்ம்ஸ் மருத்துவமனை தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை நிராகரித்த நீதிமன்றம், முன்பு வழங்கிய கருக்கலைப்பு உத்தரவை மாற்றமின்றி அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பது சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மத்திய அரசு அல்லது மருத்துவமனை மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி வழக்கை முடித்தது.

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் - துணைமுதல்வர் புகழாரம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil