Wednesday, 03 Mar, 8.56 am அரண்செய்

செய்திகள்
கண்காணிப்பு பட்டியலில் வரியிலா சொர்க்கம் கேமன் தீவுகள் - இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்படுமா?

ந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீடுகளுக்கான முக்கியமான பாதையாகிய கேமன் தீவுகள், FATF (Financial Action Task Force) என்ற உலகளாவிய நிதித்துறை கண்காணிப்பு அமைப்பினால், அதிகம் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின்/பிராந்தியங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இந்தியாவுக்குள் வரும் அன்னிய நிதி முதலீடுகள் மீதும், அன்னிய நேரடி முதலீடுகள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பிசினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

FATF-ல் 37 நாடுகளும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், ஐரோப்பிய ஆணையம் என்ற இரு பிராந்திய அமைப்புகளும் உறுப்பினர்களாக உள்ளன. நிதி ஆதாரங்களை பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக FATF செயல்படுகிறது.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்காத நாடுகளின் கருப்புப் பட்டியலையும், கண்காணிப்பு பட்டியலையும் FATF வெளியிடுகிறது. கருப்புப் பட்டியலில் வட கொரியா, ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன.

சென்ற வாரம் சேர்க்கப்பட்ட மொராக்கோ, புர்கினா ஃபாசோ, செனகல், கேமல் தீவுகள் ஆகியவற்றையும் சேர்த்து கண்காணிப்புப் பட்டியலில் 19 நாடுகள் உள்ளன. கண்காணிப்புப் பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் தமது நாடுளின் நிதித்துறை மீதான கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் சட்டங்களை இயக்க வேண்டும்.

அது வரையில், பிற நாடுகள் இந்த நாடுகளிலிருந்து நிதித்துறை பரிவர்த்தனைகள் மீது அதிக கண்காணிப்புகளை அமல்படுத்த வேண்டும்.

கேமன் தீவுகள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பிராந்தியத்தின் மூலமாக இந்தியாவிற்குள் முதலீடு செய்யும் நிதிச் சந்தை முதலீட்டாளர்கள் மேலும் கறாரான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவர்கள், தமது பங்குதாரர்களில் 10%-க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பவர்களைப் பற்றிய தகவல்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கும். பிற நாடுகளின் மூலமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் 25%-க்கு அதிகமான பங்குகளை வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் போதுமானது என்று பிசினஸ் ஸ்டேண்டர்ட் தெரிவிக்கிறது.

இதனால், இந்தியாவுக்குள் வரும் அன்னிய நிதித்துறை முதலீடுகள் பாதிக்கப்படலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

கேமன் தீவுகள், அமெரிக்காவின் மியாமியிலிருந்து சுமார் 770 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் உள்ள பிரிட்டனின் வெளிநாட்டு பகுதி ஆகும். இந்த மூன்று தீவுகளின் மொத்த மக்கள் தொகை 65,000 மட்டுமே. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $550 கோடி (சுமார் ரூ 40,000 கோடி) ஆகும். இது இந்தியாவின் புதுச்சேரியை விட சிறிதளவு பெரிய பொருளாதாரம் என்று தெரிவிக்கிறது பிசினஸ் டுடே.

இந்த குட்டி நாட்டில் இருந்து இந்தியாவின் பங்குச் சந்தைகளிலும் கடன் சந்தைகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ 70,000 கோடி முதல் ரூ 90,000 கோடி வரை. இது இந்தியாவின் நிதிச் சந்தைகளில் முதலீடுகள் வருவதற்கான முன்னணி 15 நாடுகளில் ஒன்றாக உள்ளது.

கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 339 நிதிச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தில் பதிவு செய்துள்ளன. அவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்கின்றன என்று பிசினஸ் டுடே தெரிவிக்கிறது.

மேலும், இந்தியாவுக்கான அன்னிய நேரடி முதலீடுகளில் கேமன் தீவுகள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அன்னிய நேரடி முதலீடுகள் என்பவை, இந்தியாவில் நேரடியாக உற்பத்தி அல்லது வணிக செயல்பாடுகளிலான முதலீடுகளையோ, இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை கட்டுப்படுத்துவதையோ குறிக்கிறது.

2020-21 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கேமன் தீவுகள் வழியாக இந்தியாவுக்கு வந்த நேரடி அன்னிய பங்கு முதலீட்டின் மதிப்பு $200 கோடி. சிங்கப்பூர் $830 கோடி, அமெரிக்கா $713 கோடி ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே கேமன் தீவுகளை விட முன்னணியில் உள்ளன என்று பிசினஸ் டுடே தெரிவிக்கிறது.

சென்ற நிதியாண்டில் கேமன் தீவுகள் இந்தியாவிற்கு வரும் அன்னிய நேரடி முதலீடுகளில் 5-வது இடத்தைப் பிடித்திருந்தது ($370 கோடி). 2018-ல் அது முதல் 10 இடங்களில் நுழைந்திருந்தது.

மொரீஷியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளுடனான முதலீட்டு ஒப்பந்தத்தை இந்தியா திருத்தியதால், அந்த நாடுகள் வழியாக முதலீடு செய்பவர்களுக்கு வரி ஆதாயம் இல்லாமல் போனது. எனவே, வரிவிதிப்பு இல்லாத கேமன் தீவுகள் வழியிலான முதலீடுகள் அதிகரித்துள்ளன என்கிறது பிசினஸ் டுடே.

"கேமன் தீவுகளின் கார்ப்பரேட் வரி இல்லை என்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் தமது கிளை நிறுவனங்களை அங்கு பதிவு செய்து, தமது வருவாயில் ஒரு பகுதியையோ, முழுவதையுமோ வரி செலுத்த வேண்டியதாக இல்லாமல் செய்து கொள்கிறார்கள்" என்று ஃபெலிக்ஸ் அட்வைசரி என்ற கணக்கியல் நிறுவனத்தைச் சேர்ந்த அமித் ஜிண்டால் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Aransei
Top