மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய 8வது ஊதியக் குழு குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், ஊதியமும் ஓய்வூதியமும் கணிசமாக உயரக்கூடும் என கூறப்படுகிறது.
தற்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹18,000 ஆக உள்ளது. ஆனால், 8வது ஊதியக் குழுவில் இதை ₹69,000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக 3.83 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஏற்கப்பட்டால், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் சுமார் 283% வரை உயர்வு ஏற்படலாம். அதேபோல், தற்போது ₹9,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹34,470 வரை உயர வாய்ப்புள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்:
- வருடாந்திர ஊதிய உயர்வை 3%-இல் இருந்து 6% ஆக உயர்த்த வேண்டும்
- வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் போக்குவரத்துப்படிகளை அதிகரிக்க வேண்டும்
- ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 'Risk Allowance' மறுசீரமைப்பு
- தேசிய ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும்
- ஊதியக் குழு பரிந்துரைகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்த வேண்டும்
- அகவிலைப்படி (DA) உயர்வு விகிதத்தை குறைந்தபட்சம் 4% ஆக நிர்ணயிக்க வேண்டும்
ஏன் இந்த கோரிக்கை?
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய ஊதியம் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க போதுமானதாக இல்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இணையம் மற்றும் மொபைல் டேட்டா போன்ற செலவுகள் இப்போது அத்தியாவசியமாக மாறிவிட்டதால், ஊதிய உயர்வு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
யாருக்கு நன்மை?
இந்த 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள 49 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கக்கூடும். ஓய்வூதிய உயர்வு, கூடுதல் ஓய்வூதியம், கம்யூடட் பென்ஷன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில், 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்க முறையில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

