வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, நகர்ப்புறங்களில் வீட்டு சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டிய குறைந்தபட்ச கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மே 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், எல்பிஜி விநியோகம் மற்றும் விலை நிர்ணயத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான மோதலின் தாக்கம் எரிவாயு சந்தையிலும் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்துள்ளது. அதேசமயம், 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையும் மார்ச் மாதத்தில் பலமுறை உயர்த்தப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, நகரங்களில் 21 நாட்கள் கழித்தே அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடிந்தது. ஆனால் புதிய அறிவிப்பின் படி, இனி 25 நாட்கள் நிறைவடைந்த பிறகே முன்பதிவு செய்ய இயலும். இதற்கு முன்பாக புக்கிங் செய்ய முயன்றால், கணினி அமைப்பு தானாகவே அந்த கோரிக்கையை நிராகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் ஏற்கனவே அமலில் இருந்த 45 நாள் இடைவெளி விதி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், OTP அடிப்படையிலான டெலிவரி சரிபார்ப்பு மற்றும் ஆதார் eKYC நடைமுறைகளும் கடுமையாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

