Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமரம் - திரைப்பட விமர்சனம்

அமரம் - திரைப்பட விமர்சனம்

Cinema Valai 3 weeks ago

லைகிராம மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம் அமரம்.கிழக்குத் தொடர்ச்சிமலையிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் முரட்டுத்தனமான பழங்குடி இளைஞனான படத்தின் நாயகன் ராஜன் தேஜேஸ்வர்,நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை கொலை செய்கிறார்.இதனால் வெகுண்டெழும் நாயகி,தன் தந்தையைக் கொன்ற நாயகனைப் பழிவாங்கப் புறப்படுகிறார்.போன இடத்தில் நாயகனைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அவரோடு இணைந்து கொள்கிறார்.ஏன்?

எப்படி? அதன்பின் என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் படம்.

நாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜேஸ்வர் புதுமுகம் என்றாலும் மலைகிராம பழங்குடி இளைஞனுக்குரிய தோற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.அதிக வசனங்கள் இல்லாமல் பார்வை மற்றும் உடல்மொழியிலேயே நடிப்புத்திறனை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு முதல்படத்திலேயே அவருக்கு அமைந்திருக்கிறது.அதில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

நாயகி ஐரா அகர்வால் அழகுப்பதுமையாக இருக்கிறார்.பழிவாங்கும் உணர்ச்சியோடு வருபவருக்கு பல அதிரடித் திருப்பங்கள் நடக்கின்றன.அவற்றை எதிர்கொள்ளும் இடங்களிலெல்லாம் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு எதிர்மறையான காரியங்கள் செய்யும் வேடமேற்றிருக்கும் நாகிநீடு,அப்பாவி மக்களைத் தங்களுடைய தன்னலத்துக்காகப் பலிகடா ஆக்கும் ஆதிக்கச்சக்திகளின் பிரதிநிதியாக நடித்திருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்.

பழங்குடியின சமூகத்தின் மூத்தவராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், பழங்குடி மக்களைக் கூலிப்படையாக பயன்படுத்தும் சாய் தீனா மற்றும் கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமங்களின் நிலையையும் அங்குவாழும் மக்களின் மனநிலையையும் கூடக் காட்சிகளில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரத் குமார்.பல காட்சிகளில் யார் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர்? என்று கேட்க வைத்திருக்கிறார்.

கதைக்களத்தேற்ற பாடல்களைக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் மிக்கி ஜெ.மேயர்,பின்னணி இசையிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் மிராக்கிள் மைக்கேல் உழைப்பில் சண்டைக்காட்சிகள் புதிதாகவும் மிரட்டலாகவும் இருக்கின்றன.

படத்தொகுப்பாளர் ஆர்.ஸ்ரீராமர்,இயக்குநர் சொல்ல வந்ததை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியவைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் தொகுத்து அந்த எண்ணத்தில் வெற்றி கண்டிருக்கிறார்.

உண்மையையும் நேர்மையையும் உயிராகக் கொண்டு வாழும் வெள்ளந்தி மக்களை,தன்னலக்காரர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை ஒரு திரைப்படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கலந்து சொல்லி வரவேற்புப் பெறுகிறார் இயக்குநர் அருள்கிருஷ்ணன்.

- இளையவன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinemavalai