Dailyhunt
பைக்கர் - திரைப்பட விமர்சனம்

பைக்கர் - திரைப்பட விமர்சனம்

Cinema Valai 3 weeks ago

மோட்டார் சைக்கிள் என்று சொல்லப்படும் துள்ளுந்துப் பந்தயங்கள் குறித்த படங்கள் வந்ததில்லை என்கிற குறையைப் போக்கும் விதமாக வந்திருக்கும் படம் பைக்கர்.

தமிழ்த்திரைப்பட இரசிகர்கள் மறக்கமுடியாத இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் துள்ளுந்துப் பந்தய வீரர்.தன்னைப் போல் தன் மகன் சர்வானந்த்தும் வரவேண்டுமென விரும்புகிறார்.சர்வானந்த்தும் அப்படியே செய்கிறார்.அதனால் அவரை உலகஅளவில் கொண்டுசேர்க்க முயலும் நேரத்தில் எதிர்பாராவிதமாக அப்பாவை ஏமாற்றிவிட்டு விலகிச் செல்கிறார்.அதனால் டாக்டர் ராஜசேகருக்கு பெரும் அவமானம்,துரோகிப் பட்டம்,தொடர்ந்து அந்தத் துறையில் இயங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

அதன்பின் சர்வானந்த் என்ன செய்கிறார்?அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

நாயகன் சர்வானந்த், துள்ளுந்துப் பந்தய வீரராகவே தோன்றவேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.இரண்டுவிதமான தோற்றங்களில் வந்து இரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டியிருக்கிறார்.நடிப்பிலும் நன்று.

நாயகி மாளவிகா நாயர்,கவர்ச்சி ஆட்டம் போட்டு இளைஞர்களை ஈர்க்கும் அதேவேளையில் அன்பானகாதலி பொறுப்பானமனைவி ஆகியனவற்றைச் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு நாயகனின் தந்தையாக திரையில் தோன்றும் டாக்டர் ராஜசேகர்,இன்றும் அதே மிடுக்கோடு இருக்கிறார்.மகனால் பெருமிதம் மற்றும் பெரும் அவமானம் ஆகியனவற்றைச் சந்திக்கும் நேரங்களில் அவருடைய நடிப்பில் அனுபவம் மிளிர்ந்திருக்கிறது.

விளையாட்டுகளையும் வியாபாரமாக்கும் தொழிலதிபர்களை நினைவுபடுத்தும் விதமாக நடித்திருக்கிறார் அதுல் குல்கர்னி.

ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ்,துள்ளுந்துப் பந்தயக் காட்சிகளை மயிர்க்கூச்செரியும் வண்ணம் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கிறார்.பாடல்காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்,இளமைதுள்ளும் காதல்பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.துள்ளுந்துப் பந்தயக் காட்சிகளுக்கு அவர் அமைத்திருக்கும் பின்னணி இசை சிறப்பு.

படத்தொகுப்பாளர் அனில்குமார்பலாசா,விறுவிறுப்பாகப் பார்க்க வைக்கும் திரைக்கதையை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறார்.

அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ்.பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோர் கதை மற்றும் திரைக்கதை, துள்ளுந்துப் பயணக்கதையை மட்டும் சொல்லாமல் அதற்குள் ஓர் ஆழமான உறவுச்சிக்கல்களையும் கலந்து சுவையான கதையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

எழுத்தில் இருக்கும் பிரமிப்பை காட்சிகளிலும் அப்படியே கொடுத்து சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி.

- இளையவன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinemavalai