Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பத்தாவைக் கொண்டாடும் அனைவருக்கும் நன்றி - விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

பத்தாவைக் கொண்டாடும் அனைவருக்கும் நன்றி - விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

Cinema Valai 3 hrs ago

விஜய்சேதுபதி,லிஜோமோல் ஜோஸ்,ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன்,அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ்,சஹஸ்ரா,அஜய்கோஷ்,தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில்,பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி,அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'பத்தா'.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க,செல்வகுமார் எஸ்.கே.ஒளிப்பதிவு செய்திருந்தார்.படத்தொகுப்பு:ஆர்.கலைவாணன்.

அட்லீ வழங்க,ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18),ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios),சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் ( Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி,பிரியா அட்லீ,அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.

ஆக்சன் படமாகத் தொடங்கி,மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரசியமாக விரியும் கதையில் உருவான 'பத்தா' திரைப்படம்,விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும்,வசூல்ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், 'பத்தா' படக்குழுவினர்,செப்டம்பர் 5 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசும்போது….

முதலில் இந்த வாய்ப்பு கொடுத்த அட்லீ அண்ணாவுக்கு நன்றி.நான் ஒவ்வொரு படத்திலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.அந்தவகையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ்,ராஜுமுருகன் வரிசையில் பாலாஜி தரணிதரன் அவர்களிடமும் கற்றுக்கொண்டேன்.அது மட்டுமில்லாமல்,வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படக்கூடாது,எளிமையாக வாழவேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டேன்.மாலை 6 மணிக்குள் சாப்பிட்டுவிடவேண்டும்,சீக்கிரம் தூங்கப் போய்விடவேண்டும், செல்போன் தொடர்புகளை விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கவேண்டும் என்றெல்லாம் அவரிடம் கற்றுக்கொண்டேன்.
விஜய் சேதுபதி சார் அருமையாக நடித்திருந்தார்.சிறுவன் சாய் நடிப்பில் ஆச்சரியப்படுத்தினான்.லிஜோமோல் சிறப்பாக நடிக்கக்கூடியவர்.'மகளே' பாடலின் படப்பிடிப்பின்போதே எனக்குக் கண்கள் கலங்கின" என்றார்.

படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் பேசும்போது…,

இந்தப்படத்தில் அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தார்கள்.சாய் பிரமாதமாகப் பாடல்களை மட்டுமல்ல,பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருக்கிறார்.எதிர்பாராத பல விசயங்களைக் கொண்டதாக இந்தப்படம் இருந்தது.இந்தப்படத்தில் எதிர்மறைத்தன்மையே வராமல்,விமர்சனங்கள் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.எதிர்மறையையே பரப்பிவரும் இந்தக்காலத்தில் இப்படி அமைவது அரிது.மகிழ்ச்சியாக இருக்கிறது.தயாரிப்பாளர் அட்லீ இதை முன்னெடுத்திருக்கிறார்.இதேபோல் அவர் நிறையப் படங்கள் செய்யவேண்டும்.இதுபோல நல்ல நல்ல படங்கள் வரவேண்டும்.விஜய்சேதுபதி சார் பாத்திரத்தில் சின்னச்சின்ன நுட்பங்களைக் காட்டி நடித்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.குறிப்பாக,அந்தப் பாத்ரூம் காட்சியில் அந்தப்பாத்திரமாகவே மாறியிருந்தார்.அந்தச்சிறுவன் சாய் கடைசியில் வாக்குமூலம் போல் அழுது பேசி நடித்திருக்கும் காட்சியில் பிரமாதமாக நடித்திருப்பான்.பின்னணி இசை இல்லாமலேயே மனதைக் கலங்க வைக்கும்.லிஜோமோலும் மிகவும் நுட்பமாக நடித்திருப்பார்.படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள் என்றார்.

படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா பேசும்போது….

இந்தப்படத்திற்கு ரெட்ரோ போல ரூட் கொடுக்க விரும்பினேன்.இந்தப்படத்தின் புவியியல் காட்சி எனக்குப் பிடித்தது.அது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது.அதுவே அந்தத் தோற்றத்தைக் கொடுத்தது.விஜய்சேதுபதி அவர்களின் முதல்தோற்றமே பிரமாதமாக அமைந்தது.இந்தப்படத்தில் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

பாடலாசிரியர் கேகே நகர் கானா ஜீவா பேசும்போது….

இந்தப்படத்தில் எனக்கு பாடல் வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி.எனக்கு இதற்குமேல் பேசவரவில்லை.இந்தப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக உள்ளன என்றார்.

படத்தின் இணை வசனகர்த்தா எழுத்தாளர் கரன்கார்க்கி பேசும்போது….

இந்தமேடை எனக்கு 16 ஆண்டு காலக்கனவு.அந்த அளவுக்கு எனக்கு சினிமா மீது ஒரு கனவு உண்டு.இதுவரை எட்டு நாவல்கள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதியிருக்கிறேன்.16 விருதுகள் வாங்கி இருக்கிறேன்.ஆனால் அதில் எல்லாம் கிடைக்காதது இப்போது கிடைத்துள்ளது.இப்போது அனைவரும் ட்ரீட் கேட்கிறார்கள்.முதலில் இந்தப்படத்தை இயக்குநர் அளித்தபோது தயக்கமாக இருந்தது. ஏனென்றால்,பொதுவாக எனக்கு தமிழ்சினிமா மீது ஒரு விசயத்தில் வெறுப்பு உண்டு.சென்னை வட்டார மொழியைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்று.சென்னை வட்டார மொழிகளில் பல அடுக்குகள் உண்டு.சிந்தாதிரிப்பேட்டையில் பேசுவதை வியாசர்பாடியில் பேசமாட்டார்கள்.ராயபுரம் மொழி வேறு மாதிரியாக இருக்கும்.
இந்தச் சென்னை வட்டார மொழியின் வேரைக் கண்டுபிடித்துச் சில சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அப்படி பயன்படுத்திய சொற்களின் பொருளை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.
இதன் திரைக்கதையே ஒரு பயிற்சி நிலையத்திற்கு பாடமாக வைக்கும் அளவிற்கு இருக்கிறது என்றார்.

நடிகர் ஹரிகிருஷ்ணன் பேசும்போது….

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் மிக்க நன்றி.ஒரு நல்லபடத்தில் நான் இருப்பதற்காக,நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி.விஜய்சேதுபதி அண்ணா அவர்களுடன் நான் நடித்ததற்காகவும் எனக்கு உரிய இடத்தை கொடுத்ததற்காகவும் நன்றி.இந்தப்படத்திற்கு நல்ல நேர்நிலை உணர்வுகள் உருவாகிக்கொண்டே வருகின்றன.அதற்கு காரணம் அட்லீ என்கிற நல்ல ஆத்மாதான் காரணம் என்றார்.

நடிகர் பாலமுருகன் பேசும்போது…..

எனக்கு இது தான் முதல்படம்.நான் இதற்கு முன்பு மீடியாக்களில் இருந்து கொண்டு சினிமா நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் இந்தமேடையில் இருக்கிறேன்.வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.விஜய்சேதுபதி அண்ணாவிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.

நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசும்போது….

வந்தாரை வரவேற்கும் தமிழக மக்களுக்கு நன்றி.'பத்தா' எங்கள் அனைவருக்கும் முக்கியமான படம்.கதை சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தது,நடிக்கும்போது வியப்பாக மாறியது.படப்பிடிப்பில் இயக்குநர் சொன்னதை நான் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருந்தேன்.நல்லகதையை நம்பினால் அது அனைத்தையும் தேடிக்கொண்டு வரும் என்பதற்கு இந்தப்படமே ஒரு உதாரணமாக இருக்கிறது.நல்லசினிமா வராதா என்ற ஏக்கத்தைக் கொஞ்சம் போக்குகிற படமாக இது வந்திருக்கிறது.அதில் நானும் பங்கு பெற்றிருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

நடிகர் விஷ்ணு பேசும்போது….

நான் மலையாளத்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன்.என்ன பேசுவதென்றே தெரியவில்லை.என்னைக் கேட்டால்,மூன்று விசயங்களைக் கூறுவேன்.முதலில் நாம் கலையைத் தேர்ந்தெடுப்பதை விட,கலை நம்மை தேர்ந்தெடுக்க வேண்டும்.அடுத்து கடினமாக உழைக்கவேண்டும்.மௌனமாக இருக்கவேண்டும்.மூன்றாவதாக,நாம் பேசக்கூடாது.நமது படம்தான் பேசவேண்டும்.இந்த மூன்றும் நான் கற்றுக்கொண்ட விசயங்கள்.இந்தப்படத்தில் என் நடிப்பு பிடித்திருந்தால்,வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

தயாரிப்பாளர் முராத் கெதானி பேசும்போது….

என்னை இந்தத் தயாரிப்பில் இணைத்ததற்கு அட்லீ அவர்களுக்கு நன்றி.இந்த நல்ல படப்பிடிப்புக்குழுவில் நானும் பங்கேற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.இயக்குநர்,விஜய்சேதுபதி,முத்துராஜ் மற்றும் அனைவருக்கும் நன்றி.இது எங்களுக்கு மிக முக்கியமான படம்.இந்தப்படத்தைப் பற்றி மட்டுமே எல்லாமே நல்ல விமர்சனங்களாக வந்தன.இதுமாதிரி வரவேற்பு எந்தப்படத்திற்கும் கிடைத்திருக்காது என்றார்.

கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் பேசும்போது….

இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரொம்ப பதற்றமாக இருந்தேன்.இப்போது அந்தப் பதற்றம் குறைந்திருக்கிறது.இந்தப்படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி.கன்னிமா பாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி.மகிழ்ச்சியாக இருக்கிறது.முதலில் தயாரிப்பாளர் அட்லீ அவர்களுக்கு நன்றி.மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினரும் தங்களது சிறந்ததைக் கொடுத்திருக்கிறார்கள்.அனைவரையும் பாராட்டவேண்டும்.இந்தப்படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது.படப்பிடிப்பிலிருந்து டப்பிங்வரை இயக்குநர் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து என்னிடமிருந்து வேலை வாங்கினார்.அவரது பொறுமைக்கு நன்றி.விஜய்சேதுபதி சார் அவர்களைப் பார்த்தாலே எனக்குப் பயம்.ஆனால் அவர் அருகில் இருப்பது ஒரு மேஜிக்போல் உணரவைக்கும்.அந்த மேஜிக்கில் நானும் அருகில் இருந்தது,அதைப்பார்த்தது பெருமையாக இருக்கிறது.அவர் சக கலைஞர்களுக்கு கொடுக்கும் இடமும் சுதந்திரமும் என்னை ஆச்சரியப்படுத்தியது.சிறுவன் சாய் நல்ல திறமைசாலி.சஹஸ்ராவும் நன்றாக நடித்திருந்தார்.'செல்ல மகளே' பாடல் சாய் அப்யங்கர் இசையில் பிரமாதமாக இருந்தது.இந்தப்படம் அனைவரையும் போய்ச்சேர வேண்டும்.மேலும் மேலும் பார்க்கவேண்டும்.பார்த்தவர்கள் பார்க்காதவர்களிடம் கூறவேண்டும்.இந்தப்படத்தை மேலும் மேலும் வெற்றிபெற உதவுங்கள் என்றார்.

சிறுமி சஹஸ்ரா பேசும்போது….

தேன்மொழி பாத்திரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.இந்தப்படத்தை பெரிய வெற்றிப்படமாக்கிய மக்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அட்லீ சார் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி.விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி.நல்லதொரு உணர்வைத் தருகிற நல்லதொரு படம் இது என்றார்.

சபரி பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பிரித்திவிராஜ் பேசும்போது….

இது எனக்கு முதல்படம்,முதல்பயணம்.பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கிறது.படப்பிடிப்பின் போதும் அப்படித்தான் இருந்தது.ஒருபக்கம் பயமாகவும்,இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.ஆனால் அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்.செட்டில் அங்குமிங்கும் நான் திரிந்து கொண்டிருந்தாலும்,அந்த 60 நாட்களும் என்னைப் பத்திரமாக அனைவரும் கவனத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.இயக்குநர் அழகாக நடிக்க வைத்தார்.சேது சார் உடன் நடிக்கும்போது பயமாக இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும்,அந்த மகிழ்ச்சியை முகத்தில் கொண்டு வராமல் பயந்துகொண்டே இருந்தேன். அவர் நண்பரைப்போல பழகினார்.ஜாலியாக இருந்தார்.சில நேரம் திட்டியிருக்கிறார்.ஆனால் நன்றாகப் படிக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருந்தார் என்றார்.

இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேசும்போது….

இந்தப் படத்துக்கு நான்தான் இசையமைக்க வேண்டும் என்றபோது எனக்குப் பல விதமான உணர்வுகள் வந்தன.இந்தப்படத்தில் நடித்தவர்கள் இரண்டு மூன்று பேர் தேசிய விருது பெறுவார்கள் என்று நம்புகிறேன்.வண்டி ஓட்டுபவர்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தார்கள்.யார் சிறப்பாக நடித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடித்திருந்தார்கள்.முதலில் என்னை இயக்குநர் நம்பவில்லை.வேறு ஒருவரை வைத்து செய்வதாக இருந்தது.நான் ஒவ்வொரு பாடல் மூலமும் அவரிடம் நம்பிக்கை வரவைத்தேன். பிறகுதான் அவர் பின்னணி இசை அமைக்கவே சம்மதித்தார்.சேது அண்ணா பிரமாதமாக நடித்திருந்தார்.லிஜோ அக்காவும் சிறப்பாக நடித்திருந்தார்.முதலில் கதை சொன்னபோதே அட்லீ அண்ணா என்னை நம்பினார்.நானே என்னை நம்பவில்லை.ஆனால் அவர் நம்பினார்.எனது இரண்டாவது படத்திற்கும் நீதான் இசையமைக்கிறாய் என்றார்.அது நன்றாக வரும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும்போது….

இந்த வாய்ப்பு கொடுத்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.என்னிடம் குறைவாக இருப்பது,அட்லீயிடம் அதிகமாக இருப்பது,அந்த நேர்நிலை எண்ணம்தான்.முதலில் சேதுவிடம் கதை சொன்னேன்.அவர் நண்பர் என்பதால் ஓகே செய்துவிடமாட்டார்.அவருக்குப் பிடித்துப்போனதால் அட்லீயிடம் அழைத்துக் கொண்டு சென்றார்.விஜய்சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன்.அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்.
லிஜோ மோல் மூன்று நாட்களுக்குள் படப்பிடிப்பு என்கிறபோதுதான் வந்து சேர்ந்தார்.அவர் வந்ததும் பெரிய நம்பிக்கை வந்தது.எது நடக்குமோ,அது நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது.அவர் தனது நேர்மையான பங்களிப்பை வழங்கினார்.அவர் ஒரு சிறந்த நடிகை.சிறுவன் சாய் குழந்தை குணம் கொண்டவன்.அவனை நடிக்கவைக்காமல் இருந்தாலே போதும்.அந்தக் குழந்தைத்தன்மை சரியாக வந்தாலே சிறப்பாக அமைந்துவிடும் என்று நினைத்தேன்.அப்படித்தான் வந்திருக்கிறது.சித்தாவில் வந்து பாராட்டைப் பெற்ற சிறுமி சஹஸ்ராவும் சிறப்பாக நடித்திருந்தார்.இந்தப்படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்களும் இந்தப்படத்தை நம்பினார்கள்.அது படத்தில் பொறுப்பாக மாறி வெளிப்பட்டது.அதன் விளைவு சரியாக அமைந்திருக்கிறது.முத்துராஜ் என்ற அனுபவசாலி,அந்த 80களின் உலகத்தைக் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தார்.இப்படியே திறமையான ஒளிப்பதிவாளர்,அற்புதமான எடிட்டர் என அனைவருக்கும் பங்கு உண்டு.
சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்னபயம் இருந்தது.ஆனால் அந்தப்பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார்.அதற்குப்பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன்.அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார். அதுமட்டுமல்ல,காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும்,80களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார்.டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.
இப்படி இந்தப்படத்திற்குப் பின்னால் உழைத்தவர்கள் நிறைய பேர்.அனைவருக்கும் நன்றி என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது….

இது ஒரு நீண்டபயணம்.இந்தப்படம் வணிகப்படங்களுக்குள் கலையை கொண்டு வந்த படம்.இந்தப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.வணிகத்தை மீறி கலை செய்யக்கூடிய இயக்குநராக பாலாஜி தரணிதரன் இருக்கிறார்.
இந்தப்படம் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது.படத்தில் வரும் பத்தாவுக்கு அவன் பாடியபோது ஒரு சின்ன பாராட்டு கிடைத்திருந்தால்,அவன் கத்தியைத் தூக்கியிருக்க மாட்டான்.
என் வாழ்க்கையும் அப்படித்தான் திசை மாறியது.போதை அடிமையாக இருந்து மாறியிருக்கிறேன்.நல்லபடங்கள் எல்லாம் நல்லபுத்தகங்கள் போன்றவை.இந்தப்படம் அப்படிப்பட்ட படம் என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது….

விஜய்சேதுபதி சாரின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' முதல் அவரது எல்லா முக்கியமான படங்களிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம்.இந்தப்படத்திலும் இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது….

எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது.பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும்.நான் நன்றி சொல்வதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்.யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.முதலில் இந்தப்படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி.ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும்போது,பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பதுபோல் இருக்கும்.
நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால்,அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும்.மகிழ்ச்சியாக வருவோம்.கொண்டாட்டத்துடன் வருவோம்.நீங்கள் நின்று,பாராட்டி,கை கொடுத்து,கட்டிப்பிடித்து,நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் இரசிகர்களுக்கும் நன்றி.இந்தப்படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் இரசிகர்களுக்கும் மிக்க நன்றி.
உங்களுக்குப் பிடித்துவிட்டால் போதும்,தூக்கிக்கொண்டு செல்வீர்கள்.அதுபற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும்,அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள்.அனைத்து சமூகஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள்.அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது,நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.
இந்தக்கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை.அட்லீதான் நம்பினார்.சினிமா என்பது வியாபாரம்தான்.இதைக் குறையாகச் சொல்லவில்லை.இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள்.இயக்குநரைப் பற்றிப் பேசும்போது,அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள்.ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான்.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,சீதக்காதி,பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள்தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன்.ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்கவேண்டும் என்றார்.அவர் மேலும் உற்றுப்பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார்.அதனால் நடிக்கமுடியவில்லை.
சீதக்காதி,முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.கமல் சார்,அமிதாப் சார்,மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்கவேண்டிய கதை என்றார்.ஆனாலும் நான் நடித்தேன்.தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட,அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.
இங்கு நிறைய நபர்களை அடிப்பது,இந்தக் கூட்டமாக இருப்பது,இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை.ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம்தான் பத்தா.இது உணர்வுகளைச் சொல்கிற படம்.எனக்கு குழந்தைகள் பிடிக்கும்.ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின்போது சின்னபையன் சாய் உடன் நான் சரியாகப் பேசவில்லை,பழகவில்லை.ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்கவேண்டும்.ஒரு சகஜம் ஏற்பட்டுவிட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன்.அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப்படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது.அவன் திசைமாறிச் சென்றுவிடக்கூடாது.அவன் நன்றாகப் படிக்கவேண்டும் என்று சொல்வேன்.லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.நன்றி.என் சகோதரர்கள் ஹரி,ஜோதி,விஷ்ணு,பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது.ஆனால் இந்தப்படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார்.இப்படி அனைவரும் இந்தப்படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள்.அனைவருக்கும் நன்றி என்றார்.

நிறைவாகத் தயாரிப்பாளர் அட்லீ பேசும்போது….

எப்படி இருந்தாலும்,எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள்.நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள்.நியாயமாக இருக்கவேண்டும். கூட இருப்பவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.அந்த நேர்மை,நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.
பால் கெட்டுப் போனால்,தயிராகும்போது அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது.தயிர் கெட்டுப் போனால்,நெய்யாகும்போது அது மேலும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது.இப்படித்தான் வாழ்க்கையிலும் சில கெட்ட அனுபவங்களால் நாம் அடுத்தகட்டத்திற்குச் செல்வோம்.கடவுள் வழி தவறவிட்டார் என்றால்,அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம்.அப்படிப்பட்ட பத்தாவின் அனுபவம்தான் இந்தப்படம்.
நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.அதற்கு திமிர் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் சின்னவயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால்,யாரும் நம்பமாட்டார்கள்,சிரிப்பார்கள்.ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால்,யாரும் நம்பமாட்டார்கள்,சிரிப்பார்கள்.அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது.இன்று பாலிவுட்வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.
நான் கறுப்பாக இருக்கிறேன்,மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன்.அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம்.ஆனால் இதைப்பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க்கொண்டே இருப்பேன்.
இந்தப்படத்தைப் பொறுத்தவரை,நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.
சிலரை மறக்கவே முடியாது.அப்படிப்பட்டவர்தான் விஜய்சேதுபதி அண்ணன்.அவர் நல்லமனிதர்,நல்லநடிகர் என்பதைவிட,முதலில் நல்ல மனிதர்.அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.அவரைப்பற்றி ரஜினி சார்,ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.
இன்று விஜய்சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும்.அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன்.கமல் சார்,விஜய்சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் 'மருதநாயகம்' படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை.அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம்.ஆனால் நாங்கள் இலண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக்கலைஞர்களையே இவரது இசைக்குறிப்புகளுக்கு வாசிக்கவைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர்.நான் இங்கு சொல்கிறேன்,அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார். இப்படம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும்,மேலும் வெற்றிபெற வைக்கவேண்டும் என்று நான் மக்களைத் தேடிச்செல்கிறேன்.அது குறைவானதல்ல.மக்களை நோக்கிச் செல்வது உயர்வான விசயம்

இவ்வாறு அவர் பேசினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinemavalai