Dailyhunt
எல்ஐகே படத்துக்கு நயன்தாரா செய்த உதவி மிகப்பெரியது - விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சி

எல்ஐகே படத்துக்கு நயன்தாரா செய்த உதவி மிகப்பெரியது - விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சி

Cinema Valai 1 week ago

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல் ஐ கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).

இப்படம்,சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்றப் போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட்,இளம் தலைமுறையைக் கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து,தமிழ்சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிருத்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரி கிஷன்,ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அனிருத் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புப்பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொள்ள, கலைஇயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை டி.முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து வழங்குகிறார்.மேலும் இந்தப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.

இந்தப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

இந்நிலையில், இப்படத்தின் முன்வெளியீட்டு விழா, தனியார்கல்லூரி அரங்கில்,ஆயிரக்கணக்கான இரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில் ஏப்ரல் 7 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ் பேசியதாவது..,

இந்தப்படத்தில் வேலைசெய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒருபடம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்லநினைவுகள் இந்தப்பயணத்தில் கிடைத்தன.அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் மனதில் நிற்கிறது.இந்தப்படத்தின் கதையை விக்னேஷ்சிவன் சொல்லியபோது,எப்படி எடுக்கமுடியும்? என எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
இப்படிப்பட்ட ஒரு கான்செப்ட்டை எப்படி படம் ஆக்கப்போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது.ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் வேலை எவ்வளவு இருக்கும் என்று புரிந்ததால்,இந்தப்படம் எப்போது முடிந்து ரிலீஸ் ஆகும் என்ற பயமும் உள்ளுக்குள் இருந்தது.
இந்தப்படம் முழுவதும் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் உருவாகியுள்ளது.அதனால் ஒவ்வொரு லொக்கேஷனும், ஒவ்வொரு காட்சியும் கணினிகிராபிக்ஸ் மற்றும் ஆர்ட்வேலைகளால் உருவாக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.ஒவ்வொரு ஷாட்டும் பெரிய சவாலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒரு பயம் இருந்தது.ஆனால் இயக்குனர் விக்கி ப்ரோ மிகவும் சிறப்பாக அதை கையாண்டு, படத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் இசை உருவாக்கப்பட்ட விதமும் எனக்கு ஒரு புதியஅனுபவமாக இருந்தது.சாதாரணமாக முதலில் பாடல் உருவாகி, அதற்கேற்ற காட்சிகள் எடுக்கப்படும்.ஆனால் இங்கு முதலில் காட்சிகள் எடுக்கப்பட்டு,அந்தக் காட்சிகளுக்கு ஏற்றபடி வரிகள் எழுதப்பட்டு,அதன்பிறகே பாடல் உருவாக்கப்பட்டது.இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஒரு பாடலுக்கான எடிட்டிங் அனுபவம் எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் ஒன்று.இரவு எட்டுமணிக்கு எடிட் செய்ய ஆரம்பித்த நான், முடிக்கும்போது காலை மூன்று நான்கு மணி ஆகியிருந்தது.நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த வேலை இருந்தது.குறிப்பாக காட்சிகளுக்கும் வரிகளுக்கும் இடையே இருந்த பொருத்தம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
இந்தப்படத்தில் நடித்த நடிகைகள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர்.அவர்களின் நடிப்பு இந்தப்படத்திற்கு பெரியபலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
ஒருபடம் உருவாக்கும் போது எப்போதும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற உணர்வு இருக்கும்.ஆனால் இந்தப்படத்தைப்
பற்றி நீங்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவது எங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தருகிறது.அதனால் நாங்களும் இந்தப்படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். நன்றி என்றார்.

கலைஇயக்குநர் முத்துராஜ் பேசியதாவது..,

இந்தப்படத்தில் வேலை செய்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.முதலில் பிரதீப்பைப் பற்றிச் சொல்லவேண்டும்.அவருடைய தொடர்ச்சியான வெற்றியை எல்லாரும் பேசுகிறார்கள்.ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலேயே அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாக இன்றைய இளைஞர்களுடன் வேலை செய்யும்போது, அவர்கள் வெற்றிக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு வெற்றி கிடைத்த பிறகு அதை தொடர்ந்து நிலைநிறுத்த எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் பார்க்கமுடிகிறது. அதனால் பிரதீப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அனிருத் குறித்துச் சொல்லவேண்டும் என்றால்,அவரைப் பார்க்கும்போது எனக்கே நான் இளமையாக இருப்பதுபோல் உணர்கிறேன்.இந்தப்படத்தில் அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்தது.உண்மையாகவே இந்தக்கூட்டணி மிகச்சிறப்பாக வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.
ரவிவர்மன் என் நண்பர்.அவர் ஒளியிலேயே ஓவியம் வரைவதுபோல காட்சிகளை உருவாக்குவார்.பல ஒளிப்பதிவாளர்களுடன் எனக்கு வாதம் வருவது உண்டு.ஆனால் ரவிவர்மனுடன் அந்த வாதம் வேறுவிதமாக இருக்கும்.சிலசமயம் அவர் கண்டினியூட்டியை அதிகமாக கவனிக்காமல்,அந்த ஒரு ஃப்ரேமின் அழகை முன்னிலைப்படுத்துவார்.அதனால் சிறிய விசயங்கள் தவறிவிடலாம்.ஆனால் அந்தக்காட்சி மிக அழகாக இருக்கும்.அதையும் அவர் உடனடியாக,மிக வேகமாக உருவாக்குவது உண்மையிலேயே ஆச்சரியமான விசயம்.இந்தப்படத்திற்கு அவர் ஒரு பெரியபலம்.
விக்கி பற்றிச் சொல்லவேண்டும் என்றால்,ஒரு இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆகிய இரண்டையும் சமநிலையாகச் செய்துகொள்வது மிகவும் அரிது.ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.கதையை கட்டுக்கதையாக மட்டும் சொல்லாமல்,அதை தொடர்ந்து மேம்படுத்தி, ஒவ்வொரு காட்சியிலும் இன்னும் சிறப்பாகக் கொண்டு வருகிறார்.அவர் எந்தப் பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஒருபடம் எடுக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது.அது கண்டிப்பாக நிச்சயம் நடக்கும்.அவர் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்.
இந்தப்படம் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டது.இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு ரோபோட் என்ன செய்யவேண்டும்
என்பதையே திட்டமிட்டு யோசித்துக் கொண்டிருந்தோம்.ஆனால் படம் வெளியாவதற்குள் அதே ரோபோட் லுங்கிகட்டி நடனம் ஆடும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.அந்தஅளவுக்கு உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
இனிவரும் காலத்தில் எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும்.குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.அதற்கு நாம் அடிமையாகிவிட்டால்,நம்மால் நிலைத்திருக்க முடியாது.இது சினிமாதுறைக்கு மட்டுமல்ல,எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும் ஒரு விசயம்.இதை நான் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.இந்தப்படம் கண்டிப்பாக பெரியவெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.நன்றி என்றார்.

இயக்குநர் ராம் பேசியதாவது..,

நான் விக்கியின் பெரிய இரசிகன்.விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன்.அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்துக்கு வந்த விக்கியும்,இன்று 2026 இல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ்சிவனும் - அந்தப்பயணத்தைப் பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.
விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை.அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடினஉழைப்பின் மூலம்தான் கிடைத்தது.அவர் யோசிக்கும் கதைகள் சாதாரணமானவை அல்ல.வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளைத் தேர்ந்தெடுத்து,ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ்சிவனின் அடையாளம்.
தமிழ்சினிமாவில் யாராவது ஒருவரால் 3 இடியட்ஸ் அல்லது முன்னாபாய் எம்பிபிஎஸ் மாதிரி மனதைத் தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால்,அது விக்னேஷ்சிவன்தான் என்று நான் நம்புகிறேன்."நானும் ரௌடி தான்" கதையை படம் எடுக்கும் முன் பலமுறை கேட்டிருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அதைக் கேட்டபோது சிரித்திருக்கிறேன்.அந்தக்கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம்.ஆனால் அந்தநேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
அந்தசமயத்தில் விஜய்சேதுபதியிடம் சொல்லச் சொன்னேன்.அவர் விக்கிக்காக மட்டுமல்ல,பல இளம்இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கித் தந்தவர்.விக்கியின் வாழ்க்கையில் "நானும் ரௌடிதான்" ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.அதன்பிறகு அனிருத் சேர்ந்தார்,"தங்கமே" பாடல் வந்தது,நயன்தாரா வந்தார் - எல்லாமே ஒரு புதியபாதையை உருவாக்கியது.
இந்தப்படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது.காதல் என்பது மிகவும் விசித்திரமானது,அழகானது,யாராலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.அது ஒரு மின்னல்போல திடீரென வந்துவிடும்.அந்த ஒரு தருணத்தில் கையைப் பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும்.அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.
எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது.அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும்.காதல் என்பது உண்மையும்,சிலசமயம் சிறியபொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு.அந்தச் சிறியபொய்களையே நாம் உண்மையாக நம்புவதுதான் காதல்.
இப்போது நாம் யாரையும் பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம்.இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரைப் பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல்,அவரைப்பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது.உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்தச் சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல்தான்.விக்கி இந்தமாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு "விக்கி, லக்கிபாய்" தான்.அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும்,சந்தோசமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றிச் சொல்லவேண்டும்.அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பலமடங்கு அதிகம்.அவர் விக்கியைத் திட்டினாலும்,பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும்.விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதேஉயரத்தில் படமாக்குகிறார்.தமிழ்சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு.
தமிழ்சினிமாவின் பெரியபலம் என்னவென்றால்,எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடையமுடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.அதற்கு உதாரணம் பிரதீப்.அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி என்றார்.

நடிகர்,இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசியதாவது..,

இங்கே வந்திருக்கும் அனைவரையும் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது.நான் இங்கே இருக்கிறதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நயன்தாரா.மூன்றுநாள் முன்னாடி அவர்தான் என்னை அழைத்தார்.நேற்று,இன்றும் இந்த இயக்குநர் என்னை அழைக்கவில்லை.அவர் என் நண்பர்தான்.ஆனால் அவருக்கு இப்போது தலைக்குமேலே நிறைய வேலை இருக்கும். அதனால் அழைக்க முடியாமல் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இந்தப்படத்தின் கதையை நான் 2012,2013 காலத்திலிருந்தே தெரிந்தவன்.விக்னேஷ்சிவனை நான் 2011-12 காலத்திலிருந்து அறிவேன். சினிமாவில் எனக்கு இருக்கும் சில நண்பர்களில் மிகவும் முக்கியமானவர் அவர்.விக்னேஷ்சிவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவரை நிறையபேர் விரும்புகிறார்கள்.நயன்தாராவும் அவரை மிகவும் விரும்புகிறார்.நான் அவர்களுடைய காதல் எப்படி ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக வளர்ந்தது என்று நேரில் பார்த்தவன்.
முதலில் அவர் வந்து சொன்னபோது நான் நம்பவே இல்லை."உண்மையா?" என்று கேட்டேன்.பிறகு நயன்தாராவிடமும் கேட்டேன். அவர் "ஆமாம்" என்றார்.அந்தநாள் முதல் இன்றுவரைக்கும் அவர்கள் இருவரும் ஒரேமாதிரியான காதலோடு இருக்கிறார்கள்.அது மிகவும் அழகானது.அவர்களுக்கு வாழ்த்துகள்.
இந்தப்படத்தில் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள்.முதலில் பிரதீப்ரங்கநாதன் பற்றிச் சொல்லவேண்டும்.நான் அவரை நீண்டநாளாகவே அறிவேன்.அவர் மிகவும் திறமையானவர்.இன்று தமிழ்சினிமாவில் யாருடைய இரசிகன் என்று கேட்டால்,நான் பிரதீப்ரங்கநாதன் இரசிகன் என்று சொல்லுவேன்.அவர் இன்னும் பல ஆண்டுகள் பெரியநட்சத்திரமாக இருப்பார் என்று நம்புகிறேன்.
அனிருத் பற்றிச் சொல்லவேண்டும்.இந்தப்படத்துக்கும் அவருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது.ஒருகாலத்தில் நாங்கள்
சேர்ந்து ஒருபடம் செய்ய நினைத்தோம்.அது நடக்கவில்லை.ஆனால் அந்தநேரத்தில் அவர் செய்த உதவி நான் மறக்க முடியாதது.அவர் எனக்கு ஒரு தம்பிமாதிரி.விக்னேஷ்சிவனின் பயணத்திலும் அவர் ஒரு பெரியஆதரவாக இருந்திருக்கிறார்.
கிரித்தி ஷெட்டி,உங்களை நான் சமூகவலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன்.நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள்.இந்தப்படம் தமிழில் உங்களுக்கு ஒரு பெரியவெற்றி தரட்டும்.கவுரி,உங்களுக்கும் வாழ்த்துகள்.மாளவிகா மேடம்,நீங்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பீர்கள்,இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள்.தமிழ்சினிமாவுக்கு மீண்டும் வரவேற்கிறேன்.
இந்தப்படத்தின் எடிட்டர் மிகவும் திறமையானவர்.இந்த தலைமுறையின் முக்கியமான எடிட்டர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன்.இன்னும் நிறைய சிறந்த வேலைகளை செய்யவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்தப்படம் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்ட ஒன்று.நான்கு வருடங்கள் ஒரு பாடம் படிப்பதுபோல இந்தப்படத்திற்காக உழைத்திருக்கிறார்கள்.இப்போது அந்தமுயற்சியின் பலனைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.விரைவில் திரையரங்குகளில் வந்து இந்தப்படத்தைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.
விக்னேஷ்சிவன்,நீங்கள் ஒரு அசாதாரணமான திறமை கொண்டவர்.தமிழ்சினிமாவில் உண்மையான படைப்பாளிகளில் ஒருவர்.நீங்கள் எப்போதும் புதிதாக யோசிப்பவர்.நகைச்சுவை,காதல்,பாடல்கள் - எல்லாமே உங்களிடம் சிறப்பாக இருக்கும்.இந்தப்படத்திலும் அதைப்பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி.தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்தப்படம் பெரியவெற்றி பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சி தரட்டும்.நன்றி என்றார்.

நடிகை கௌரிகிஷன் பேசியதாவது..,

முதலில்,இந்தப்படம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பானது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் இந்தப்படம் முக்கியமானது. ஆனால் இந்தப்படம் எங்கள் எல்லாருக்கும் கற்றுக்கொடுத்த ஒரு பெரியவிசயம் "பொறுமை". காத்திருப்பது,தொடர்ந்து காத்திருப்பது - இந்தப்பயணம் முழுவதும் காத்திருப்பிலேயே சென்றது.ஆனால் சினிமாவை புதியஅளவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்றால்,அது நேரம் எடுத்துக்கொள்ளும்.அதனால் இந்தக் காத்திருப்பு கண்டிப்பாக மதிப்புடையதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
"கல்கி" என்னும் கதாபாத்திரம் - நான் முதல்முறையாக ஒரு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறேன்.அந்தமாதிரி ஒரு வேடத்தில் என்னைத் தேர்வு செய்ததற்காக இயக்குநர் விக்கி சாருக்கு மிகப்பெரிய நன்றி.அந்த கதாபாத்திரத்தில் என்னைக் கற்பனை செய்தவர் அவர்தான்.எனக்கே அந்த நம்பிக்கை இல்லை."சார், நீங்கள் உறுதியாக இருக்கீங்களா?" என்று கேட்டேன்.எல்லாரும் என்னை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்த்திருக்கிறார்கள்.ஆனால் அவர்,"அதை உடைக்கணும்,நீ உன் வசதியான ரோல்களில் இருந்து வெளியே வரணும்" என்று சொன்னார்.
ஒரு இயக்குநரிடமிருந்து அந்தஅளவுக்கு நம்பிக்கை கிடைப்பது எனக்கு மிகவும் முக்கியமானது.எப்போதும் இனிமையான சிரிப்புடன், மிகச் சந்தோசமாக இருப்பவர்.நான் அவருடைய பிரியமான நடிகைதான் என்று எப்போதும் எனக்கு உணரவைத்தார்.அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
கிரித்தி ஷெட்டி - என் செல்லம். எல்லாரும் சொல்வார்கள்,"அவர் ரொம்ப பர்ஃபெக்ட்,நிஜமா இப்படியா இருக்கமுடியும்?" என்று. ஆனால் அவர் உள்ளும் புறமும் அதேமாதிரி உண்மையானவர்.இவ்வளவு இளமையில் அவருடைய திறமை,ஒழுக்கம்,அர்ப்பணிப்பு - என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.இந்தப்படத்தில் அவருடன் வேலைசெய்தது எனக்கு ஒரு நல்லஅனுபவமாக இருந்தது.
பிரதீப் - நீங்கள் இப்போது ஒரு தனிஅடையாளமாக மாறிவிட்டீர்கள்.ஒரு இயக்குநராக இருந்தாலும்,நடிகராக வரும்போது முழுமையாக அந்தக்கதாபாத்திரத்திற்கு உங்களை ஒப்படைத்துவிடுகிறீர்கள்.தேவையான சமயத்தில் மட்டும் உங்கள் கருத்துகளைச் சொல்வீர்கள்.அது மிகவும் முதிர்ந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன்.அந்தக்குணத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.
எஸ்.ஜே.சூர்யா சார் இங்கே இல்லாதது வருத்தமாக இருக்கிறது.ஆனால் அவர் இந்தப்படத்தில் காட்டிய ஸ்டைலும், நடிப்பும் மிகவும் சிறப்பானது.ரவிவர்மன் சார் - அவருடைய காட்சிகள் ஒப்பிட முடியாதவை.ஒரு நடிகையாக,அவருடைய ஃப்ரேம்களில் இடம்பெறுவது ஒரு கனவு.என் பயணத்தின் ஆரம்பத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
மாளவிகா மேம்,மிஷ்கின் சார்,சாரா அண்ணா,யோகி பாபு சார் - என் எல்லாக் கூட்டணி நடிகர்களுக்கும்,இயக்குநர்குழுவுக்கும் என் நன்றி.
எனக்கு எப்போதும் ஓடிச்சென்று பேசக்கூடிய ஒரேமனிதர் பாரு.அவள் எல்லா விசயங்களிலும் முழுமையாக ஈடுபட்டு வேலை செய்கிறாள்.இந்தப்படத்தின் பின்னால் நிறையப்பேர் உழைத்திருக்கிறார்கள்.வெளியில் நீங்கள் பார்க்கிறதை விட பலமடங்கு உழைப்பு இருக்கிறது.அந்த எல்லாவற்றிலும் பாரு எனக்கு ஒரு பெரியஆதரவாக இருந்தார்.உங்களுக்கு இன்னும் பெரியவிசயங்கள் நடக்கப்போகிறது என்று நான் நம்புகிறேன்.இந்தப்படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

ரொம்பநாளைக்கு அப்புறம் ஒரு மேடையில் நிற்கிறேன்.உண்மையிலேயே மேடைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன்.ஆனா விக்கி "நீங்கள் கண்டிப்பாக வரணும்"ன்னு சொல்லியதால் வந்தேன்.இங்கே நின்று பேசுவதில் எனக்குப் பெருமை.
இந்தப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து விக்கிக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகள் வந்துகிட்டே இருந்தது.தயாரிப்பாளர் அமைத்தது, காஸ்டிங்,ரிலீஸ் டேட் - எல்லாமே சுலபமாக நடக்கவில்லை.நானும் இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டபோது இல்லைன்னு சொன்னேன். பிறகு ஒரு தொகை சொன்னேன்.அதுவும் முடியல.அதற்கப்புறம் வேறுநடிகர் வந்தார்.ரிலீஸ்டேட்டும் பலமுறை மாறியது.நேற்று நிகழ்ச்சிக்கும் மழை.இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் அவர் சந்தித்திருக்கிறார்.ஆனால் இந்த எல்லாக் கஷ்டங்களும் அவருக்குப் பெரிய வெற்றியாகத் திரும்பும்.இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நம்புகிறேன்.
தமிழ்சினிமாவில் மிகவும் நேர்மையான இயக்குநர்களில் ஒருவராக நான் நினைப்பவர் ராம்.விக்கிக்கும் ராமுக்கும் நல்ல நட்பு இருக்கிறது.ராம் எங்கே போனாலும் விக்கியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்.
விக்கி ஒரு விசித்திரமான மனிதர்.வெளியில பார்த்தால் சிம்பிளாக இருப்பார்.ஆனா உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி.ரொம்ப நுட்பமான மனசு.அவர் வாழ்க்கையை ஒரு கலைப்படைப்பாகப் பார்க்கிறார்.வீட்டிலேகூட ஒவ்வொரு பொருளையும் அவர் தனியாக தேர்வு செய்வார்.மிகவும் அழகாக,இரசனைக்குட்பட்டு வாழ்கிறவர்.
விக்கி ஆரம்பத்தில் ஒரு இசைக்கலைஞர்.தாளவாத்தியக்காரர்.அதற்கப்புறம் பாடல் எழுத ஆரம்பித்தார்.உண்மையில் ஒரு கவிஞன். இந்தஉலகத்தை நேசிக்கும்,அதில் அழகைக் காணும் ஒரு மனிதர்.இந்தப்படத்தில் எல்லாப்பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். ஒரு இயக்குநர் தனது படத்துக்குப் பாடல் எழுதுகிறார் என்றால்,அந்தப்படத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கே அது சாட்சி.
இந்தப்படம் அவருக்கு மிகவும் முக்கியமானது.பல வெற்றிப்படங்கள் இருந்தாலும், இந்தப்படத்திற்காக அவர் மிகுந்த பாடுபட்டிருக்கிறார். சினிமா என்பது ஒரு பெரியமலை.அதில் ஏறுவது எளிதல்ல.எவ்வளவு பெரியவர்களுக்கும் சினிமா எப்போதும் சவாலாகத்தான் இருக்கும்.அதனால்தான் அது இன்னும் உயரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.இந்தப்படத்தில் நான் ஒரு சிறியகதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.விக்கி என்னை மிகவும் நேசிப்பதால்தான் என்னை அழைத்தார் என்று நினைக்கிறேன்.அவர் அழைத்தால்
நான் வராமல் இருக்கமுடியாது.
விக்கி எப்போதும் எதிர்காலத்தை நினைப்பவர்.நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர் இல்லை.நாளை எப்படி இருக்கும் என்று யோசிப்பவர். இந்தப்படமும் அப்படித்தான். மிகவும் சிந்தித்து,தேர்ந்தெடுத்து உருவாக்கிய ஒன்று.நீங்கள் இந்தப்படத்தைத் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.
இந்தப்படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கிறது.குறிப்பாக "தீமா" பாடல் மிகஅழகாக இருந்தது.இன்றைய காலத்தில் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் மாதிரி பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.அந்தவரிசையில் இந்த அனிருத் பெரியஉயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.சர்வதேச அளவுக்குப் போவார்.
பிரதீப் ஒரு நல்லமனிதர்.மிகவும் நேர்மையாகவும் அன்பாகவும் வேலை செய்கிறார்.அவர் ஒருநடிகர் மட்டும் இல்லை,ஒரு இயக்குநராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார்.இந்தப்படத்தில் அவர் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.மிகவும் தீவிரமான நடிகர்.இந்தப்படத்தை அவர் தனது தோளில் தூக்கிச்செல்கிறார்.
எஸ் ஜே சூர்யா சார் ஒரேஒரு விசயத்தைத் தெளிவாக முடிவுசெய்தவர்."சார்,என் வாழ்க்கையில் நான் நடிகனாகவே வரணும்.இயக்கம் எனக்கானது இல்லை.நான் நடிக்கத்தான் வந்தேன்" என்று சொல்லிட்டு வந்தவர்.அந்த ஒருமுடிவைப் பிடிச்சுக்கிட்டு,எவ்வளவு கஷ்டப்பட்டு,இன்று தமிழ்சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய பெரிய சாதனை.
அதுக்கப்புறம் இந்தப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் - மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.நான் முழுப்படம் பார்க்கவில்லை,ஆனால் பார்த்த அளவுக்கு அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று தெரிகிறது.மாளவிகா,உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.என் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மறக்கமுடியாதது.உங்களை மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சி.இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.அனைவரும் திரையரங்கில் போய்ப்பாருங்கள்.விக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.

நடிகை மாளவிகா பேசியதாவது..,

என்னை இவ்வளவு அழகாக வரவேற்றதற்கு ரொம்ப நன்றி.நீங்கள் சொன்ன அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.இந்தப்படத்தின் ஒருபகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.இந்தவாய்ப்பைக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி. நான் இதுவரை 42 படங்களில் நடித்திருக்கிறேன்.ஆனால் என் குரலில் நான் டப்பிங் செய்த முதல்படம் இதுதான்.அதற்காக என்னை நம்பி இந்தவாய்ப்பு கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்
இந்தப்படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அருமையானது.குறிப்பாக இசை அற்புதமாக இருக்கிறது.அனிருத், நீங்கள்
மிகச்சிறந்த இசையமைப்பாளர்.எல்லாப் பாடல்களையும் நான் மிகவும் இரசித்தேன்.அதேபோல் அந்தப்பாடல்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றன.
பிரதீப்,கிரித்தி,கவுரி,யோகிபாபு சார் மற்றும் மற்ற அனைவருடனும் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.யாருடைய பெயரையும் தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும்.பிரதீப் ஒரு அற்புதமான நடிகர்.மிகவும் எளிமையாக,நடிப்பார்.ஆனால் அவரால் செய்யக்கூடிய விசயங்கள் மிகவும் பெரியவை.
இந்தப்படத்திற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டோம்.நிறைய நாட்கள் காத்திருந்தோம்.இந்தப்படம் எங்களுக்கு கற்றுக்கொடுத்த மிக முக்கியமான விசயம் பொறுமை.இப்போது இந்தப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.அதற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.நீங்கள் அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப்படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.நன்றி என்றார்.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,

நான் இப்போது ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன்.அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வரமுடியவில்லை.ஆரம்பத்தில் வேறுதிட்டம் இருந்தது,ஆனால் பிறகு அது மாற்றப்பட்டுவிட்டது.ஆனாலும் நீங்கள் எல்லாரும் அங்கே இருக்கிறீர்கள்,இந்த லைவ் மூலம் பார்க்கமுடிகிறது என்பதில் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.டிரெய்லர் பார்த்தீங்களா? எல்லாருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.உங்களின் ரியாக்ஷன்ஸ் கேட்கமுடியாதது கொஞ்சம் வருத்தம்தான்,ஆனால் பரவாயில்லை.
இந்தப்படம் ஒரு அருமையான படம்.விக்னேஷ்சிவன் சார் மிகவும் அழகாக,மிகவும் சிறப்பாக இந்தக்கதையை உருவாக்கியிருக்கிறார். எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல்கதையை அவர் மிகஅழகாகச் சொல்லியிருக்கிறார்.அனிருத் சார் இசை பற்றி சொல்லவே தேவையில்லை.ஒவ்வொரு பாடலும் அற்புதமாக இருக்கிறது.எல்லா ட்ராக்ஸும் சூப்பராக வந்திருக்கிறது.
பிரதீப் அருமையாக நடித்துள்ளார்.கிரித்தி ஷெட்டிக்கு வாழ்த்துகள்.நான் அங்கே இல்லாதது மட்டும் ஒரு குறை.ஆனாலும் உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் இந்தப்படத்துக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.இந்தப்படத்தைக் கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள்.ரொம்ப பிடிக்கும்.நன்றி என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,

நான் காலேஜ் படிக்கும்போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான்.அப்போதிலிருந்து விக்னேஷ்சிவன் சாருக்கு இரசிகன் நான்.அவர் என்னை வைத்து படம் என்றபோது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்.நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் - நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று.அதற்காக கதைகளையும் யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தநேரத்தில் "இது ஒரு ஃப்யூச்சர் படம்" என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட்.இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாகக் கொண்டு படங்கள் ரொம்ப குறைவு.அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே "சூப்பர்!"ன்னு உணர்வு வந்தது.
அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, "இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்"ன்னு சொன்னார்.மறுபடியும் எனக்கு அதே எதிர்பார்ப்பு.அந்தப்பாடல் ஒரு காதலிக்காகப் பாடப்படுவது.நம்ம பாட்டுத்திறமையைக் காட்டி அவளை ஈர்க்கிற மாதிரி ஒரு சூழல். நிஜமாக நான் பாடினா நீங்கள் இம்ப்ரெஸ் ஆகமாட்டீங்க.ஆனா அந்தக்காட்சில நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்தப்படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன்.
அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன்,இந்தப்படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன்.அதுக்கப்புறம் "அனிருத் மியூசிக்"ன்னு சொன்னதும் இன்னொருலெவல் சந்தோசம்.
இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும்.நானும் இந்தியன்தானே,எனக்கும் அந்த ஆசை இருந்தது.அது இப்போது நிஜமாயிற்று.தேங்க்ஸ் ப்ரோ.உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்பசந்தோசம்.
அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும்.ஆனால் நான் பார்த்தது - அவர் ரொம்ப நல்லமனிதர்.நல்கமனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க.அந்தவகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க.உங்களோட இன்னும் நிறையநேரம் செலவழிக்கணும்,இன்னும் நிறையபடங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது.
அடுத்து பிரதீப் ராகவ் - என்னோட நம்பிக்கையான எடிட்டர்.இந்தப்படத்தில் நிறைய புதியமுயற்சிகள் செய்திருக்கார்.எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார்.நீங்க ஒரு சிறந்த திறமைசாலி.
ரவிவர்மன் சார் - ஒரு ஜீனியஸ்.இந்தமாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப்போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது.உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது.
முத்துராஜ் சார் - இந்தப்படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரியவிசயம்.இந்தப்படம் பார்த்த பிறகுதான் உங்களோட வேலை முழுமையாகப் புரியும்.
எஸ்.ஜே.சூர்யா சார் பற்றி ஒருவிசயம் சொல்லணும்.நான் காலேஜ் முடிச்சபிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன்.அவரோட அலுவலகத்துக்குப் போய் ரெஸ்யூம் கொடுத்தேன்.போங்கன்னு சொன்னாங்க.ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன்.அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று.
அவர் பார்த்து "யார் அந்தப்பையன்?"ன்னு கேட்டார்.என்னை உள்ளே அழைத்தார்.நான் "உங்களிடம் உதவிஇயக்குநராகச் சேரணும்"ன்னு சொன்னேன். அவர் மீண்டும் "ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே,போங்க"ன்னு சொன்னார்.ஆனா அந்ததருணம் எனக்கு மறக்கமுடியாதது. நான் செய்த குறும்படம் பற்றிச் சொன்னேன் என்னிடம் நிறையக் கேள்வி கேட்டார்.நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார்.அவர் அன்று கேட்ட கேள்விகள்தான் என் வாழ்க்கையை மாற்றியது.
அந்தநாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன்.என் முதல்கதையில் அவரைத்தான் நடிக்க வைக்க முயற்சித்தேன்.அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது.என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.
இன்று அவருடன் இந்தப்படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோசம்.
சீமான் சாரிடம் நிறைய நல்லகுணங்கள் இருக்கின்றன.மற்றவர்களை மதித்துப்பேசுவது,அவர்களுக்கேற்ற விசயங்களை மட்டுமே பேசுவது -அது ஒரு பெரியகுணம்.அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளமாட்டார்.யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார்.அந்தகுணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன்.
அடுத்து கிரித்தி ஷெட்டி - ஒரு புதியமொழியைக் கற்றுக்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு நமக்கே தெரியும்.ஆனா அவங்க இரண்டு வருடத்துக்குள்ளே ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க.அதையும்தாண்டி இந்தப்படத்துக்கு அவங்களே டப்பிங் பண்ணியிருக்காங்க.இது ரொம்ப பெரியவிசயம்.இதற்காக அவங்க எடுத்த உழைப்பு ரொம்ப பாராட்டுக்குரியது.அடுத்து கௌரிகிஷன் - உங்களோட அந்த தைரியம்,உங்கள் கருத்தை நேராகச் சொல்லும்விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சது.நல்லா நடிக்கிறீங்க.வாழ்த்துகள்.
மாளவிகா மேம்,ஆனந்த்ராஜ் சார்,வீடிவி கணேஷ்,சாரா சார்,சுனில்ரெட்டி சார்,ரங்கராஜ்பாண்டே சார்,பிரசாந்த்ரங்கசாமி,அபிஷேக்ராஜா, தீபிகா,ரியாசுமன்,எழிலரசன்,ஆல்பர்ட்,கார்த்திக்கருப்பு - எல்லாருக்கும் என் நன்றி.
இந்தப்படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள்.மிஷ்கின் சார் - லவ் யூ சார். அம்ருதா ஐயர் - உங்களோட மீண்டும் வேலை செய்தது ரொம்ப சந்தோசம்.டான்ஸ் மாஸ்டர்ஸ் பாபா பாஸ்கர் சார்,சாண்டி மாஸ்டர்,ஜாலி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்,சுரேன் மாஸ்டர்,அனுஷா மாஸ்டர்,சக்தியேல் மாஸ்டர் - எல்லாருக்கும் நன்றி.என்னோட டீம் - ரமேஷ்,பிரசாந்த், அக்ஷி,பவித்ரா,எம்.எஸ்,சேகர் - உங்க எல்லாருடைய உழைப்புக்கும் நன்றி.
என்னோட தயாரிப்பாளர்கள் லலித் சார்,நயன்தாரா மேம்,விக்கி ப்ரோ - இந்தப்படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டமான விசயம். குறிப்பாக ஃப்யூச்சர் கான்செப்ட் படம் என்பதால் செலவுகளும் அதிகம்.கடந்த மூன்றுஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து,இந்தப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை.அதற்காக மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,

பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.அவர் பேசியதை மிஞ்சிப் பேசமுடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது.ஆனாலும் நான் நன்றி சொல்லவேண்டியவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,அதனால் அதைத்தொடர்ந்து சொல்லிக்கறேன்.
இந்தப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்.என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒருபடத்தில் நான் ஒருபகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது.
விக்னேஷ் சார்,என்னை "தீமா" ஆக்கி,இந்தப்படத்தில் ஒருபகுதியாகச் சேர்த்ததற்கு ரொம்ப நன்றி.இந்தப்படம்மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது - முத்துராஜ் சார், பிரதீப், ரவிவர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.
எல்லாரும் சொல்வது என்னவென்றால்,இதுதான் எனது இதுவரையிலான சிறந்த லுக்.அதற்கு முழுக்காரணம் ரவிவர்மன் சார் லைட்டிங்.அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள்.அதில் நான் இருந்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.
விக்னேஷ் சார்,இந்தப்படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.என் கரியரில் மறக்கமுடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
"தீமா"ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க.அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும்தான்.அந்த அழகான பாடல் காரணமாகத்தான் அது சாத்தியமானது.சிலவருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன்.என் விருப்பத்தில் அவர் எப்போதும் டாப்ஆர்டிஸ்ட்.இப்போது அவரோடு வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோசம். படம் பார்த்தபிறகு பலர் சொன்னது என்னவென்றால் "தீமா"கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று.அதற்கான முழுக்ரெடிட் விக்னேஷ் சாருக்கே.அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச்,எடுத்த முயற்சி - அதுதான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாகக் காட்டுகிறது.ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது,"உண்மையாவே வருமா?"ன்னு நிறையபேர் கிண்டல் பண்ணாங்க.ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் - நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்தபடத்தைக் கொடுக்கணும் என்பதுதான். ஒவ்வொரு சிறியவிசயத்திலும் கூட எவ்வளவு உழைப்பு போயிருக்கிறது என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன்.இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த டீடெய்லிங்.ஒவ்வொரு விசயத்திலும் போட்ட உழைப்பு.அதற்காக இந்தப்படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.
பிரதீப் - உங்க பயணத்தைப் பார்த்து எனக்கு ரொம்பப் பெருமை.இந்தப்படம் ஆரம்பிக்கும்போது "லவ்டுடே" வெளியே வரல.ஆனா இப்போ நீங்க ஒரு பெரிய ஸ்டார். அதுக்கு ரொம்ப தகுதியானவர்.நீங்க ஒரு நடிகர் மட்டுமல்ல,ஒரு ஸ்டார்னு நிரூபிச்சுட்டீங்க.
கவுரி - நீங்க ஒரு உண்மையான கேர்ள்ஸ் கேர்ள். செட்டில் எப்போதும் எனக்கு சப்போர்ட் பண்ணி,நான் கம்ஃபர்ட்டா இருக்கணும் என்று பார்த்துக்கிட்டீங்க.உங்களோடு வேலை செய்தது ரொம்பசந்தோசம்.மாளவிகா மேம் - உங்களோடு வேலை செய்தது ஒரு அருமையான அனுபவம்.
எஸ்.ஜே. சூர்யா சார் - நான் உங்கள் பெரிய இரசிகை. "மாநாடு" படத்திலிருந்து ரொம்பப் பிடிக்கும். வெங்கட்பிரபு சாரோட வேலை செய்தபோதுகூட உங்களை ஒருமுறை சந்திக்கணும் என்று கேட்டிருக்கேன்.இப்போ உங்களோட சேர்ந்து வேலைசெய்தது எனக்கு ஒரு பெரிய மரியாதை.அதைவிட முக்கியமானது - நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அது எனக்கு மிகப்பெரிய அனுபவம்.இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தைக் கொண்டாடுங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் விக்னேஷ்சிவன் பேசியதாவது..,

இந்தமேடை எனக்கு மிகவும் முக்கியமானது.நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல,என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்தநிலையும் - இந்த இரண்டும் எளிதாகக் கிடைக்கவில்லை.நான் கஷ்டப்பட்டுதான் இங்கே வந்திருக்கேன்.கடவுள் எல்லாருக்கும் நல்லவாழ்க்கை கொடுப்பார்.நான் கோயிலுக்குப் போவது,"இன்னும் கொடுங்கள்" என்று கேட்க அல்ல.ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்லவிசயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன்.அதனால்தான் இருக்கலாம் - என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்லஉணவு,நல்லவீடு,நல்லகுடும்பம்,நல்லமனைவி,நல்லகுழந்தைகள்,நல்லநண்பர்கள்,நல்லகுழு - இவை எல்லாம் கிடைத்தது.
நான் ஒருவன் மட்டும் இந்தமேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம்.ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறையபேர் இருக்கிறார்கள்.ஒரு பெரியபடம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.அது நடக்காமல் போனபோது,அது ஒரு கல்யாணம் நின்றதுபோல இருந்தது.அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டுவருவது மிகவும் கடினம்.அந்தநேரத்தில் எல்லாரும் "சின்னதாக பண்ணுங்கள்,சிம்பிளாக பண்ணுங்கள்" என்று சொல்வார்கள்.அது ஒருவகையில் நம்மைக் குறைவாக மதிப்பதுபோல தோன்றும்.ஆனால் நான் ஒரேஒரு விசயத்தை நம்பி இருக்கிறேன் - திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன்.அதுதான் என் நம்பிக்கை.ஏப்ரல் 10 ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்தமேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது.முதலில் மயில்வாகனம் சார்.நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தபோது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார்.ஆனால் வவுச்சரில் 150 இருந்தாலும்,கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார்.அப்போ நான் முடிவுசெய்தேன் - "நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்" என்று.அந்தநாளே நான் அவருடைய நம்பரை "மயில்வாகனம் - ப்ரொட்யூசர்" என்று சேவ் செய்தேன்.இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார்.இது என் நம்பிக்கை,என் மனதில் வைத்திருந்த விசயம்.
இந்தப்படம் ஆரம்பத்தில் 150-200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது.ஆனால் அது அப்படி நடக்கவில்லை.பலதடைகள் வந்தது.அந்தநேரத்தில் நான் சின்னதாக,சிம்பிளாக ஒருபடம் பண்ணினேன்.பிறகு ஒருநாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது.அப்போது நேப்பியர் பாலத்தை கருப்பு-வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம்.அந்தஇரவு எனக்கு ஒரு உணர்வு - "இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்" என்று. ஒரு இயக்குநருக்குக் கிடைக்கும் பெரியவரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்டமுடியும்.மழை வேண்டும்னா மழை வரும்.நிறுத்தணும்னா நிறுத்தலாம்.கனவுகளை நிஜமாக்க முடியும்.அப்படித்தான் இந்தப்படமும்.நான் பார்க்க விரும்பிய சென்னை,நான் கற்பனை செய்த எதிர்காலம் - எல்லாத்தையும் இந்தப்படத்தில் வைத்திருக்கிறேன்.
இந்தப்பயணத்தில் எல்லாமே ஒரேஇரவில் மாறிப்போன தருணங்களும் இருந்தது.அந்தநேரத்திலிருந்து இன்றுவரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சிலபேர் இருக்காங்க.இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை.என் கனவை நம்பியவர்கள்.நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரியஇடத்துக்குப் போவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, "உங்களை மீட் பண்ணணும்,கதை சொல்லணும்"ன்னு கேட்டேன். அவர் "ஓகே"ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.அடுத்தநாளே "பண்ணலாம்"ன்னு சொன்னார்.ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல.பெரியபட்ஜெட்,டிலே,டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு.அந்தப்படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.அங்கிருந்து வெளியே வந்து,எப்படியாவது இந்தப்படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன்.அந்தநேரத்தில் அவருக்கு வேறு பெரியவாய்ப்புகள் வந்தாலும்,எனக்காக அவர் அந்தவாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார்.அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப்.ஐ லவ் யூ.
அதுமட்டும் இல்லாமல்,இந்தப்படத்தில் அவர் நடித்த விதம் - டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக்கொண்டிருந்தோம்.ரொம்ப எமோஷனல் சீன்.அந்தநேரத்தில் வெளியில பெரியகுழப்பம்,சண்டை,சத்தம்.எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க.அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் "எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்"ன்னு சொல்வாங்க.ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையை புரிஞ்சுக்கிட்டு, திரும்பத்திரும்ப டேக் கொடுத்து,"பண்ணலாம் ப்ரோ"ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார்.அந்தநேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல,ஒரு டைரக்டரா என்னோட வலியைப் புரிஞ்சுக்கிட்டு வேலைசெய்தார்.அந்த இன்டர்வல் சீனை நான் இப்போ பார்க்கும்போது,"இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா,எதுவும் முடியும்"ன்னு தோணும்.அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் - ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுகிட்டேன்.என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன்.நான் சிலநேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன்.ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார்.அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.
அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்கமாட்டார்.ஆனா நான் சொல்லவேண்டியது
சொல்லிடுவேன்.ஒருநாள் நான் பணமில்லாமல் இருந்தபோது,பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான்.நான் போயிட்டேன்.அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் - "உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்"ன்னு.எனக்குத் தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார்.அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்கமுடியாது.அவரோட இசை மட்டும் இல்ல,அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட்.இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.
பின்னர் இந்தப்படத்தின் ப்ரொடக்ஷன்- மலேஷியா ஷூட்டிங்.எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன்.பட்ஜெட் பிரச்சனை."சில விசயங்களை குறைக்கணும்"ன்னு சொன்னாங்க.ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் - "ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்கமாட்டேன்"ன்னு.அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு.அப்போதுதான் தெரியும் - அந்தப் பணம் எல்லாம் மூக்குத்திஅம்மன பட அட்வான்ஸ் என்று, எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப்படம் நடக்குது என்று தெரிந்தது.அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா.ஒரு மனைவி,ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது.சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்.ஆனால் இந்தப்படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து,இரண்டுநாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணிவைத்தார்.இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல…ஆனா இந்தப் படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி.கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinemavalai