Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருப்பு - திரைப்பட விமர்சனம்

கருப்பு - திரைப்பட விமர்சனம்

Cinema Valai 2 weeks ago

றுபது பவுன் நகையைத் தொலைத்துவிடுகிறார் ஒருவர்.அவற்றில் 45 பவுன் மீட்கப்பட்டதாகவும் அதை நீதிமன்றத்தின் மூலம் மீட்டுக்கொள்ளலாம் என்று காவல்துறை கூறுகிறது.அதற்காக ஒரு வழக்குரைஞரை நாடுகிறார் பாதிக்கப்பட்டவர்.அந்த வழக்குரைஞரோ,பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி கதறவிடுகிறார்.நடைமுறை சாத்தியங்கள் அற்றுப் போகும்போது நாடும் கடைசி புகலிடம் கடவுள்.எனவே,நீதிமன்றத்தின் வாயிலில் இருக்கும் கருப்பசாமியிடம் முறையிடுகிறார் பாதிக்கப்பட்டவர்.அவருடைய முறையீட்டை ஏற்று நேரில் வரும் கருப்பசாமியின் அதிரடிகளே கருப்பு திரைப்படம்.

கருப்பசாமியாகவும் வழக்குரைஞராகவும் நடித்திருக்கும் சூர்யா,அடித்து ஆடியிருக்கிறார்.எல்லாப் பந்துகளிலும் சிக்சர் என்பதுபோல் எல்லாக் காட்சிகளிலும் வரவேற்புப் பெறுகிறார்.அவருக்குள் உண்மையாகவே கருப்பசாமி புகுந்துவிட்டாரோ என்று நினைக்குமளவுக்குக் காட்சிகளில் அதிர்வு இருக்கின்றது.

ஏமாளிகளையும் ஏமாற்றும் கொடூர மனம் கொண்ட வழக்குரைஞர் வேடமேற்றிருக்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி.உடல்வலிமை காட்டக்கூடிய வேடமில்லை மூளைஉழைப்பைக் கேட்கக்கூடிய வேடமென்பதால் அவரே அதை ஏற்றிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் இந்திரன்ஸ், இதுபோன்ற எளிய மக்களின் மொத்த வடிவமாகத் தோன்றுகிறார்.இந்தவேடத்தின் நம்பத்தன்மைதான் ஒட்டுமொத்தப் படத்தையும் காப்பாற்றக்கூடியது என்பதை அறிந்து அவர் நடித்திருக்கிறார்.அதனால் பல இடங்களில் கலங்க வைத்திருக்கிறார்.

இப்படத்தில் த்ரிஷா இருக்கிறார்.அவரும் ஒரு வழக்குரைஞராக நடித்து கவனம் ஈர்க்கிறார். நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் கருப்பு வரும் காட்சிகள் இரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்து திரையரங்குகளையும் திருவிழாக் கோலத்துக்கு மாற்றியிருக்கின்றன.முழுக்க முழுக்க நீதிமன்றம் சார்ந்த காட்சிகள் என்றாலும் சிறிதும் சலிப்புணர்வு ஏற்படாத வண்ணம் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் துள்ளலாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசை பல இடங்களில் நன்று என்றாலும் சில இடங்களில் கொஞ்சம் அடக்கிவாசித்திருக்கலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சண்டைப்பயிற்சி இயக்குநர் விக்ரம்மோர் உழைப்பில் படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் வியக்க வைக்கின்றன.

ஆர்.கலைவாணனின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்தப் பயன்பட்டிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி,சிறுதெய்வங்கள் மீது வெகுமக்களுக்கு இருக்கும் இறுக்கமான பிணைப்பை அடிநாதமாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்.அதுவே படத்தின் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.

- கதிரோன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinemavalai