Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சண்டக்காரி - திரைப்பட விமர்சனம்

சண்டக்காரி - திரைப்பட விமர்சனம்

Cinema Valai 3 days ago

லண்டன் மாநகரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தின் உயரதிகாரியாக இருக்கும் நாயகி ஸ்ரேயாவுக்கும் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றும் நாயகன் விமலுக்கும் பனிப்போர்.ஒருகட்டத்தில் உயரதிகாரியாக இருக்கும் ஸ்ரேயாவுக்கு விமலின் உதவி கட்டாயமாகத் தேவைப்படுகிறது.அதற்காக அவர் இறங்கிவர அதைப்பயன்படுத்தி அவரைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்.அதன்பின் என்ன நடந்தது?

என்பதைச் சொல்லியிருக்கும் படம் சண்டக்காரி.

நாயகன் விமல்,தமிழ்நாட்டு கிராமத்து இளைஞன் வேடத்துக்கு எவ்வளவு பொருத்தமாக இருப்பாரோ அதேஅளவு இலண்டனில் ஒரு பெரியநிறுவனத்தின் ஊழியராகவும் பொருத்தமாக இருக்கிறார்.ஸ்ரேயாவின் கோபம் கண்டு குமுகிற இடங்கள்,அவருடன் குழைகிற இடங்கள் உட்பட எல்லா நேரங்களிலும் தன்னுடைய தனித்துவத்தை நிறுவுகிறார்.

ஸ்ரேயா,தலைப்புக்கேற்ற அழகான நடிப்புக்காரி என்பதை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார்.இந்தப்படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார்.

விமலின் அப்பாவாக நடித்திருக்கும் பிரபு,அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன்,ஸ்ரேயாவின் நண்பியாக நடித்திருக்கும் புன்னகைப் பூ கீதா,சத்யன்,கே.ஆர்.விஜயா,ரேகா,தேவ் கில்,கிரேன் மனோகர்,மகாநதி சங்கர் ஆகியோரின் வேடங்களுக்கேற்ற நடிப்பு,அவர்களுக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவுக்கு,இலண்டன் மாநகரத்தையும்,தமிழ்நாட்டு கிராமத்தையும் படமாக்க வேண்டிய வாய்ப்பு.அதனதன் இயல்பு கெடாமல அதேநேரம் அவற்றை மேம்படுத்தியும் காட்டி நல்ல காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார்.பாடல்காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறார்.

அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார்.அவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டு இரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன. பின்னணி இசையில் காட்சிகளின் தன்மைகளை மட்டுமின்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்,இயக்குநரின் மனவோட்டத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டுமென்கிற நோக்கத்திலேயே பணியாற்றியிருக்கிறார்.

ஆர்.மாதேஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.இந்தப்படம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன,நிறைவுற்று சில ஆண்டுகள் ஆகின்றன என்பது காட்சிகளில் மட்டுமின்றி கதையிலும் வெளிப்படுகிறது.என்னதான் உதவியாளராக வேலை செய்தாலும் அவர் நாயகன்,என்பதற்காகவே அவருக்கு ஒரு மறைமுகத் திட்டம் இருக்கிறது,அதை நிறைவேற்றுவதற்காக இறங்கிப்போகிறார் என்று நாயகனின் தன்முனைப்புக்குக் குறைவு வந்துவிடாமல் திரைக்கதை எழுதப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

அழகான,திறமையான பெண் மட்டுமின்றி கோபத்தைக் கொண்டாடும் ஒரு பெண்ணின் மனதில் காதல் வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? என்பதை சுவையாகச் சொல்ல வேண்டுமென நினைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.அவருடைய எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நாயகியும் நாயகனும் அமைந்திருக்கிறார்கள்.அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள் என்பது பலம்.

- இளையவன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinemavalai