தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலில் திமுகவும் அதிமுகவும் இரு பெரும் துருவங்களாக திகழ்ந்து வருகின்றன.
ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒருவேளை திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளினால், அது அந்த கட்சியின் அஸ்திவாரத்தையே உலுக்கும் ஒரு நிலநடுக்கமாக அமையும். தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் திமுக வலுவாக இருப்பதாக தோன்றினாலும், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி மற்றும் புதிய சக்திகளின் எழுச்சி ஆகியவை திமுகவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவமே இந்த தோல்விக்குக் காரணம் என்ற குரல் கட்சிக்குள்ளேயே பலமாக ஒலிக்க தொடங்கும்.
உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தியதால் சீனியர் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக ஒரு பேச்சு ஏற்கனவே நிலவுகிறது. தேர்தல் தோல்வி ஏற்படும் பட்சத்தில், இந்த அதிருப்தி ஒரு வெளிப்படையான போராக மாறும். “வாரிசு அரசியலால் தான் கட்சி வீழ்ந்தது” என்ற விமர்சனம் கட்சிக்குள்ளேயே வெடிக்கும்போது, மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பிறகு கட்சியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழும். அந்த தருணத்தில், இதுவரை அடக்கி வாசித்த கனிமொழி அவர்கள் பொதுச்செயலாளர் அல்லது கட்சியின் ஒரு முக்கிய அதிகாரமிக்க பதவிக்கு குறி வைக்க வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை முன்னிறுத்தி, கருணாநிதி குடும்பத்திற்குள்ளேயே ஒரு அதிகார போட்டி உருவாகலாம்.
இதையும் தாண்டி, ஒருவேளை தோல்வி மிக மோசமாக இருந்தால், கருணாநிதி குடும்பத்தை விட்டே கட்சி கைமாறும் சூழலும் உருவாகலாம். கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரு புதிய தலைமையை தேர்ந்தெடுக்கவோ அல்லது கட்சியின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டு வரவோ முயற்சிப்பார்கள். இது திமுகவின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பிளவிற்கு வழிவகுக்கும்.
அதிகாரம் இல்லாத, பலவீனமான நிலையில் இருக்கும் திமுகவை வீழ்த்துவதற்கு பாஜக போன்ற தேசிய கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும். “திராவிட மாடல்” என்ற பிம்பத்தை சிதைத்து, திமுகவின் வாக்கு வங்கியை துண்டு துண்டாக உடைக்க பாஜக தீவிரமாகச் செயல்படும். ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் சட்டரீதியிலான வழக்குகளை எதிர்கொள்ளநேரலாம்.
இதையெல்லாம் விட முக்கியமாக, திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் எனப்படும் ‘உடன்பிறப்புகள்’ இந்த சரிவால் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். “கலைஞர் கட்டி காத்த கோட்டை இப்படி சிதறுகிறதே” என்ற ஏக்கம் அவர்கள் மனதில் ஒரு பெரிய வலியை உண்டாக்கும். 2026 தேர்தல் முடிவுகள் திமுகவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் திராவிட அரசியலின் திசையையே மாற்றியமைக்கும் ஒரு தீர்ப்பாக அமையக்கூடும்.

