தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் அதிமுக இடையே வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
திருவள்ளூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், விஜய்யின் அரசியல் வருகை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிமுக ஒரு மலை, விஜய் ஒரு செடி!
செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், "விஜய்யின் வருகையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது. அதிமுக என்பது ஒரு பிரம்மாண்டமான மலை. விஜய் இப்போதுதான் அரசியலில் முளைத்திருக்கும் ஒரு சிறிய செடி போன்றவர். ஒரு சிறு செடி மலையோடு மோத நினைத்தால், அந்தச் செடிக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இந்த மலை மீது அவர் மோதினால், அவர் மண்டைதான் உடையும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
தியேட்டருக்கு மட்டும்தான் விசில்கள்!
விஜய்யின் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கூடும் கூட்டத்தைப் பற்றிப் பேசிய அவர், "திரைப்படங்களில் விஜய் நடிக்கும்போது விசில் அடிப்பவர்கள், அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறார்கள். அந்த விசில்கள் தியேட்டர்களோடு சரி. அந்த விசிலை வைத்துக்கொண்டு கோட்டைக்குச் செல்ல முடியாது. விசில் அடிப்பவர்களை மக்கள் தியேட்டருக்குத்தான் அனுப்புவார்களே தவிர, சட்டமன்றத்திற்கு அனுப்ப மாட்டார்கள்" என்று விமர்சித்தார்.
மக்கள் நம்பத் தயாராக இல்லை:
தொடர்ந்து பேசிய அவர், "வெறும் விசில் அடிக்கும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய நினைப்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை, புதிதாக வந்தவர்களால் ஒன்றும் செய்ய முடியாது" என உறுதியாகத் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து அதிமுக தரப்பிலிருந்து வெளிவந்துள்ள இந்த அதிரடி விமர்சனம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

