Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிளாஸ்ட் விமர்சனம்.. தியேட்டர் தெறித்ததா?.. அல்லது ரசிகர்கள் தெறித்து ஓடினார்களா?..

பிளாஸ்ட் விமர்சனம்.. தியேட்டர் தெறித்ததா?.. அல்லது ரசிகர்கள் தெறித்து ஓடினார்களா?..

Cine Reporters 2 days ago

ஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் ராஜா இயக்கத்தில் அக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளாஸ்ட் திரைப்படத்தில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையை ரவி பஸ்ருர் அமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பீனிக்ஸ் பிரபு ஸ்டண்ட் அமைத்துள்ளார்.

படத்தின் கதை, ரூ.1000 கோடி லஞ்ச ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொழிலதிபரான ஜான் கொக்கேன் தனது தொழிலை விரிவுபடுத்த அமைச்சருக்கு பெரும் தொகையை வழங்க திட்டமிடுகிறார். இந்த பண பரிவர்த்தனையைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள், கராத்தே மாஸ்டரான அர்ஜுனின் குடும்பத்தை பாதிக்கும் நிலைக்கு தள்ளுகிறது. குறிப்பாக அவரது மகளாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தனை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற, அதற்கு எதிராக குடும்பம் ஒன்றிணைந்து போராடுவது தான் படத்தின் கதை.

சாதாரண கதைக்களமாக இருந்தாலும், திரைக்கதையில் இயக்குநர் சுபாஷ் கே ராஜா விறுவிறுப்பை குறையாமல் கையாண்டுள்ளார். முதல் காட்சியில் தொடங்கி இறுதி வரை தேவையற்ற காட்சிகள் இல்லாமல் படம் நகர்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தனது வழக்கமான அதிரடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக இந்த வயதிலும் அதே வேகத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால் படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் ஆக்‌ஷன் காட்சிகளாகும். குறிப்பாக கார் சேஸிங் மற்றும் காருக்குள் நடைபெறும் சண்டைக் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல்களை பெற்றுள்ளன.

முதல் பாதி முழுவதும் அதிரடி விருந்தாக அமைந்துள்ள நிலையில், இரண்டாம் பாதியும் அதே வேகத்தில் நகர்கிறது. இடையிடையே வரும் எலிவேஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்கின்றன. குறிப்பாக அபிராமிக்காக அமைக்கப்பட்ட ஒரு முக்கிய காட்சிக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதே சமயம், ஜான் கொக்கேனின் வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையவில்லை என்ற குறையும் உள்ளது. ஆனால் அர்ஜுன் சிதம்பரம், பவன் மற்றும் அவர்களின் கேங் படத்தில் வலுவான எதிரணியாக காட்சியளிக்கின்றனர். கிளைமாக்ஸ் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக இருந்தாலும், அதற்கு முன் வரும் இரண்டு மணி நேர திரைக்கதை ரசிகர்களை சலிக்க விடாமல் பார்க்க வைத்து விடுகிறது.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளின் தீவிரத்தை மேலும் உயர்த்தும் வகையில் இசை அமைந்துள்ளது. ப்ரீத்தி முகுந்தனின் சண்டைக் காட்சிகளுக்கும் இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில், 'பிளாஸ்ட்' திரைப்படம் ஆக்‌ஷனை மையமாகக் கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவான சூப்பர் டூப்பர் கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் என்றே கூறலாம். முதல் நாள் வசூல் பெரிதாக இல்லை என்றாலும் இன்று முதல் படம் பாக்ஸ் ஆபீஸில் பிக்கப் ஆகிவிட்டது.

பிரதீப் ரங்கநாதனின் உதவியாளரான சுபாஷ் ராஜா தனது குருநாதரின் பெயரை காப்பாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். படம் பக்கா பிளாஸ்டாக உள்ளது.

ரேட்டிங்: 3.75

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cinereporters