2026 சட்டமன்ற தேர்தல் களம் நெருங்க நெருங்க, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் ஒருவிதமான மெல்லிய நடுக்கம் பரவியுள்ளதை மறுக்க முடியாது.
“நாம்தான் வெற்றி பெறுவோம்” என்ற நம்பிக்கையை தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி விதைத்து வந்தாலும், சமீபத்திய உள்கட்சி மற்றும் ரகசிய கருத்துக்கணிப்புகள் அவருக்கு ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக தனித்து ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எட்டவில்லை என்றால், தேர்தலுக்கு பிந்தைய சூழல் பாஜகவின் கைகளுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளின் தயவின்றி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக அந்த இடைவெளியை பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கும் என்பதுதான் எடப்பாடியின் தற்போதைய கவலைக்கு காரணமாகும்.
பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் எப்படியாவது அதிகாரத்தின் ஒரு பகுதியை தொட்டுவிட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளது. ஒருவேளை அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல், பாஜகவின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவானால், அது அந்த கட்சிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் போன்ற தமிழக பாஜகவின் முக்கிய முகங்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பிடிப்பதை தவிர்க்க முடியாது. இது அதிமுகவின் தனித்துவமான திராவிட அரசியலுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவும், எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தைக் குறைக்கும் ஒரு காரணியாகவும் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் பிரதான கவலையே, அமைச்சரவையில் பாஜக புகுந்து விளையாடினால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பதுதான். கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பாஜகவின் பிடியில் அதிமுக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இப்போது மாநில அமைச்சரவையிலேயே அவர்கள் அமரும் சூழல் வந்தால், அது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கும். 118 என்ற மேஜிக் எண்ணைத் தாண்டவில்லை என்றால், ஒவ்வொரு முடிவிற்கும் டெல்லியின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். இது எடப்பாடியின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையும் என்பதால், அவர் தனது தேர்தல் வியூகங்களை தற்போது தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறார்.
அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் நிலவும் இழுபறி நிலையும் இந்த கவலைக்கு மற்றுமொரு காரணமாகும். தவெக போன்ற புதிய சக்திகளின் வரவு வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில், அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கும். 118 இடங்கள் என்பது வெறும் இலக்கல்ல, அது அதிமுகவின் தன்னாட்சியை காக்கும் கவசம் என்பதை எடப்பாடி உணர்ந்துள்ளார். ஒருவேளை கூட்டணி தர்மம் என்ற பெயரில் பாஜக அமைச்சரவையில் அமர்ந்தால், தமிழகத்தின் முக்கிய துறைகள் அவர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது. இது அதிமுகவின் நீண்டகால அரசியல் கொள்கைகளுக்கும், திராவிச் சித்தாந்தத்திற்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
மொத்தத்தில் 2026 தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு அக்னி பரீட்சையாக அமையும். அதிமுக 118 இடங்களுக்கு மேல் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் மட்டுமே எடப்பாடி ஒரு முழுமையான தலைவராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள முடியும். மாறாக, பாஜகவின் தயவில் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டால், அது அதிமுகவின் அடையாளத்தை சிதைக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக மாறக்கூடும். தமிழிசை, முருகன் போன்றவர்கள் அமைச்சர்களாகும் பட்சத்தில், தமிழகத்தின் அதிகார மையம் ராயப்பேட்டையில் இருக்காது, அது கமலாலயத்தை நோக்கியே நகரும். இந்த சவால்களை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

