தமிழக அரசியல் களத்தில் தற்போது கூட்டணி மாற்றங்கள் குறித்த விவாதங்கள் முன்னெப்போதையும் விட அதிக சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக, தலித் மக்களின் அரசியல் முகமாக திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் புதிய அரசியல் சக்தியாக விஸ்வரூபமெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் கைகோர்க்குமா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய சூழலில், திமுக கூட்டணியில் விசிகவிற்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்படுவதில்லை என்ற அதிருப்தி அந்த கட்சியின் தலைவர்களிடையே புகைச்சலாக வெடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, “தன் கட்சியையே சிதைக்க சில சக்திகள் திரைமறைவில் வேலை செய்கின்றன” என்று திருமாவளவன் அண்மையில் வெளிப்படுத்திய ஆதங்கம், அவர் ஆளுங்கட்சி கூட்டணியில் ஒருவிதமான நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராக மிக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும் விசிக, அந்த கட்சி அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் எட்டிப்பார்க்கவும் வாய்ப்பில்லை. பாஜகவை வீழ்த்துவதையே தன் பிரதான கொள்கையாக கொண்டுள்ள திருமாவளவன், ஒருபோதும் அதிமுக முகாமுக்கு திரும்பப்போவதில்லை என்பது தற்போதைய அரசியல் யதார்த்தமாக தெரிகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியிலும் மரியாதையில்லை. இத்தகைய சிக்கலான சூழலில், ஒரு மாற்றாக ‘மூன்றாவது வாய்ப்பாக’ விஜய் மட்டுமே விசிகவின் முன்னால் எஞ்சியிருக்கிறார்.
விஜய்யின் ‘சமத்துவ அரசியல்’ மற்றும் ‘சமூக நீதி’ சார்ந்து முன்னெடுக்கப்படும் கொள்கைகள் விசிகவின் கொள்கைகளுக்கு நெருக்கமானதாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே, ஒருவேளை 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய சூழலில், திமுக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில், தவெக – விசிக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகவே தெரிகின்றன.
மேலும், 2029 மக்களவை தேர்தலை இலக்காகக் கொண்டு, தவெக + காங்கிரஸ் + விசிக என்ற புதிய மெகா கூட்டணி உருவானால் அதில் எவ்வித வியப்பும் இருக்காது. தேசிய அளவில் ராகுல் காந்தியுடன் இணக்கமான உறவை வளர்த்து கொள்ள விரும்பும் விஜய், மாநில அளவில் விசிக போன்ற கட்சிகளை தனது கூட்டணியில் அரவணைத்து செல்வதன் மூலம் திராவிட கட்சிகளுக்கு ஒரு வலுவான அரசியல் மாற்றத்தை வழங்க முடியும். இந்த கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தின் பாரம்பரிய இருமுனை போட்டியை சிதைத்து ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும்.
மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் சமூக நீதிக்காக போராடும் கட்சிகள் இணைந்தால் தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிகார பரவலை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

