தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண நடிகனாகத் திரையில் தோன்றி, இன்று மாநிலத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ள விதம் பலருக்கு வியப்பையும், சிலருக்குக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகத் தமிழகத்தில் பேரிடர் காலங்களில் நடிகர்களிடம் நிதி கேட்பதும், உதவி என்று வரும்போது அவர்களை எதிர்பார்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அதே நடிகன் “நாட்டைப் பாதுகாக்க வருகிறேன்” என்று அரசியல் களத்தில் குதிக்கும்போது மட்டும், “உனக்கெல்லாம் என்ன அறிவு இருக்கிறது?” என்று ஏளனம் செய்யும் ஒரு கூட்டம் இங்கே எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. விஜய் தற்போதைய தேர்தலில் கேட்டது ஒரு வாய்ப்பு மட்டுமே, அதைத் தமிழக மக்கள் அவருக்குத் தாராளமாக வழங்கியுள்ளனர்.
நிஜத்தைச் சொல்லப்போனால், விஜய்யை விடவும் அவருக்காகக் களத்தில் நின்ற ரசிகர்கள்தான் கடந்த சில ஆண்டுகளாக அதிக அவமானங்களைச் சந்தித்தனர். விஜய் ரசிகர்கள் என்று சொல்வதை விட, ‘விஜய் வெறியர்கள்’ என்று சொல்லும் அளவிற்கு அவரோடு உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த அந்த இளைஞர் கூட்டம், சமூக ஊடகங்களில் எள்ளி நகையாடப்பட்டது. விஜய்யைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை பேசினால் கூட, உடனே அவர்களைக் கலாய்ப்பதற்கென்றே ஒரு கும்பல் காத்திருந்தது. தங்களை அவமானப்படுத்தியவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்கள் விஜய்யைத் தங்களின் தலைவனாக அரியணையில் ஏற்றி அழகு பார்த்துள்ளனர்.
விஜய்யின் ஆதரவாளர்களை ‘மடத்தனமானவர்கள்’ என்றும், ‘அரசியல் தெரியாதவர்கள்’ என்றும் விமர்சிப்பதையே பலர் தங்களின் பிழைப்பாகவும், சேனல் வியாபாரமாகவும் மாற்றிக்கொண்டனர். “கான்ஸ்டிடியூஷன் என்றால் என்னவென்று தெரியுமா?”, “ஸ்டேட் டெவலப்மென்ட் பாலிசி தெரியுமா?” என்று அறிவுஜீவித் தனமாகப் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், விஜய் இன்று தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். “அவரால் வரவே முடியாது, நின்றாலும் ஜெயிக்க முடியாது” என்று ஆரூடம் சொன்னவர்களின் வாயடைத்துப் போகும் வகையில், இன்று அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றி என்பது ஏதோ தற்செயலாக நடந்த ஒன்றல்ல; அதற்குப் பின்னால் ஒரு மனிதனின் அசாத்திய உழைப்பும், தெளிவான திட்டமிடலும் ஒளிந்திருக்கிறது. கட்சியின் கொடியை வடிவமைத்தது முதல், மாநாடுகளுக்கான இடங்களைத் தேர்வு செய்தது வரை ஒவ்வொன்றையும் அவர் மிக நுணுக்கமாகச் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பிறகு, ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு ஆற்றிய பிரச்சார உரைகள், அவர் பின்னால் ஒரு வலுவான ‘பிரைன் ஸ்டார்மிங்’ குழு இருந்ததை விடவும், அவரது சொந்த அறிவும் தேடலும் அதிகம் இருந்ததையே காட்டுகிறது.
இன்று அவர் ஒரு மாபெரும் சக்தியாக வந்து நின்றாலும், பலருக்கு அவருக்கு ‘சல்யூட்’ அடிக்க மனம் வரவில்லை என்பதே கசப்பான உண்மை. ஒரு சாதாரண நடிகராகப் பார்த்தவரை, இன்று முதலமைச்சராகப் பார்ப்பதற்குப் பல பழைய அரசியல்வாதிகளுக்கும், விமர்சகர்களுக்கும் ஈகோ தடையாக இருக்கிறது. அவரை ஒரு தலைவராக ஏற்பதற்கு இன்னும் சிலருக்குக் கஷ்டமாக இருப்பதால்தான், தேவையில்லாத விமர்சனங்களை அவர் மீது அள்ளி வீசுகின்றனர். ஏன் ஒரு தனிமனிதன் மீது இவ்வளவு கால்புணர்ச்சி காட்டப்படுகிறது என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
எது எப்படியோ, விமர்சனங்களை உரமாக்கி விஜய் இன்று ஒரு மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளார். அவரைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்களும், கிண்டல் செய்தவர்களும் இன்று அவர் செய்யப்போகும் மக்கள் நலப்பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் அரசியல் பயணம் என்பது வெறும் சினிமா கவர்ச்சியால் வந்தது அல்ல, அது மக்களின் நம்பிக்கையாலும், ரசிகர்களின் விடாமுயற்சியாலும் கட்டப்பட்ட கோட்டை. இனி வரும் காலங்களில் அவர் தரும் நல்லாட்சியே, அவருக்கு எதிரான அனைத்துக் குரல்களுக்கும் இறுதிப் பதிலாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

