விஜய்யை தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருங்கள்.. அவர் ஸ்டெப் பை ஸ்டெப் ஆக முன்னேறி போய்க்கொண்டே இருப்பார்..
அதிமுக, திமுகவை மீறி ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்கள்.. பிடித்து காட்டினார்.. அதேபோல் பாஜக, காங்கிரஸை வீழ்த்து பிரதமர் பதவியையும் பிடித்து காட்டுவார்.. விமர்சனங்களுக்கு விஜய் பதில் சொல்ல மாட்டார்.. ஆனால் அவரது செயல் பதில் சொல்லும்.. விஜய்யின் அமைதியை வீக்னெஸ் ஆக எடுத்து கொள்பவர்கள் தான் ஏமாறுவார்கள்..
முதலமைச்சர் விஜயை தொடர்ந்து குறைத்து மதிப்பிடுகிறார்கள்… ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களின் கணிப்புகளை உடைத்துக்கொண்டே விஜய் மேலே சென்று கொண்டிருக்கிறார் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் விஜயின் அரசியல் வருகையை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. '5 சதவீதம் வாக்கு வாங்குவார்', '10 சதவீதத்தை தாண்ட மாட்டார்', 'சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம்' என்றுதான் கணிப்புகள் வந்தன. ஆனால் அந்த கணக்குகளை எல்லாம் தலைகீழாக மாற்றும் அளவுக்கு விஜயின் அரசியல் பயணம் வேகம் எடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், விஜயை இனிமேலும் சாதாரண அரசியல் போட்டியாளராக மட்டும் பார்க்க முடியாது என்ற கருத்தும் உருவாகியுள்ளது.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரண்டு பெரிய கட்சிகளின் ஆதிக்கமே தொடர்ந்தது. இந்த இரு கட்சிகளையும் தாண்டி மூன்றாவது சக்தி ஒன்று ஆட்சியை பிடிப்பது சாத்தியமில்லை என்ற எண்ணமும் நீண்ட காலமாக இருந்தது. ஆனால் அந்த அரசியல் சமன்பாட்டையே மாற்றும் சக்தியாக விஜய் உருவெடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, குறுகிய கால அரசியல் பயணத்திலேயே ஆட்சியை பிடித்தது என்பது சாதாரண சாதனை அல்ல என்ற பிரசாரம் தற்போது வலுப்பெற்று வருகிறது. 'ஐம்பது ஆண்டுகளாக இருந்த அரசியல் கோட்டையை உடைப்பது ஈஸி இல்லை… ஆனால் அந்த கோட்டைக்குள்ளேயே புகுந்து ஆட்சியை பிடித்திருக்கிறார் விஜய்' என்ற பஞ்ச் வசனங்களும் அரசியல் களத்தில் பேசப்படுகின்றன.
இதே காரணத்தால்தான் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்த கருத்துகள் வெளியாகும்போது சிலர் அதை கேலியாக பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் ஒரு தலைவரின் அடுத்த கட்ட வளர்ச்சியை ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட முடியாது என்பதே ஆதரவாளர்களின் வாதம். நடிகராக விஜய் ஏற்கனவே இந்திய அளவில் அறிமுகமானவர். குறிப்பாக அவரது திரைப்படங்கள் மூலம் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அந்த ரசிகர் செல்வாக்கு அரசியல் ஆதரவாக மாறுமா என்பது தனி கேள்வியாக இருந்தாலும், அவருடைய பெயரும் முகமும் தமிழகத்தை தாண்டியும் ஏற்கனவே அறிமுகமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய் குறித்த சமூக வலைதள பதிவுகள் மற்றும் ரசிகர் செயல்பாடுகள் கவனம் பெறுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், சில ரீல்ஸ் அல்லது இணையப் பதிவுகளை மட்டும் வைத்து வடஇந்தியா முழுவதும் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் ஆதரவு இருக்கிறது என்று முடிவு செய்வது அவசரமானதாகவும் இருக்கும். உண்மையான அரசியல் செல்வாக்கு என்பது தேர்தல் நேரத்தில் வாக்குகளாக மாறும்போதுதான் அதன் அளவு தெரியும். அந்த சோதனையை விஜய் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் பிரபலத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. ஏற்கனவே ஹீரோவாக மக்களுக்கு அறிமுகமானவர் என்பதால், அரசியல்வாதியாக அவர் முன்வரும் போது அவரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான ஒரு மனநிலை சிலரிடம் இயல்பாக உருவாகலாம். இதுதான் அவரது அரசியல் பயணத்துக்கு கூடுதல் வேகத்தை கொடுக்கக்கூடிய காரணமாக பார்க்கப்படுகிறது. 'திரையில் ஹீரோவாக பார்த்த மக்கள்… அரசியலில் தலைவராக ஏற்றுக்கொண்டால், அடுத்த இலக்கு தமிழகத்தை தாண்டியதாக இருக்கலாம்' என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதிமுக, திமுக என்ற நீண்டகால அரசியல் போட்டியை மாற்றுவது எப்படி சவாலோ, அதேபோல் தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக போன்ற வலிமையான கட்சிகளை தாண்டி ஆட்சியை பிடிப்பது அதைவிட பெரிய சவால். அதனால் விஜயின் தேசிய அரசியல் வாய்ப்பை இப்போதே வெற்றி அல்லது தோல்வி என்று தீர்மானிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவு… ஆரம்பத்தில் விஜயை குறைத்து மதிப்பிட்ட பல கணிப்புகள் அவரது அரசியல் வளர்ச்சியால் கேள்விக்குறியாகியுள்ளன. 'இன்று சிரிப்பவர்கள் நாளை கணக்கு போட வேண்டிய நிலை வரலாம்… அரசியலில் விஜயின் அடுத்த அத்தியாயம் எங்கே முடியும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்!' என்பதே தற்போது அவரது ஆதரவாளர்களின் மாஸ் பஞ்ச்.

