Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ராஜா சிவாஜி (மராத்தி): திரை விமர்சனம்

ராஜா சிவாஜி (மராத்தி): திரை விமர்சனம்

Cineulagam 0 months ago

ரித்தேஷ் தேஷ்முக் எழுதி, நடித்து, இயக்கியிருக்கும் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று படமான ராஜா சிவாஜி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாயர்கள் வலுவாக ஆட்சி செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து சண்டையிட்டு, சுய ராஜ்ஜியத்தை அமைப்பேன் என்று சிறுவனாக இருக்கும்போதே சூளுரைக்கிறார் சிவாஜி.

அவருக்கு நம்பிக்கையூட்டும் சகோதரனாக சம்பாஜி சண்டைப்பயிற்சி உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுப்பதில் பங்காற்றுகிறார். அதே சமயம் சம்பாஜியும் மாவீரனாகவே வளர்ந்து முகலாயர்களை எதிர்த்து சண்டையிடுகிறார். ஷாஹாஜியின் முடிவால் சிவாஜி, சம்பாஜி சகோதரர்கள் தனித்தனியாக சென்றுவிடுகின்றனர்.

இது முகலாய மன்னர் மொஹம்மது அடில் ஷாவிற்கு சாதகமாக இருக்க, இராணுவத் தளபதி அப்ஸல் கான் மூலம் ஷாஹாஜியை சிறைப்படுத்துகிறார். இந்த தகவல் சிவாஜிக்கு தெரிய வர அடில் ஷாவிற்கு கடிதம் அனுப்புகிறார்.

அதே வேளையில், அப்பாவுக்காக நேரிலேயே செல்லும் சம்பாஜி, அவருக்காக அப்ஸல் கானுக்கு கீழ் வேலை செய்யும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்கிறார். அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது? முகலாயர்களை எதிர்த்து சுய ராஜ்ஜியத்தை சிவாஜி நிலைநாட்டினாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் மராத்தி திரைப்படம் என்ற பெருமையுடன் ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை நடித்து இயக்கியுள்ளார். அப்ஸல் கானை எதிர்த்து சண்டையிட்டது வரையிலான காலகட்டத்தை இப்படம் விவரிக்கிறது. நாடகத்தன்மை நிரம்பியிருந்தாலும் ரசிக்கும்படியாகவே படத்தை எடுத்துள்ளார் ரித்தேஷ்.

சிவாஜி மகாராஜை மாவீரனாக காட்ட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஹீரோவைப் போல் காட்டாமல், அவரும் ஒரு மனிதர்தான் ஆனால் தமது இன மக்களுக்காக போராடுகிறார் என்றே காட்டிய விதம் மூலம் ரித்தேஷ் தனித்து நிற்கிறார். அதே சமயம் சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷத்தை காட்டவும் அவர் தவறவில்லை.

குறிப்பாக, சிற்றரசர் ஒருவரை அவரது ராஜ்ஜியத்திற்குள்ளேயே சென்று கொல்லும் காட்சியில் நடக்கும் சண்டை கூஸ்பம்ஸ் மொமெண்ட். தானே இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தாலும் பிற நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்துகிறார் ரித்தேஷ். சம்பாஜியாக நடித்திருக்கும் அபிஷேக் பச்சனுக்கு மாஸ் சண்டைக்காட்சிகள் கொடுத்தது, வலுவான வில்லனாக சஞ்சய் தத்தை காட்டியது போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.

ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்

இஸ்லாமிய வெறுப்பு படமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் ரித்தேஷ் கவனமாக இருந்தது திரைக்கதை அமைப்பில் தெரிகிறது. அவரது எதிரிகளில் சொந்த மதத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். இப்படத்தின் கதை சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை குறித்தாலும், மத அடையாளத்தை வலியுறுத்தாமல் அதிகாரத்தைத் தேடி அலைபவர்களின் அட்டூழியங்களின் தன்மையையே காட்டியிருக்கிறது.

நடிகர்களை பொறுத்தவரை ரித்தேஷ் தேஷ்முக் தேவையான இடங்களில் மட்டுமே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். மற்ற சமயங்களில் நிதானமாக திட்டங்களை தீட்டுகிறார். இப்படித்தான் சிவாஜி இருந்திருப்பாரோ என்பதை கண்முன் நிறுத்துகிறார் ரித்தேஷ். அபிஷேக் பச்சனுக்கு நல்ல கதாபாத்திரம்; அதனை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

வில்லத்தனத்தை அசால்ட்டாக செய்யக்கூடிய சஞ்சய் தத் இராணுவத் தளபதி கதாபாத்திரத்தை தனக்கே உரிய பாணியில் மிக கச்சிதமாக செய்துள்ளார். மிடுக்கான இராணியாக வித்யா பாலனும், அமைதியான சிவாஜியின் மனைவியாக ஜெனிலியாவும், சிவாஜியின் அம்மாவாக பாக்யஸ்ரீயும் தங்களது பங்களிப்பை தந்துள்ளனர்.

டெக்னிக்கலாக வலுவான படமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் சில கிராபிக்ஸ் பிசுறு தட்டுகிறது. ஆனாலும் ஆடை வடிவமைப்பு, கலை அமைப்பு ஆகியவற்றில் 17ஆம் நூற்றாண்டினை கண்முன் நிறுத்துகிறது இப்படம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அற்புதம்.

திரைக்கதையமைப்பை பொறுத்தவரை மிக நீளமாக நகர்வது போன்ற உணர்வை தருகிறது. கதையுடன் ஒன்றிவிட்டால் அது ஒரு குறையாக தெரியாது. இக்காலத்து இளைஞர்களுக்கு இந்த பழைய திரைக்கதையமைப்பு எந்த அளவிற்கு ரசிக்க வைக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

க்ளாப்ஸ்

பிரம்மாண்ட உருவாக்கம்

நடிகர்களின் பங்களிப்பு

சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

செயற்கைத்தன்மையான ஒரு சில காட்சிகள்

மொத்தத்தில் இந்த ராஜா சிவாஜி சுய ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திவிட்டார். ஒரு சில குறைகள் இருந்தாலும் கண்டிப்பாக பெரிய திரையில் இப்படத்தை ரசிக்கலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cineulagam