நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதமே திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட இந்த படம் ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது.
ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சினை காரணமாக படத்தை ரிலீஸ் செய்வதில் ஆறு மாதங்களாக இழுபறி நீடித்த நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தமிழக அரசின் டில்லி பிரதிநிதியுமான வெங்கட் நாராயணா சமீபத்தில் சென்னைக்கு வந்து ஜனநாயகன் படத்தின் விநியோகஸ்தர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விநியோகஸ்தர்களிடம் எம் ஜி அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் முன்பு பேசிய தொகையை அப்படியே முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒருவேளை படம் சரியாக ஓடவில்லை என்றால் பணத்தை திருப்பித் தருகிறோம் என்றும் வெங்கட் ரமணா கூறியிருக்கிறார். டிஸ்ட்ரிபியூஷனுக்கான கமிஷனாக 8 சதவீதம் மட்டுமே தர முடியும் என்பதும் அவரது கருத்தாக இருந்துள்ளது. ஆனால் கமிஷனாக 12 சதவீதம் தருவதாக தான் முன்பு ஒப்பந்தம் இருந்துள்ளது.
ஏற்கனவே எம்ஜி அடிப்படையில் ஜனநாயகன் படத்திற்காக ஜனவரிக்கு முன்பே முன்பணத்தை கொடுத்தவர்கள் கடந்த ஆறு மாதங்களில் அதற்கான வட்டிகளை லட்சக்கணக்கில் கட்டி இருக்கிறார்கள். இப்போது அதற்கான வட்டியாக குறைந்த தொகை மட்டுமே தர முடியும் என்றும் இந்த கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதுவும் விநியோகஸ்தர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இனிமேல் ஜனநாயகன் படத்தின் வியாபாரத்தை தயாரிப்பாளரிடம் நேரடியாக பேச முடியாது. அலுவலகத்தில் உள்ள ஒரு முக்கிய நிர்வாகி நான் பேசுவார் என்றும் அந்தக் கூட்டத்தில் விநியோகஸ்தர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை நம்பி பல லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தவர்கள் தற்போது செய்வதறியாது கைகளை பிசைந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே டிக்கெட் விலையை அரசு நிர்ணயித்த படிதான் வசூலிக்க வேண்டும் என்றும் வினியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. ஏகப்பட்ட நெருக்கடிகளில் உள்ள நிலையில், ஜனநாயக ரீதியாக முதல்வராக பதவி வகிக்கும் படத்தின் நாயகன் முதல்வர் விஜய் இந்த பிரச்சனைகளில் தலையிடுவாரா? தங்களுக்கு சாதகமான ஏதேனும் உதவிகளை செய்வாரா என்றும் விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

