Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நோயாளி பாமரன் சொல்லிக் கொடுங்கள்; நோயாளி மாணவன் கற்றுக் கொடுங்கள் - தேசிய மருத்துவர்கள் தினத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை!

நோயாளி பாமரன் சொல்லிக் கொடுங்கள்; நோயாளி மாணவன் கற்றுக் கொடுங்கள் - தேசிய மருத்துவர்கள் தினத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை!

Cricglitz Cinema 2 weeks ago

நேற்று தேசிய மருத்துவா்கள் தினம். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பதிவில் கவிஞர் வைரமுத்து எழுதிய மருத்துவ கவிதையில் கூறியிருப்பதாவது, மருத்துவமுறையை மாற்றுங்கள் டாக்டர்.

வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம். நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்.

முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள். அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம். அவ்வளவுதான். அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள். வாசிக்க முடியாத கையெழுத்தில் வாயில் வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள். மூன்றுவேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டே வார்த்தையில் பாடி முடிப்பீர்கள்.

போதாது டாக்டர். எங்கள் தேவை இதில்லை டாக்டர். நோயாளி பாமரன். சொல்லிக் கொடுங்கள். நோயாளி மாணவன். கற்றுக்கொடுங்கள். வாய்வழி சுவாசிக்காதே. காற்றை வடிகட்டும் ஏற்பாடு வாயிலில்லையென்று சொல்லுங்கள். சுவாசிக்கவும் சூத்திரமுண்டு. எத்துணை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று நுரையீரலின் தரை தொடவேண்டும். தரையெங்கே தொடுகிறது? தலைதானே தொடுகிறது! சொல்லிக்கொடுங்கள். சாராயம் என்னும் திரவத்தீயைத் தீண்டாதே. கல்லீரல் எரிந்துவிடும். கல்லீரல் என்பது கழுதை. பாரஞ்சுமக்கும். படுத்தால் எழாது. பயமுறுத்துங்கள். ஒருகால்வீக்கம்? உடனேகவனி. யானைக்காலின் அறிகுறி. இருகால் வீக்கம்? இப்போதே கவனி. சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்.

வாயிலென்ன ஆறாதப்புண்ணா? மார்பகப் பரப்பில் கரையாதக் கட்டியா? ஐம்பதுதொட்டதும் பசியேயில்லையா? சோதிக்கச்சொல்லுங்கள். அறியாத புற்றுநோய் ஆனா ஆவன்னா வெழுதியிருக்கலாம். நோயாளியை துக்கத்திலிருந்து துரத்துங்கள் டாக்டர்! நோயொன்றும் துக்கமல்ல. அந்நியக்கசடு வெளியேற உடம்புக்குள் நிகழும் உள்நாட்டு யுத்தமது. சர்க்கரையென்பது வியாதியல்ல. குறைபாடென்று கூறுங்கள். செரிக்காதவுணவும் எரிக்காதசக்தியும் சுடுகாட்டுத்தேரின் சக்கரங்க ளென்று சொல்லுங்கள் டாக்டர்.

ஊமை ஜனங்களிவர் உள்ளொளியற்றவர். பிணிவந்து இறப்பினும் முனிவந்து இறந்ததாய் முணங்குவர். சொல்லிக்கொடுங்கள். யோகம் என்பது வியாதி தீர்க்கும் வித்தையென்று சொல்லுங்கள். உயிர்த்தீயை உருட்டியுருட்டி நெற்றிப்பொட்டில் நிறுத்தச்சொல்லுங்கள். உணவுமுறை திருத்துங்கள்.
தட்டில் மிச்சம் வைக்காதே. வயிற்றில்மிச்சம் வை. பசியோடு உட்கார். பசியோடு எழுந்திரு. சொல்லுங்கள் டாக்டர்! என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Cricglitz Cinema