நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக இருந்த நிலையில் இப்போது முழுமையாக அரசியல் களத்துக்கு வந்து விட்டார்.
இதுவரை அவரது நடிப்பில் 68 படங்கள் வெளியான நிலையில் இப்போது அவரது 69வது படம் ஜனநாயகன் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் தனது கடைசி படம் என்று விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார்.
ஆனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் 4 மாதங்கள் கடந்தும் இன்னும் திரைக்கு வரவில்லை. அதே நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் முழு படமும் லீக் ஆகி விட்டது.
அதனால் இந்த படம் வெளியானாலும் போதிய லாபத்தை ஈட்டுமா என்பது பெரிய சந்தேகமாக உள்ளது. மேலும் இந்த படத்தை 120 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கிய அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனமும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. அதனால் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் படம் இப்படி சொதப்பி விட்டதால் மீண்டும் விஜய் ஒரு படத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நடித்து கொடுப்பார் என்று கூறப்பட்டாலும் அது உறுதியாகவில்லை. ஆனால் விஜய் ஒரு முடிவு செய்தால் அதில் பின்வாங்க மாட்டார் என்பதால் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று தீர்க்கமாக ஒரு தகவல் கோலிவுட்டில் இருந்து வருகிறது.
இதற்கிடையே நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் விட்டுச் செல்லும் இடத்தை அடுத்து நிரப்பப் போகும் ஹீரோ யார் என்பதும் பேசுபொருளாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் தனுஷ் விஜய் சேதுபதி சூர்யா சிம்பு உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. விஜய் அளவுக்கு இவர்களில் யார் உச்சத்தை தொடப் போகிறார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே காணப்படுகிறது.
இதுகுறித்து பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஏ வெங்கடேஷ் கூறியதாவது, நடிகர் விஜய் விட்டுச் சென்ற இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்கப் போவது என்னுடைய கணிப்புபடி அது நடிகர் சிம்புவாக தான் இருப்பார். அவரிடம் அதற்கான அனைத்து திறமையும் உழைப்பும் இருக்கிறது. நல்ல படங்களை நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் விஜய் இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்று ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

