தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை தனித்து நிறுத்தியிருக்கிறார்.
எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் முதல் தேர்தலை விஜய் துணிச்சலாக தனித்து எதிர்கொள்கிறார். இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் அவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இன்று காலை தனி விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி வந்த அவர் பாலக்கரை பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல்குமார் விஜயுடன் இருந்தனர்.
பிறகு திருச்சியில் மரக்கடை பகுதியில் தனது பிரசாரத்தை துவக்கிய தவெக தலைவர் விஜய் அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பேசிய விஜய், காஸ் சிலிண்டர் எல்லாம் உங்களுக்கு புக் ஆகிறதா? காஸ் சிலிண்டர் இல்லாமல் எத்தனை ஓட்டல்கள் டீக்கடைகளை மூடி விட்டார்கள். இதுகுறித்து பேச ஏன் ஸ்டாலின் டெல்லி செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய விஜய், மத்திய அரசோ மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த பிரச்சனையை தவிர்த்து இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை கேட்டால் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பார். ஆனால் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் புது டெல்லிக்கு செல்வார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் நிறைய பட்டியலிட்டு செய்வதாக சொன்னார்கள் ஆனால் சொன்னதை எல்லாம் செய்தார்களா? குறிப்பாக நீட் தேர்வு முறையை ரத்து செய்வதாக சொன்னார்களே செய்தார்கள? இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு உங்களுக்காக நான் வந்திருக்கிறேன்.
உங்களிடம் பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். திமுகவும் பாஜகவும் ஒன்றுதான். அதனால் நீங்கள் திமுக அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டால் இரண்டுமே சமம்தான். பல வலிகளை தாங்கிக் கொண்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களில் உங்களில் ஒருவனாக நானும் நீதி கேட்டு வந்திருக்கிறேன். உங்கள் தம்பியாக உங்கள் அண்ணனாக உங்கள் பிள்ளையாக எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். வருகிற தேர்தலில் விசில் புரட்சி உண்டாக்குவோம் என்று நடிகர் விஜய் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

