நடிகர் நட்டி நடராஜ் பல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர். நடிகர் விஜய் நடித்த யூத் மற்றும் புலி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர்.
ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய நட்டி பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மிளகா சதுரங்க வேட்டை முத்துக்கு முத்தாக கர்ணன் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
துபாயை சேர்ந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கத்தில் உருவான படம் டிஎன் 2026. இந்த படத்தில் நட்டி நாயகனாக நடித்துள்ளார். எம்எஸ் பாஸ்கர் தம்பி ராமையா இளவரசு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.
வரும் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் சமீபத்தில் டிஎன் 2026 படத்தின் டீசர் வெளியானது. அதில் வரும் சில காட்சிகள் நடிகர் விஜய் குறித்தும் அவரை இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக விஜயின் நண்பரான நட்டி விஜயை மட்டம் தட்டும் காட்சிகளில் நடித்திருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில் தவெகவினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நேற்று நடந்த டிஎன் 2026 படவிழாவில் படத்தின் நாயகன் நடிகர் நட்டி நடராஜ் பேசியதாவது, இந்த படத்தில் யாரையும் நாங்கள் கிண்டல் கேலி செய்யவில்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. இந்த படத்தின் நோக்கமே படத்தின் முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரைக்கும் படம் பார்க்கற எல்லோருமே சிரிச்சுட்டே இருக்க வேண்டும் என்பதுதான்.
விஜய் சாரோட லுக் ஒரு சீன்ல வருது என்றால் அது ஒரு போர்ஷன்தான். அதைத் தவிர படத்தில் நாங்கள் ஒரு அஞ்சாறு வித்யாசமான லுக்குகளை படத்தில் காட்டியிருக்கிறோம். விஜய் ஒரு சிங்கம். அந்த சிங்கத்தை நான் பக்கத்தில் இருந்து பாத்திருக்கிறேன். அப்படி யாரும் அவரை அசிங்கப்படுத்த முடியாது.
எனக்கும் இந்த படக்குழுவை சேர்ந்த யாருக்குே அப்படி ஒரு எண்ணம் கிடையவே கிடையாது. தவெக சார்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். விஜயை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே கிடையாது. அந்த கண்ணோட்டத்தில் பாருங்க. நீங்க படம் பாருங்க. அப்போ நாங்கள் என்ன பண்ணி இருக்கோம் என்று உங்களுக்கு புரியும் என்று நடிகை நட்டி நடராஜ் பேசியிருக்கிறார்.

