அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மத்திய தொகுதியில் நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தில் அவர் களத்தில் நிற்கிறார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், சுந்தர் சியின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த வாய்ப்பை தந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சுந்தர் சி, மீனாட்சி அம்மன் அருளால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தவெக தலைவர் விஜய் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவர் என் மனைவி குஷ்பூவை அக்கா என்று அன்போடு அழைப்பவர். என் மனைவியும் அவரை தம்பி என்றுதான் கருதுகிறார்.
அதனால் நான் தவெக குறித்தும் விஜய் குறித்தும் அந்த கட்சி வேட்பாளர்கள் குறித்தும் பேச மாட்டேன். அது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இந்த தொகுதியில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்றும் சுந்தர் சி கூறியிருந்தார். அவரது இந்த கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் என் வெற்றிதான் எனக்கு முக்கியம் என்று தாறுமாறாக பேசாமல் பக்குவப்பட்ட பண்பட்ட முறையில் சுந்தர் சி பேசியிருப்பதை விஜய் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். வெற்றி முக்கியமல்ல, மனிதரின் சிறந்த குணம்தான் முக்கியம் என்பதை வேட்பாளர் சுந்தர் சி வெளிப்படுத்தியதாக பாராட்டுகின்றனர். தங்கம் சார் நீங்க என்றும் புகழ்கின்றனர்.
அதனால் முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே விஜய் குறித்து தன்மையாக பேசி தளபதி ரசிகர்களின் மொத்த ஆதரவையும் பெற்றுவிட்டார் சுந்தர் சி. மேலும் சுந்தர் சி போட்டியிடும் தொகுதியில் அவரது மனைவி குஷ்பூவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதை சுந்தர் சியே உறுதிப்படுத்தி விட்டார்.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த தமன்னா ஹன்சிகா மோத்வானி பூணம் பாஜ்வா ஆண்ட்ரியா போன்றவர்களும் அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்களா என்று மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவதால் சுந்தர் சி வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

