சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 48-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணி இந்த தொடரில் தங்களது ஆறாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திற்கு சென்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியும் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : அக்சர் படேல் வருத்தம்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது : இந்த மைதானத்தில் 155 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் என்று நினைத்தோம். ஆனால் இந்த இலக்கினை சி.எஸ்.கே அணியின் வீரர்கள் வெற்றிகரமாக துரத்தியுள்ளனர். எங்களது அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்துள்ளதாக நினைக்கிறோம்.
இந்த போட்டியை பொருத்தவரை ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று விளையாடி இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஏனெனில் மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் புதிதாக வரும் பேட்ஸ்மேன்களுக்கு முதல் பந்தில் இருந்தே அடிப்பதற்கு கடினமாக இருக்கும். அதே வேளையில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக செட்டிலாகி இருந்தால் நிச்சயம் அவர்களால் விரைவாக ரன்களை குவிக்க முடியும்.
சி.எஸ்.கே அணியில் சஞ்சு சாம்சன் அதை மிகச் சிறப்பாக செய்திருந்தார். எங்களது அணியை பொறுத்தவரை ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பிறகும் இறுதியில் ரன்கள் வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் இத்தனை பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு இவ்வளவு குறைவாக ரன்களை அடித்ததே தோல்விக்கு காரணம் என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.
