ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 10 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
இதன் காரணமாக எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திலும் அந்த அணி இருக்கிறது. ஆனாலும் நிச்சயம் இந்த ஆண்டிற்கான பிளே ஆப் சுற்றினை அவர்கள் எட்டுவது கடினம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
அடுத்த போட்டியையும் தவறவிட்ட ஹார்டிக் பாண்டியா :
இவ்வேளையில் கடைசியாக நடைபெற்று முடிந்த லக்னா சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவி வருவதால் அவரது கேப்டன்சியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கின்றன. இவ்வேளையில் அவர் கடைசி போட்டியில் பங்கேற்காதது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது.
ஆனாலும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது பேசிய தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவிற்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அந்த போட்டியில் அவர் விளையாடவில்லை என்றும் கூறியிருந்தார்.
இவ்வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்ததாக மே 10-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக ராய்ப்பூர் நகருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் புறப்பட்ட வேளையில் ஹார்திக் பாண்டியா வீரர்களுடன் இணைந்து ராய்பூருக்கு பயணிக்காமல் இருக்கிறார். மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே அவர் ராய்ப்பூர் பயணிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அடுத்த போட்டியை தவற விடுவது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் போட்டிக்கான அணியில் அவர் மீண்டும் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
