கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
அதோடு தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருந்தார்.
இந்திய அணிக்காக அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி :
அதனை தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற மிக முக்கியமான காரணமாகவும் திகழ்ந்தார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 15 பந்துகளில் சதமடித்ததோடு மட்டுமின்றி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்காற்றியிருந்தார்.
இப்படி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவரும் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய டி20 அணியில் அறிமுகமாக பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் வெளியாகியிருக்கும் தகவலின் படி : ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் ஜூலை மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. பொதுவாகவே ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகளுக்கு இடையேயான தொடரின் போது முதன்மை அணியை அனுப்பாமல் இரண்டாம் தர இந்திய அணியை அனுப்புவது வழக்கம்.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ அணிக்கு வந்தது ஏன்? - அர்ஜுன் டெண்டுல்கர் விளக்கம்
அந்த வகையில் வைபவ் சூர்யவன்சி இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து அங்கு அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் பல்வேறு இளம் வீரர்கள் இதுபோன்று ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி இருக்கும் வேளையில் வைபவ் சூர்யவன்ஷியும் அதேபோன்று இந்திய அணிக்காக அறிமுகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
