கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை சென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த மிகச் சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பஞ்சாப் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் :
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கிய போட்டியிலும் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் பஞ்சாப் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக விளங்கி வருவதால் இந்த தொடரில் பல்வேறு அணிகளுக்கு போட்டியளிக்கும் மிக முக்கியமான அணியாக பஞ்சாப் அணி மாறியுள்ளது. இந்நிலையில் இந்த முதல் இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தாலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் ஒரு தவறால் தற்போது அந்த அணியின் மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் இப்படி பஞ்சாப் அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட காரணம் யாதெனில் : ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசுவதற்கு போதிய நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்து கொண்டதற்காக ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியிலும் பந்துவீச கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதால் இரண்டாவது முறையாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி ஒட்டுமொத்த அணி வீரர்களுக்கும் ஆறு லட்சம் ரூபாய் அல்லது போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் தொகை இது இரண்டில் எது குறைவோ அதை அபராதமாக விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
