Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

ன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் மதுரை அழகர் சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று புறப்பட்டது. திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை உள்ள மண்டபங்களில் ஆண்டாள் மாலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு நாளை வியாழக்கிழமை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடைகிறது. 01/05/2026 சித்திரை பௌர்ணமி அதிகாலை கள்ளழகர், ஆண்டாள் மாலை அணிந்து ஆற்றில் இறங்குகிறார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1 அன்று நடைபெற உள்ளது. அதிகாலை 5.35 முதல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார்.

ஏப்ரல் 19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரைத் திருவிழாவில், ஏப்ரல் 28 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29 இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றன.

ALSO READ:திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

இதனைத் தொடர்ந்து, மே 1 - கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்கிறார். அதற்காக, ஏப்ரல் 29 இன்று மாலை 6.15க்கு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.

ஏப்ரல் 30 அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11.00 மணி முதல் 12 மணிக்குள், தல்லாகுளத்திலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள கள்ளழகர் புறப்படுவார்.

மே 1 அதிகாலை 5.35 - 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார். அன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மே 2 காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது.

ALSO READ:எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

மே 4 அன்று அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படுவார்.

மே 5 காலை 10.40 - 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு சென்றடைந்து திருவிழா நிறைவு பெறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari