Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

-பத்மன்

ண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை என்று அதிமுகவில் இருந்து பாதிப்பின்றி விலகி, பாஜகவில் சேர்ந்து, பின்னர் அதன் தமிழகத் தலைவர் ஆகவே ஆகிவிட்ட நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

பாஜகவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.

அதேநேரத்தில் வேறு சில விஷயங்களையும் ஆராய வேண்டியுள்ளது. அண்ணாமலை பாஜகவில் சேராமல் நேரடியாக தனிக்கட்சி தொடங்கியிருந்தால் மக்களிடையே இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்க முடியாது. இப்போது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நடிகர் விஜய் தொடங்கிய தவெக பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில் அண்ணாமலையின் புதிய கட்சி அரசியல் களத்தில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே!

விஜய்யுடன் ஒப்பிட்டால் அவருக்குக் கிடைத்திருக்கும் கண்மூடித்தனமான மக்கள் செல்வாக்கு அதாவது பாபுலாரிட்டி, அண்ணாமலைக்கு கிடைக்காது. அவ்வாறின்றி கொள்கை ரீதியில் வழிநடத்தப்படும் கட்சி எனில் என்ன கொள்கை?

மேலும் தமிழகத்தில் திமுகவும் பின்னர் அதிமுகவும் வளர்ச்சி கண்டதற்கு கொள்கையைத் தாண்டிய கவர்ச்சி அரசியலே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கொள்கை அல்லது மக்கள் நலன் பேசும் எல்லோரையும் மக்கள் முழுமூச்சாக ஏற்றுக் கொள்வார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. உதாரணத்துக்கு சீமான், விஜயகாந்த்.

ALSO READ:சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

ஆகையால் தமிழகத்தைப் பொருத்தவரை கொள்கை வாதம் பேசும் பாஜகவுக்கு அண்ணாமலை போன்ற மக்கள் செல்வாக்கைப் பெற்று அதனை மேலும் வளர்க்கும் தலைவர்களும், அண்ணாமலை போன்ற அரசியலில் சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு பாஜக போன்ற கருத்தியல் சார்ந்த, கடினங்களைத் தாண்டி வளரும் கட்சியும் பரஸ்பர அவசியம்.

நடந்தது நடந்துவிட்டது, இனி? என் வழி தனி வழி என்றுபோன அண்ணாமலை அவரது வழி என்ன என்பதைத் தெளிவாக வெட்டவெளிச்சமாக்கட்டும்.

தேசிய, தமிழக வளர்ச்சிக்கு அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம்/ கட்சி சிறப்பான பங்காற்ற வாழ்த்துகள். அதேநேரத்தில் தமிழுணர்வும், ஹிந்து சமுதாயச் சிந்தனையும் கொண்ட தேசியவாதியான என்போன்றோருக்கு, தமிழகத்தில் இனி பாரதிய ஜனதாவின் நிலைப்பாடும் செயல்பாடும் எவ்விதம் அமையும் என்பதுதான் அக்கறை செலுத்த வேண்டிய விஷயம்.

ரஜனிகாந்த் தனிக்கட்சி தொடங்காததால், தங்கள் கட்சியில் இணைந்த அண்ணாமலையை இந்த அளவுக்கு வளர்த்து, உயர்த்திய பாஜக அதன் பயன்களைச் சரியாக அறுவடை செய்யவில்லை. தமிழகத்தில் திமுகவைத் தோற்கடிக்க பாஜகவுக்கு கூட்டணி தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் அதிமுகவின் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அண்ணாமலைக்கும் சீட் கொடுக்காமல், குறைந்த சீட்டுகளுக்கு பாஜக ஒப்புக்கொண்டது மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைத்தது.

ALSO READ:மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தமிழக பாஜக, அண்ணாமலை தலைமையில் அதிமுக அல்லாத கூட்டணி அமைத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். ஒருவேளை அது திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிளந்து திமுகவுக்கே சாதமாகப் போயிருந்தாலும்கூட பாஜகவுக்கு இந்த அளவுக்குப் பாதகம் விளைந்திருக்காது. அவ்வாறின்றி, இதேபோல் மட்டமான தேர்தல் முடிவு கிடைத்திருந்தால், அப்போது அண்ணாமலையை மாற்றியிருக்கலாம். தவறில்லை.

அதிமுக கூட்டணிக்காக பாஜக நீர்த்துப் போகாது இருந்திருந்தால், தீய திராவிடத்துக்கு எதிரான ஹிந்து தேசியவாதத்துக்கான வலு எவ்வகையிலேனும் கூடியிருக்கும்.

போனது போகட்டும்! இனி… சித்தாந்தவாதிகள் என்போரில் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரையும், பதவி சுகத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டு கட்சி வளர்ச்சியையும், கட்சித் தொண்டர்கள் நலனையும் கண்டுகொள்ளாத சிலரையும், கட்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்காக அன்றி சுய வளர்ச்சி, சுய லாபத்துக்காக மட்டுமே கட்சியில் சேர்ந்து, அவ்வகையில் செயல்பட்டுவரும் கணிசமானோரையும், பலவிதமான லாபிகள் நடத்துவோரையும் தயவுதாட்சண்யமின்றி களையெடுக்க பாஜக முன்வர வேண்டும்.

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

ALSO READ:தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தேசிய அளவில் வெறும் 2 சீட்டுகள் என்று கடும் பின்னடைவைக் கண்டு, பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி இந்த அளவுக்கு அசைக்க முடியாத ஆலமரமாக வளரந்துள்ளது பாரதீய ஜனதா. அதன் தமிழக விழுதைச் சற்று சரிசெய்ய வேண்டியுள்ளது. அந்தச் சற்று சாமான்யமானது அல்ல, ஆனால் சாத்தியமானதே!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari