Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

பரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 1 நாளை பாம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா விமரிசையாக நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை சடங்கு நடைபெறும். திருவிழா நிறைவாக நாளை ஏப்ரல் 1ம் தேதி பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறும்.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜை நடத்தி பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சாமி எழுந்தருளி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ ஆராட்டு ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் காலை 10.45 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்து தொடர்ந்து 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு களபம் சார்த்தி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஆராட்டு நடைபெறும்.

ஆராட்டு சடங்குகளுக்கு பின்னர் புத்தாடை அணிவிக்கப்பட்ட அய்யப்ப சாமி பக்தர்களின் தரிசனத்திற்காக பம்பை கணபதி கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலிப்பார். பிற்பகல் 3 மணிக்கு சாமி ஊர்வலம் பம்பை கணபதி கோவிலில் இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டு இந்த ஊர்வலம் சன்னிதானம் வந்ததும் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர்.

தற்போது சபரிமலை வனப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பம்பை நதியில் குறிப்பிடத்தக்க அளவு நீர்வரத்து உள்ளது.

பக்தர்களுக்கு எச்சரிக்கை: சமீபத்தில் கேரளாவில் நிலவிய 'அமீபா மூளை காய்ச்சல்' அச்சுறுத்தல் காரணமாக, பம்பையில் நீராடும் போது மூக்கை இரண்டு விரல்களால் மூடிக்கொண்டு நீராடுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆற்றில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலங்களில் பம்பை நதி வறண்டு விடாமல் இருக்க, அருகிலுள்ள சபரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari