கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டிய முக்கிய நபர் சிக்கினார்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு முக்கிய நபர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளதாக தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகள் தமிழகப் பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் முத்தரசு என்பவருக்கு சொந்தமான காலியிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு கிடந்தன.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்து.
விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் டிரைவர் திம்மராஜ் (24) என்பவர் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு உதவியதாகக் கூறப்படும் ஆட்டோக்காண்ட்ராக்டர் முருகன் (45), திருமலைச்சாமி (40), வெள்ளைத்துரை (55) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தனிப்படை போலீசார் திருவனந்தபுரம் சென்று, இந்த விவகாரத்தில் முக்கிய நபராகக் குறிப்பிடப்படும் அமிர்தராஜ் மகன் பாபுராஜ் (45) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.
கேரளாவில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் வியாபாரம் செய்து வந்த பாபுராஜ், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, கழிவுகளை மட்டும் லாரிகளில் ஏற்றி தமிழகத்திற்கு அனுப்பும் பணியையும் செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் திரும்பி வரும்போது, டிரைவர்களுக்கு பணம் கொடுத்து கழிவுகளை ஏற்றிவிடுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு லோடுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் கொடுத்து கழிவுகளை தமிழகத்திற்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாபுராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகப் பகுதிகளில் கொட்டப்படுவதைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா? இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய அனைவரும் முழுமையாக விசாரிக்கப்படுவார்களா?
பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Posts by Sakthi Paramasivan.k:
கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டிய முக்கிய நபர் சிக்கினார்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு முக்கிய நபர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளதாக தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

