Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

#image_title

ரு மாநிலத்தில் கவர்னருக்கு உரிய அதிகாரங்களும் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்


கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர் கலைமகள்

ஆளுநர் (Governor) என்றால் ஆட்சி செய்பவர் என்றுஸபொருள் கொள்ள வேண்டும். ஆளுநர் என்ற சொல் gouverneur (of French language) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, மத்திய அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

கவர்னராக ஒருவர் நியமனம் பெற 35 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது.5 ஆண்டுகள் பதவி வைக்கலாம். குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் இன்னொரு மாநிலத்திற்கு பொறுப்பு கவுனராகவும் செயல்பட முடியும். பொதுவாக எந்த மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்படுகிறாரோ அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது! அதேபோல ஆதாயம் தரக்கூடிய எந்த ஒரு பதவியும் வகிக்க கூடாது!

குடியரசுத் தலைவரின் விருப்பப்படி ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கவர்னர் நீக்கப்படவும் வாய்ப்புண்டு. ஒரு கவர்னர் தான் பதவி வகிக்கும் மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் பொழுது அல்லது தன் சொந்த (பிறந்த) மாநிலத்திற்குச் செல்லும் பொழுது உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

ALSO READ:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) மாநிலத்தின் பெயரளவு நிர்வாகத் தலைவராகவும், மத்திய அரசின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார். அவர் சட்டப் பேரவை நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், முதலமைச்சரை நியமித்தல் மற்றும் மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்ய வேண்டும் .

மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநரின் பெயரிலேயே மேற்கொள்ள வேண்டும். மாநிலத் தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களை நியமிப்பது ஆளுநரின் கடமை.ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தராகச்(Chancellor) செயல்படுவார்

சட்டப்பேரவையைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் கலைத்தல் (முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில்) ஆகியவற்றையும் கவர்னர் தான் செய்ய முடியும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, அல்லது சில மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைப்பது (Article 200, 201). மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை (Budget) பேரவையில் தாக்கல் செய்ய வைப்பது மற்றும் ஆளுநரின் பரிந்துரையின்றி மானியக் கோரிக்கைகளைச் சட்டப்பேரவையில் முன்வைக்க முடியாது.

மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் (அ) சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். இதுவும்கூட ஒரு மரபுசார்ந்த அதிகாரமே!ஆளுநர் பணமசோதாவைத்தவிர வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில் ஒரு மசோதாக்களுக்கான தன்னுடைய ஒப்புதலை வழங்காமல், அம்மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில், எந்தக் கட்சி ஆட்சியமைக்கலாம் என்பதை முடிவெடுத்தல், மற்றும் மாநில அரசைக் கலைக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தல் (Article 356) போன்ற சிறப்பு அதிகாரங்களும் கவர்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (Majority) கிடைக்காத நிலையில், அது தொங்கு சட்டசபை (Hung Assembly) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 163 மற்றும் 164-ன்படி, ஆளுநர் தனது சூழ்நிலை விருப்புரிமை அதிகாரத்தைப் (Situational Discretion) பயன்படுத்தி, ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில்(தனியாக ஒரு கட்சியை மெஜாரிட்டி பெறாத நிலையில்) எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அப்படி ஆட்சி அமைக்க கூடியவர்கள் இரண்டு வாரத்திற்குள் தங்களுடைய பெரும்பான்மையை,நம்பகத் தன்மையை சட்டமன்றத்தில்(Floor Test) காட்ட வேண்டும்.

எண்ணிக்கையில் அதிகம் ஒரு கட்சிக்கு உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களால் ஆட்சி அமைக்க வேண்டிய உறுப்பினர்களை பெற முடியாது என்று கவர்னர் எண்ணினால் முழுமையான பலத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டு பின்னரே ஆட்சி அமைக்க அழைப்பார். கவர்னரின் விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது!

தனிப்பட்ட முறையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சி அமைக்காமல் போனால் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து தங்களிடம் மெஜாரிட்டி பலம் இருப்பதை நிரூபித்தால் அவரையும் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கலாம். இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கவர்னருக்கு கட்டளை இட முடியாது! அதுபோன்ற நிலையில் சட்ட வல்லுநருடன் கலந்து ஆலோசித்து கவர்னர் ஒரு முடிவை எடுப்பார்!

இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிலை தொங்கு சட்டமன்ற நிலை தான்! எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் அறுதிப் பெரும்பான்மை இல்லை. விஜய் கட்சியான த.வெ.கவிற்கு 108 உறுப்பினர்கள் தான் உள்ளார்கள். ஆட்சி கட்டிலில் ஏற 118 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.10 உறுப்பினர்கள் ஆதரவை வெளி கட்சியினரிடமிருந்து பெற வேண்டிய நிலை தான் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக (Post-poll alliance) இணைந்து பெரும்பான்மை இடங்களை (எ.கா., தமிழ்நாட்டில் 118-க்கும் அதிகமான இடங்கள்) நிரூபிக்க விஜய் முன்னெடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். கூட்டணி சர்க்கார் என்று அவர் சொன்னதால் அந்த கூட்டணிக்கு உரிய நபர்கள் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது!!

நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test): ஆட்சி அமைக்க அழைக்கப்படுபவர், சட்டசபையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க (Floor Test) ஆளுநர் உத்தரவிடுவார். ஒருவேளை யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) நடைமுறைக்கு வரும்.எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்சத்தில், மாநிலத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவானதாகக் கருதி, பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைக்கப்படும்.

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari