Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

னாதன தர்மத்தை ஒழிப்பதையே தங்கள் குறிக்கோளாகவும் செயல்பாடாகவும் கொண்ட சிலர் உள்ளனர்.

நிரந்தரப் பிரகாச வடிவமான சூரிய ஒளியை அழிப்பேன் என்பது எத்தனை முட்டாள்தனமோ, இதுவும் அத்தகையதே. சனாதனம் என்றால் சாஸ்வதம், நித்தியம், காலத்தால் அழியாதது. தர்மம் என்றால் உலகளாவிய பிரபஞ்ச ஒழுங்கு. இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. இருப்பினும் தம்முடைய மதங்களைப் பரப்புவதற்காக, ஆழமாக வேரூன்றிய இந்து தர்மத்தை வேரறுக்க விரோத சக்திகள் இடைவிடாமல் பணி செய்து வருகின்றன. தம் லட்சியத்தை நிறைவேற்ற சில நூறாண்டு காலமாக முயன்று வருகின்றன. ஆசை காட்டுதல், அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம், வன்முறை, இயலாவிட்டால் கொன்றழிப்பது ஆகியவற்றின் மூலம் அவர்கள் தம் குறிக்கோளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பெரும் இழப்புகளைச் சந்தித்த போதிலும் சனாதன தர்மம் உறுதியுடனும் உயிர்ப்புடனும் நிலைத்திருக்கிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத அவர்கள் திரிபுகளையும் தீய நோக்கிலான விளக்கங்களையும் பரப்பி நம் புத்தியைச் சிதைக்க முயன்றனர். நம்மிடையே சுய வெறுப்பை விதைக்கத் தந்திரமான கதைகளைக் கட்டிவிட்டு, நம்முடைய புனித நூல்கள், மத நிறுவனங்கள், ஆன்மீக ஆசிரியர்கள், கோவில்கள் ஆகியவற்றின் மகத்துவம் குறித்துத் தவறான கருத்துக்களைப் பரப்பி அறிவாற்றலை அழிக்கத் திட்டம் தீட்டினர்.

தங்களைப் பகுத்தறிவாளர்கள், விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு அதே சமயம் தீவிர மதச் சார்புடையவர்களாக வாழும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மேதாவிகள் திட்டமிட்ட சதித்திட்டங்களை வகுத்தனர். சாதிப் பாகுபாடு என்பதை நம்மிடம் உள்ள ஒரு அடிப்படைப் பிழையாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். அது உண்மைதானே? என்று நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும் ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்தித் தொடர்ந்து நம்மைத் தவறான பாதையில் இட்டுச் செல்கிறார்கள். நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே சாதி அமைப்பு ஒரு குறைபாடு என்றும், நம் பெருமையை உண்மையாக வெளிப்படுத்த இந்தக் குறையைச் சரிசெய்ய வேண்டும் என்றும் நம்புவதைக் காண்கிறோம்.

சாதி என்ற குறிப்பிட்ட அடையாளம் இல்லாவிட்டாலும் உலகம் முழுவதும் உள்ள சமூகங்களில் ஏதோ ஒரு வகையான பிரிவினை இருக்கவே செய்கிறது. வரலாறு குறித்த கடந்த காலப் புரிதலும், நிகழ்காலப் புரிதலும் இல்லாத இளைஞர்கள் பெரும்பாலும் இந்த எதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரு மகத்தான மரபைச் சேர்ந்தவர்கள் என்பதை உணரும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

ALSO READ:மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

பாரத தேசம் பல யுகங்களுக்கு முன்பே தர்க்கம், தத்துவம் போன்ற விசாரணைகள் மூலம் அற்புதமான சாஸ்திரங்களை வெளியிட்டு அறிவியல் உலகில் முன்னோடியாக விளங்கியது. யோகா, ஆயுர்வேதம், இல்லற தர்மம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேதாந்த சிந்தனை, நியாய, வைசேஷிக தரிசனம், மந்திர ரகசியம், கோவில் கட்டிடக்கலை, ஜோதிடம், கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று, அனைத்தையும் ஒருங்கிணைந்த சூத்திரத்தில் இணைத்து, ஹிந்து மதமாக உருவாக்கிய அற்புதப் பரம்பரை நமது. இவற்றை உணர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நம்மைத் தாக்கிய வெளிநாட்டு சக்திகள் இந்தத் தொடர்பின்மைக்கு ஆரம்பக் காரணமாக இருந்தன. அவர்களைப் பின்பற்றிய போலி தேசியவாதிகள் அதற்கு அடுத்தபடியாக அமைந்தனர்.

வாழ்க்கை முறைகள், ரசனைகள், ஆர்வங்கள், திறன்கள், கால நேரங்கள் ஆகியவை எல்லோருக்கும் ஒன்று போல் இருக்காது. இந்த இயற்கையான உண்மையை முனிவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். ஒருவருடைய வாழ்க்கை முறை மற்றதை விட உயர்ந்தது என்று ஒருவர் கருதுவதால் மட்டுமே அனைவரும் அதே மாதிரியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற யதார்த்தமற்ற கருத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. சமூகத்தில் பல்வேறு வாழ்க்கை முறைகள் இணைந்து இருக்க முடியும் என்பதையும், அவ்வாறு இருப்பது அவசியம் என்பதையும், அதன் மூலம் தனிநபர்கள் ஒருவருக்கொருவர் பயனடைய முடியும் என்பதையும் அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்த புரிதலின் அடிப்படையிலேயே பல்வேறு 'வர்ணங்களும்' சாதிகளும் உருவாயின. பலவிதமான மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு மலர் மாலையைப் போலவே, பன்முகத்தன்மைக்கு மத்தியிலும் ஒற்றுமையை நிலைநாட்டும் ஒரு அமைப்பாக சனாதன தர்மம் திகழ்கிறது. இவை உயர்வு, தாழ்வு என்ற படிநிலையைக் குறிக்காமல் வெவ்வேறு வகையிலான பணிகளையும் பொறுப்புகளையுமே குறிக்கின்றன. ஆனால் வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளத் தவறி, தங்கள் சொந்த மதத்தின் மீது கொண்ட மோகத்தாலும், பிறருடைய நற்பண்புகளையும் குறைகளாகக் காணும் வக்கிரமான மனப்பான்மையாலும் உந்தப்பட்டு சமத்துவமின்மை குறித்த போலியான பிம்பங்களை உருவாக்கினர். தனிநபர்களின் தவறுகளை ஒட்டுமொத்த அமைப்பின் மீது சுமத்தினார்கள். தம் சொந்த மத தேசங்களில் உள்மோதல்களாலும், பரஸ்பர பகையாலும் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அழியும் உண்மையை மூடி மறைத்தார்கள்.

ALSO READ:வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இந்தச் சூழலில், சுவாமி விவேகானந்தர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துத் திரும்பியபோது கூறிய வார்த்தைகளை நினைவுகூர்வது அவசியம்: 'உலகெங்கிலும் பல மதங்களையும் கலாச்சாரங்களையும், நாடுகளையும் கண்டேன். ஆனால் இந்தியாவைப் போலச் சிறந்த நாடு வேறெதுவும் இல்லை. நம் மதத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் பிற கலாச்சாரங்களுடன் ஒப்பிடுகையில் அவை மிகச் சிறியவையே. மேலும் அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன. இந்து மதம் மட்டுமே குறைபாடுகள் மிகக் குறைவாகவும் அதே சமயம் உண்மையாகவே திருத்தக்கூடிய வகையிலும் உள்ள ஒரு மதம்'

உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவருக்கும் உள்ளே இருக்கும் 'ஆத்ம சைதன்யம்' ஒன்றே. உலகியல் நடத்தைகளில் வெளிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் பரமார்த்தமான இறுதி இலக்கில் ஒரே தத்துவமே நிலவுகிறது என்ற ஆழமான தத்துவ உண்மையை வெளியிட்ட அற்புதமான தெய்வீகப் பார்வை சநாதன தர்மத்திற்கு மட்டுமே உரித்தானது என்பதை மறக்கக்கூடாது.

கடந்த காலங்களில் வெவ்வேறு உடல்களில் வாழ்ந்து, இன்று தற்போதைய உடலில் வசித்து எதிர்காலப் பிறவிகளில் என்ன வடிவத்தை எடுப்போம் என்பது தெரியாமல் இருப்பது என்ற உண்மையை விளக்கும் மறுபிறவிக் கொள்கை, சனாதன தர்மத்திற்கு மட்டுமே உரிய தனித்துவமான ஒன்று. இந்த வாழ்க்கையில் வழங்கப்பட்ட உடலையும் பரம்பரையையும் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஒரு மதத்தில் பகைமைக்கு இடம் எங்கே?

சானாதன தர்மத்தை வெறுப்பவர்கள், எந்த மதத்தவரை திருப்திப்படுத்த தீய கருத்துக்களைப் பரப்ப முயல்கிறார்கள் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே உள்ளது. இந்துக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை உணராத ஒரு சமூகமாகவே பார்க்கப்படுகிறார்கள். சுயநலத்திற்காகத் தங்கள் சொந்த அழிவைக் கூடப் பொருட்படுத்தாத மக்களாக அவர்கள் கருதப்படுகிறார்கள். அதிகாரத்தை இழந்தவர்களும், புதிதாகப் பெற்றவர்களும் சட்டமன்றத்தில், 'சநாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்' என்று அழைப்பு விடுப்பதும், வேறு சிலர் அதை ஆதரிப்பதும் இந்தப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

ALSO READ:தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

நம் புராதன கோவில்களின் வருவாயில் வசதியாக இயங்கி, அவற்றைச் சூறையாடித் தவறாகப் பயன்படுத்தும் அரசுகள் அந்தக் கோவில்களின் அடித்தளமாக விளங்கும் சனாதன தர்மத்தை அழிப்பதாக வெளிப்படையாகச் சபதம் செய்ய முடிகிறது என்றால், அது உறக்கத்தில் இருக்கும் இந்துக்களின் ஆழ்ந்த அலட்சியத்தையே காட்டுகிறது.

இலவசங்கள், தள்ளுபடிகள், மானியங்கள் போன்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு மாநிலத்தின் கூட்டு நலன்கள் சிதைக்கப்படுகின்றன என்ற உண்மையை உணராமல் இருப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே. 'நாட்டின் வளங்கள் அழிந்தாலும் சரி, நாடு துண்டாடப்பட்டாலும் சரி, நமது மதங்கள் மேலோங்கி நின்றால் போதும்' என்று நம்புபவர்களின் ஆதரவுடன் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் சனாதன தர்மத்திற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் அரசுகள் சில மாநிலங்களில் ஆட்சியில் நீடிக்கின்றன.

இத்தகைய கசப்பான உண்மைகளை இந்து சமூகம் எப்போது முழுமையாக உணரப் போகிறது?

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் ஜூன் 2026)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari