Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி ஆகிய அம்சங்களில், அமெரிக்கா இந்திய மக்களின் கனவு இலக்காகத் திகழத் தொடங்கியதற்கு அதிக காலம் ஆகவில்லை.

ஆனால், டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பானதாகவும், கொந்தளிப்பானதாகவும் மாறியுள்ளது. ஒருபுறம் வேலைவாய்ப்புச் சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது; மறுபுறம், சர்வதேசக் குடியேறிகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

H1B விசா நடைமுறைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினர் மீது தீவிர நடவடிக்கை எடுக்குமாறு குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் தொடர் அழுத்தங்கள் ஆகியவை, அங்குள்ள இந்தியர்களுக்கு எதிராக ஒரு கடுமையான சூழலை உருவாக்கியுள்ளன.

இந்த நேரத்தில், 'Carnegie Endowment' நிறுவனம் நடத்திய அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று, முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும், இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 1000 இந்தியர்களில் சுமார் 40 சதவீதத்தினர், அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்து வருவதாக அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளவர்களில் 58 சதவீதத்தினர், டொனால்ட் டிரம்ப் காரணமாக அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழலே தாங்கள் இம்முடிவை எடுத்ததற்குக் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறி வாழ்வது குறித்த இந்திய மக்களின் 'அமெரிக்கக் கனவு' (American Dream), மெதுவாக இருப்பினும் உறுதியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகவே தற்போதைய சூழல் உணர்த்துகிறது. அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது; அதேவேளையில், அங்கு ஏற்கனவே வசித்துவரும் இந்தியர்களும் கூடிய விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்த் இந்தியா திரும்பி, தமிழகத்தின் தென்காசிக்கு அருகில் கிராமத்தைத் தத்தெடுத்து, ஸோஹோ நிறுவனத்தின் கிளையை நிறுவி சாதனை படைத்து வரும் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இன்று தனது சமூகத் தளத்தில் பதிந்துள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கான திறந்த மடல்.

பாரதத்திலிருந்து வரும் என் அன்பு சகோதர சகோதரிகளே:

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள். நீங்கள் மகத்தான வெற்றியை அடைந்தீர்கள். அமெரிக்கா நமக்கு நல்லதையே செய்தது. அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் - நன்றியுணர்வே நமது பாரத வழி.

ஆயினும், இன்று கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் - ஒருவேளை பெரும்பான்மையினர் இல்லாவிட்டாலும், அதற்கு வெகு தொலைவில் இல்லாதவர்கள் - இந்தியர்கள் அமெரிக்க வேலைகளைப் 'பறித்துக் கொள்கிறார்கள்' என்றும், அமெரிக்காவில் நமது வெற்றி நியாயமற்ற முறையில் சம்பாதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள்.

அடுத்த தேர்தல் இதைச் சரிசெய்துவிடும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் தேர்வு, நமது பாரத நாகரிகத்தை வெறுப்பவர்களுக்கும், நாகரிகத்தையே வெறுப்பவர்களுக்கும் இடையே இருக்கும். அதுதான் 'தீவிர வலதுசாரி' மற்றும் 'விழிப்புணர்வு இடதுசாரி' இடையேயான போர். அந்த மோதலுக்கு நீங்கள் வெறும் பார்வையாளர்களே.

இதற்கிடையில், இப்போதும் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கப்போகும் ஒரு விஷயம் உண்டு:

உலகெங்கிலும் இந்தியர்கள் பெறும் மரியாதை, பெருமளவில் இந்தியாவின் அதிர்ஷ்டத்தையே சார்ந்திருக்கும். இந்தியா ஏழையாகவே நீடித்தால், முற்போக்கு இடதுசாரிகள் பரிதாபத்துடன் நமக்கு அறநெறிப் போதனைகளை வழங்குவார்கள்; தீவிர வலதுசாரிகளோ, இகழ்ச்சியுடன் ('நரகக் குழி') வேறுபட்ட அறநெறிப் போதனைகளை வழங்குவார்கள். இவ்விரண்டையும் நாம் மரியாதையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.

இன்றைய உலகில், செழிப்பு மற்றும் பாதுகாப்புடன் மரியாதையும் ஒரே மூலத்திலிருந்துதான் வருகிறது: அது ஒரு தேசத்தின் தொழில்நுட்பத் திறமை. அந்தத் திறமையை அடைவதற்குத் தேவையான அறிவாற்றலை இந்தியா உருவாக்குகிறது, ஆனால் வருந்தத்தக்க வகையில், அந்தத் திறமையில் பெரும்பகுதியை, குறிப்பாக அமெரிக்காவிற்கு, நாம் ஏற்றுமதி செய்துவிட்டோம்.

இந்தியாவில் அந்தத் திறமையை நாம் வளர்க்கும்போது, நமது நாகரிக வலிமை தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும்.

உங்களில் பலருக்கு இதைப் பற்றி சிந்திப்பது கடினமாக இருந்தாலும், தயவுசெய்து தாயகம் திரும்புங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை. நமது பரந்த இளைஞர் சமுதாயத்தை செழிப்பின் பாதையில் வழிநடத்த, பல ஆண்டுகளாக நீங்கள் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவம் அவர்களுக்குத் தேவை. ஒரு சமுதாயப் பணி (சமயப் பிரச்சார) ஆர்வத்துடன் இதைச் செய்வோம்.

மரியாதையுடன்,

ஸ்ரீதர் வேம்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari