Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!


நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
சென்னை -31

89391 49466
விலை : ₹ 125/-

தொல்லியல் இன்று ஒரு அறிவியலாக வளர்ந்திருக்கிறது. அறிவியல் என்ற சொல்லுக்குள் பல துறைகள் இருப்பது போலவே இதிலும் பல துறைகள் , தளங்கள் உள்ளன.

ஒரு தொல்லியலாளரின் வேலை பாதுகாப்பாகத் தோண்டுவது, பொருட்களை மீட்பது, அவற்றை துல்லியமாக குறியிட்டு அறிக்கை அளிப்பது மட்டும்தான், என்கிறார் பி எஸ் ராமன் என்ற தொல்லியல் துறை அதிகாரி.

செராமிக் ஆய்வாளர்கள் களிமண்ணை அடையாளம் காண்பார்கள். கல்வெட்டியியல் அறிஞர்கள் எழுத்துக்களை படிப்பார்கள். கதிரியக்கக் கரிம ஆய்வகங்கள் வயதை கணக்கிடும். அதில் இருக்கும் கலாச்சார தன்மைகளை ஆராய்வார்கள். இதெல்லாம் அடிப்படை ஆய்வுகள். இதைச் செய்பவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகளை கொண்டு முடிவுகளை நோக்கி செல்பவர்கள், வரலாற்றின் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்குபவர்கள் வரலாற்று ஆசிரியர்கள். அடிப்படை ஆய்வு தரவுகளையும் அதன் மூலம் கிடைத்த சித்திரத்தையும் கொண்டு வரலாற்றை தீர்மானிக்கும் கொள்கைகளை வகுப்பவர்கள் வரலாற்று கோட்பாட்டாளர்கள்.

ஒவ்வொரு கலாச்சாரமும் தான் மிகவும் பழமையானதாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. இந்த பெருமித கனவுக்கு தொல்லியலில் இடமில்லை. தொல்லியலில் காலக் கணிப்பு அனைத்தும் அறிவியல் அளவீட்டை பொறுத்தவை. கற்பனைக்கோ உற்சாகத்திற்கோ இதில் இடமில்லை . எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல பொறுமையாகவும் இருக்க வேண்டும். மண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பொறுமையாக இருந்துள்ளது. முடிவுகளை தீர்மானிக்க நாம் இன்னும் சில ஆண்டுகள் பொறுமையாக இருப்பதில் தவறில்லை. அவசரப்பட்டு தவறிழைத்தால் திருத்துவது மிகவும் கடினம்.

எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற தொல்லியலாளர்களில் ஒருவரான சர் மோர்டிமர் வீலர் சிந்து சமவெளி அகழ்வாராட்சியில் பணிபுரிந்த போது, அங்குள்ள கோட்டை சுவர்களையும் அம்பு முனைகளையும் கண்டார். உடனடியாக, 'இங்கே போர் நடந்ததுள்ளது. ஆரியர்கள் ஹரப்பர்களை போரிட்டு விரட்டி இருக்க வேண்டும்', என்று அறிவித்தார்.

ALSO READ:ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அதற்கு போதிய ஆதாரம் இல்லை. அதொரு சாத்தியக்கூறு மட்டும்தான். ஆனால் அவர் அவசரப்பட்டு அறிவித்ததன் விளைவு பல தசாப்தங்களாக இனவாத கோட்பாட்டிற்கு வழிவகுத்தது . ஆரிய படையெடுப்புக் கோட்பாடு சமூக மற்றும் அரசியல் தளத்தையே மாற்றிவிட்டது.

பிற்கால ஆராய்ச்சிகள் அதுபோன்ற வன்முறை படையெடுப்புகளுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என்றது. காலநிலை மாற்றம், ஆற்றின் திசை மாற்றம், வர்த்தக காரணங்கள் என்று பல்வேறு காரணங்களை சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவிற்கு காரணம் காட்டினார்கள். ஆனால் வீலரின் ஆரம்பகால அவசரம் தேசத்தையே பிளக்கும் அரசியலுக்கு இன்று வரை அடிநாதமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியில் 1980 களில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் இரும்பு பயன்பாட்டை தொல்லியல் துறை கண்டறிந்தது. இது தமிழர்களின் தொழில் துறை திறனை பற்றி கூறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டன. இது கொடுமணல் கண்டுபிடிப்புகளில் இருந்து மாறுபட்ட, விரிவான சடங்கு மரபுகளை காட்டியது. புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு அகழ்வாராய்ச்சிகள் சர்வதேச வர்த்தக இணைப்புகள், உள்நாட்டு வாழ்க்கை முறைக்கு மாறுபட்ட உலகளாவிய கடற்கரை வாழ்க்கையை காட்டிற்று. இதில் எல்லாம் விவாதம் எழுவில்லை. கீழடியில் விவாதம் எழுந்துள்ளது. அது ஏன் ?

தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக குடி கொண்டிருக்கும் திராவிட அரசியல் கருத்தியலே அதற்கு காரணம். மதம் சாராத, பிராமண ஆதிக்கம் இல்லாத, தன்னாட்சி பெற்ற ஒரு தமிழ் சமுதாயத்தை நிறுவ வேண்டும் என்பது அதன் ஆசை. தமிழ் சமுதாயம் ஒரு தொன்மையான, பகுத்தறிவு மிக்க, சமத்துவமான, மதசார்பற்ற கடந்த காலத்தை கொண்டதாக இருந்தால் நிகழ்கால பிரிவினை அரசியலுக்கு ஒரு தார்மீக அடித்தளம் கிடைத்துவிடும். அவர்களது கருத்தியலின்படி தமிழ் சமுதாயம் நகர நாகரீகம் கொண்டதாக, எழுத்தறிவு பெற்றதாக, ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும்.

ALSO READ:சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கீழடி இவற்றை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஆரம்பகால அகழ்வாய்வில் செங்கல் கட்டுமானங்கள், மட்பாண்டங்கள், மணிகள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் வெளிவந்தன. உடனே இது கோயில்கள் இல்லாத, கடவுள்கள் இல்லாத, சடங்குகள் இல்லாத ஒரு உலகம். இது மதத்தால் அல்லாமல், பகுத்தறிவாலும் , நகர திட்டமிடலாலும் வரையறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் என்று கருதப்பட்டது. உடனடியாக , கொண்டாட்டத்துடன் பிரகடனம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர் தரப்பு என்று எதுவும் எழவில்லை. கீழடி வேதகாலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றோ அல்லது சமஸ்கிருத கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றோ எந்த ஒரு பெரிய அரசியல் அல்லது பண்பாட்டுக் குழுவும் கோரவில்லை. எதிர்ப்பு இல்லாத நிலை ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. அதில் திராவிட இயக்கத்தின் விளக்கங்கள் நிலை பெற்றன.

கீழடியில் கோயில்கள் கண்டுபிடிக்கப்படாததால் தமிழ் சமுதாயம் மதச்சார்பற்றது என்று கூறப்பட்டது. இது திராவிட கற்பனைக்கு கச்சிதமாக பொருந்தியது. மதத்திற்கு முன்பே தமிழ் சமுதாயம் நுட்பமாக இருந்திருந்தால் மதமே வெளியில் இருந்து வந்த ஒரு ஊடுருவலாக மாறுகிறது.

ஒரு வடிகால் அமைப்பு பகுத்தறிவு திட்டமிடலுக்கு ஆதாரமாக மாறியது. கீறல்கள் கொண்ட ஒரு பானை பரவலான எழுத்தறிவுக்கு ஆதாரமாக மாறியது. சந்தேகம், கேள்விகள் எல்லாம் 'தமிழ்த் துரோக'மாக ஆனது. நுட்பமான அறிவியல் விளக்கங்கள் 'சதி' என்று நிராகரிக்கப்பட்டன. தொல்லியலுக்கு இது மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது.

கடவுளர்கள், சடங்குகள், பலிகள், சகுனங்கள், ஆவேசம் மற்றும் நிலத்தின் புனிதத் தன்மை ஆகியவற்றை கொண்டதாக தமிழ் சமுதாயம் இருந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் ஒருபோதும் மதச்சார்பற்றதாகவோ நாத்திகமாகவோ இருந்ததில்லை. இந்த குணங்கள் அனைத்தும் நவீன அரசியல் கொள்கைகள். கீழடியில் இவை இருந்ததாக பாசாங்கு செய்வது கடந்த காலத்தை சிதைப்பதற்கு சமமாகும்.

ALSO READ:சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

சங்க கால தமிழ் இலக்கியங்களில் நாத்திகம் கொண்ட தமிழ் சமுதாயம் இல்லை. தனிமைப்பட்ட நாகரீகம் இல்லை. வெளியில் இருந்து கலாச்சார திணிப்பு இல்லை. 'ஆரியர் திராவிடர்' என்ற பிளவு இல்லை. வேத கடவுளர்களையும் ஏற்றுக் கொண்டதாக, வேள்வி தீ வளர்த்ததாக, மந்திரங்கள் ஓதியதாக, மூதாதையர்களை வழிபட்டதாக, அவர்களுக்கு நினைவு தூண்களை அமைப்பதாக, பலிமண்டபங்கள் கொண்டதாக, யாத்ரிக பாதைகள், புனிதமான நிலப்பரப்பு , அண்டவியல் அறிவு கொண்டதாக தமிழ் சமுதாயம் இருந்ததென சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

கீழடி தொல்லியல் ஆய்வில் தோற்கவில்லை. தொல்லியல் ஆய்வுதான் கீழடியில் தோற்றுவிட்டது. தமிழக அரசு இதை ஒரு அடையாள போர்க்களம் ஆக்கிவிட்டது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற பல தளங்கள் ஒரு சங்கடமான உண்மையை காட்டுகின்றன. தமிழ் தொல்லியல் ஆய்வில் மண் மவுனமாக இருப்பதால் அது தோல்வி அடையவில்லை. மாறாக மாநில ஆட்சி அதிகாரம் அதன் பேச்சை பாதியிலேயே நிறுத்துகிறது. அதனால்தான் அவை தோல்வி அடைகின்றன.

அறிவியல் பூர்வமான ஆய்வு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு பொறுமை அவசியம். மண் அறிஞர்களிடம் பேசும். சினிமா நடிகர்களிடம் அல்ல. ஆட்சி மாறும் அப்போது காட்சியும் மாறும். உண்மை வெளிப்படும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari