Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

பரிமலைக்கு மகரவிளக்கு பூஜை முடிந்தும்கூட, இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையவே இல்லை.

தற்போது சபரிமலைமில் நடைபெறும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட்ட பல்வேறு வழக்கமான பூஜைகள், அபிஷேகம் ஐயப்பனுக்கு நடைபெறுவதால் பக்தர்கள் வருகை குறையவே இல்லை.

வரும் ஜன.19 வரை ஐயனை பக்தர்கள் தரிசனம் செய்து செல்லலாம்.

மகரஜோதி காலத்தில் சபரிமலை பகவானின் சந்நிதியில் பக்தர்களுக்கு நடக்கும் அநீதிகள் மிக அதிகமாக இருந்தது. மகரஜோதியை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி 40,000 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்றும், ஸ்பாட் புக்கிங் இல்லை என்றும் தேவஸ்வம் போர்டு அறிவித்தது. இந்த பச்சைப் பொய்யை நம்பி சபரிமலைக்குச் சென்று சங்கடத்திற்கு ஆளான ஆயிரக்கணக்கான பக்தர்களின் குமுறல் இது.

ஏலத்திற்கு விடப்பட்டுள்ள கடைகளின், வியாபாரத்தையும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு அளவுக்கு அதிகமான பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தேவஸ்வம் போர்டு. ஆன்லைன் புக்கிங் 40,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, ஸ்பாட் புக்கிங் இல்லவே இல்லை. பிறகு எப்படி 1,50,000 முதல் இரண்டு லட்சம் பேருக்கு மேல் பக்தர்கள் குவிந்தார்கள்?

குழந்தைகளுடன் வந்தவர்களுக்கும், முதியோர்களுக்கும் திறக்காத மரக்கொட்டம் கேட், கேரள அரசுத் துறை மற்றும் தேவஸ்வம் போர்டு ஊழியர்களையும், அதிகாரிகளையும் கண்டால் தானாகவே திறப்பதுதான் இவர்களின் மனித நேயம்!

நீதிமன்றம் எத்தனை முறை கண்டித்தும், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் தனி வழி அமைக்காதது, ஈவு இரக்கமற்ற, கண்டிக்க வேண்டிய கொடுஞ்செயல்! பனியிலும், மழையிலும், அவதிப்பட்டு 7 மணி நேரம் வரிசையில் நின்ற குழந்தைகளைக் காணும்போது நெஞ்சு பதைக்கிறது.

ALSO READ:முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் மரக்கொட்டம் வழியாக அனுமதிக்காததால், 2 வயது குழந்தையுடன், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பக்தர் தன் குழந்தையுடன் 7 மணி நேரம் நீண்ட இன்னளுக்குப் பிறகு சுவாமி தரிசனம் செய்தார்.

இது தவிர, புண்ணியமான பதினெட்டாம் படி மேல் போலீஸ் காட்டுமிராண்டிகள் செய்வதுதான் அக்கிரமத்தின் உச்சம்!

பதினெட்டாம் படியேறும் சாமிமார்களில் சிலர், ஆர்வ மிகுதியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயல்கின்றனர். அவர்களை முதுகில் அடித்து இழுத்துத் தள்ளுவது, கைகளால் ஓங்கிக் குத்துவது, எட்டி உதைப்பது போன்ற வன்முறைகளைச் செய்ய காவல்துறைக்கு யார் அனுமதி தந்தது?

காலையில் கணபதி ஹோமம் என்ற பெயரில் பக்தர்களைப் பிழிந்து வசூல் வேட்டை, சாதாரணமாக தினசரி நடக்கும் ஒரு பூஜை கணபதி ஹோமம், அதையும் காசாக்கும் நோக்கில், ஆன்லைன் மூலம் 375 ரூபாய் பெற்றுக்கொண்டு 15 பேருக்கு மேல் நிற்க முடியாத இடத்தில், 40 முதல் 100 பேருக்கு மேல் டிக்கெட் விற்று, சிறிய இடத்திற்குள் பக்தர்களை நசுக்கி, அப்படி வரும் பாவக்காசை வைத்து என்ன செய்யப்போகிறது?

தேவஸ்வம் போர்டு, ஆன்லைனில் ரூம் புக்கிங் செய்து ரசீது வைத்திருப்பவர்களை மீண்டும் அக்காமடேஷன் ஆபீஸ் வரச்சொல்லி அலைக்கழிப்பது; அங்கே எப்போது போனாலும் சர்வர் டவுன் எனக் காத்திருக்க வைப்பது; நீண்ட நேரம் கழித்து, நம்மிடம் உள்ள ஆன்லைன் ரசீதில் என்ன தகவல் இருக்கிறதோ, அதே விஷயத்தை பிரின்டிங் செய்த இன்னோர் ரசீதைக் கொடுப்பது; இதற்கு எதற்கு இரண்டு ரசீது என்று புரியவில்லை!

வரும் பக்தர்கள் மீது எந்த அக்கறையும், மனிதநேயமும் துளியும் இல்லாமல் நடந்து கொள்கிறது தேவஸ்வம் போர்டு. பிரசிடன்ட் திரு. பிரஷாந்த், அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பிஜூ நாத் ஆகியோருக்கு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள வீடியோவிற்கு போஸ் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது!

ALSO READ:சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அனைவரும் சமம் என்று கம்யூனிஸம் பேசும் கேரள அரசாங்கம், இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பதன் அரசியல் புரியாத புதிராகவே இருக்கிறது! போகிற போக்கைப் பார்த்தால், தமிழக இந்து சமய அறநிலையத்துறையை மிஞ்சி விடும் போலிருக்கிறது திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு!

இவை அனைத்தையும் குத்துக்காலிட்டு அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஐயப்ப ஸ்வாமி என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்போம் என்றவாறு பக்தர்கள் குமுறியபடி செல்கின்றனர்.

இந்த நிலையில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடித்து திரும்பிச் செல்ல பக்தர்கள் படாத பாடு பட்டனர். பம்பையில் இருந்து பத்தனம்திட்டா, புனலூர் வரையிலும், பம்பை, எரிமேலி, குமுளி தளத்திலும் வாகனங்கள் அளவுக்கு அதிகமாகச் சென்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கெல்லாம் தீர்வு காண, கேரளா போக்குவரத்துத் துறையும் திருமானூர் தேவசம் போடும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

சபரிமலையில் மகரஜோதி உலா முடிந்தும் தற்போது ஜனவரி 19 வரை பக்தர்கள் ஐயப்பனை சேவிக்கலாம் என்பதால், பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் மிக அதிக அளவில் வருகின்றது. தினமும் ஒரு லட்சத்திற்குக் குறையாத பக்தர்கள் தற்போது வந்து செல்கின்றனர். ஜனவரி 15 முதல் பிரசித்தி பெற்ற மகரஜோதி படி பூஜை விழா நடந்து வருகிறது.

பகலில் நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம் உட்பட நிறுத்தி வைக்கப்பட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. இந்த பூஜை கால வழிபாடுகளை காணவும், இரவு நடைபெறும் படி பூஜையை காணவும் பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, உணவு வசதி போன்ற அனைத்து வசதிகளையும் திருவாங்கூர் தேவசம் போர்டு தேவையான அளவு செய்து தர இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும்!

ALSO READ:சபரிமலை மகரஜோதி; ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்!

இந்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் மகரஜோதி விழா முடிந்து சபரிமலை கோவில் வரும் ஜனவரி 20 காலை வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் வரும் ஜனவரி 18 வரை நேயபிஷேகம் செய்யலாம். ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள், படி பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும். 19ஆம் தேதி ஐயப்பனுக்கு எந்த பூஜை வழிபாடும் நடைபெறாது. ஆனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். அன்று இரவுடன் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும்.

ஜனவரி 20ஆம் தேதி காலை பந்தள மன்னர் மட்டும் ஐயனை தரிசனம் செய்வார். அவர் தரிசனம் செய்ததும் காலை கோவில் நடை அடைக்கப்படும். பின்,சபரிமலை கோவில் சாவி சபரிமலை பந்தள மன்னர் பிரதிநிதியிடம் வழங்கப்படும். அவர் வழக்கம்போல் அடுத்து வரும் மாசி மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்க சாவியை மேல் சாந்தியிடம் ஒப்படைத்து, தங்க திருவாபரணங்களுடன் பந்தளத்திற்கு திரும்பிச் செல்வார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari